இதன்கண் தலைவி அருள் நோக்குடையவள் என்பதை ஏனையுவமத்தாற் சுட்டிக் கூறி அவள் சுற்றத்தொடு விருந்தினரைப் பேணும் இயல்பினள் என்னும் உள்ளுறையைத் தன் அறிவுடைமை தோன்றக் கிளத்தியவாறு கண்டுகொள்க. |
கருங்கோட் டெருமைச் செங்கண் புனிற்றாக் |
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் |
நுந்தை நும்மூர் வருதும் |
ஒண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே |
(ஐங்-92) |
இதன்கண், நுந்தை பகைவர்க்கு அச்சந்தரும் வலியினனாயினும் நின்பாற் பேரன்பினனாதலின் நீ வேட்டதை நல்கும் என்னும் உள்ளுறையைக் ‘கருங்கோட்டெருமை ............ மடுக்கும்’ என்பதனாற் கூறித் தான் வரைவு வேண்டித் தன் தமரைச் செலுத்துங் கருத்தினனாதலைத் தலைவி உணரும் வண்ணம் தன் உரனுடைமை தோன்றத் தலைவன் கிளத்தியவாறு கண்டு கொள்க. |
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக் |
கருந்தா ளெருமைக் கன்று வெரூஉம் |
பொய்கை யூரன் மகளிவள் |
பொய்கைப் பூவின் நறுந்தண் ணியளே" |
(ஐங்-97) |
இதன்கண் தலைவன் தனக்கு அவையோர் அணிவித்த தோள்மாலையைப் பிறளொருத்தி அணிவித்ததாகக் கருதி மருளும் பேதைமையுடையாள் தலைவி என்னும் உள்ளுறை கூறித் தலைவி அங்ஙனம் கருதி வெருவினும் தனது தாயாற் பயன்கொள்ளுதலைத் தவிராத கன்றுபோல இன்புறும் அவளது இயல்பினைத் தன் உரனுடைமை தோன்றப் ‘பொய்கைப் பூவின் நறுந்தண் ணியளே’ எனப்புலப்படுத்தியமை கண்டு கொள்க. பிறவு மன்ன. |