சூ. 302 : | கிழவி சொல்லின் அவளறி கிளவி |
(26) |
க - து: | இச்சூத்திர முதலாக எட்டுச் சூத்திரங்கள் அகஒழுக்கத்தின்கண் உவமப்போலி கூறுதற்குரிய மாந்தரையும் அவர் கூறும் முறைமையும் பற்றியனவாம். இச்சூத்திரம் தலைவி உவமப்போலி கூறுமாறு இதுவென்கின்றது. உவமப்போலி என்பது அதிகாரத்தான் வந்தது. |
பொருள் :உவமப்போலியைத் தலைவி கூறுமாயின் அஃது அவள் அறிந்த பொருள்பற்றிவரும். ‘கிளவி’ என்றது பொருளை. |
எ-டு : | ஒன்றேனல்லேன் ஒன்றுவென் [குறுந்] என்னும் செய்யுளுள் |
| "பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை |
| குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் |
| நின்று கொய மலரும்" |
என்னும் உள்ளுறைக்கிளவி தலைவி நாடொறும் படப்பையுள் காணும் பொருளாதலின் அஃது அவளறி கிளவியாதல் காணலாம். |
‘’பொய்கைப்பள்ளி புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன்’’ [ஐங்-62] என்பதும் அவளறிந்த கிளவியே யாம். "தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு வெண்பூம் பொய்கைத்தவனூர்" [ஐங்-41] என்பதனுள் வரும் கருப்பொருள் அவள் கேட்டறிந்து கொண்டவையாதலின் அவளறிகிளவியேயாம். |
இவ்வாறு வருவனவற்றைத் தோழி கூற்றெனக் கருதுவார் பேராசிரியர். அதற்கு அவர் கூறுங்காரணம் பொருந்தாமை யறியலாம். |