சூ. 281 :கிழக்கிடு பொருளொ டைந்து மாகும் 
(5)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :உவமங்   கூறுதற்கு     நிலைக்களமென      மேற்கூறிய
நான்குமேயன்றிக் கிழக்கிடு பொருளொடு  கூடி   ஐந்தாக   வருதலுமாகும்
எனக் கூறுவர் புலவர்.
 

கிழக்கிடுதல்  =  தாழ்வுறல்.  இதனைக்  ‘’கிளைஇய  குரலே   கிழக்கு
வீழ்ந்தனவே’’ (குறு-337) என்பதனான் அறிக. இதனான் தாழ்ந்த பொருளும்
உவமமாகக்   கூறுதற்குரிய   நிலைக்களனாக வருமென்பதாயிற்று. ஈண்டுப்
பொருளென்றது பண்பினைச்   சுட்டி   நின்றது.   எனவே   மேற்கூறிய

நான்கும்   உயர்வு   கருதி   நிற்கும்   என்பது புலனாம்.
 

எ - டு :

"அரவுநுங்கு மதியின் நுதல்ஒளி கரப்ப" எனவும்

"உள்ளூதாவியின் பைப்பய நுணுகி" எனவும் வரும்.

 

உவமிக்கப்படும்  பொருட்கண்   கிடக்கும்  இவ் ஐவகைப் பண்புகளும்
உவமங்  கூறுதற்கு நிலைக்களமாதல் போலச்  சுவையுணர்வுகளும்  உவமந்
தோன்றுதற்குக்  காரணமாக  அமைதலான் எண்வகை  மெய்ப்பாட்டிற்குரிய
சுவைகளும் உவமங்கூறற்கு நிலைக்களமாதலைப் பின்னர்க் கூறுவார்.