சூ. 307 : | கிழவோட் குவமம் ஈரிடத் துரித்தே |
(31) |
க - து : | அகத்திணைக்குரிய மாந்தர் உள்ளுறை கூறும்முறைமையும் ஆண்டுத் தோன்றும் பொருளும் பற்றி மேலே கூறினார்.இனி, அவர்தாம் உள்ளுறை கூறும் இடம் பற்றிய மரபு கூறுவாராய் இச்சூத்திரத்தான் தலைவிக்குரிய மரபு கூறுகின்றார். |
பொருள் :உள்ளுறை உவமம் தலைவிக்கு இரண்டு இடங்களிற் கூறுதற்கு உரியதாகிவரும். அவ் இரண்டிடமாவன : தோழியிடமும் தலைவனிடமுமாம். பிறரிடமாகத் தலைவி உள்ளுறை கூறப்பெறாள் என்றவாறு. |
தலைவி தோழியின்பாலும் தலைவன்பாலும் கூறியதற்கு எடுத்துக்காட்டு மேற்காட்டிய செய்யுளுள்ளும் தொகைப் பாக்களுள்ளும் கண்டு கொள்க. |
இனி. ஈரிடம் என்பதற்கு இளம்பூரணர் இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் என்பார். அவை ஏனையோர் கூறும் உள்ளுறைக்கும் பொதுவாகலானும் மேல்வரும் சூத்திர விதிகளொடு இயையாமையானும் அவர் கருத்துப் பொருந்தாமை யறியலாம். |
இனி. பேராசிரியர் ஈரிடமாவன மருதமும் நெய்தலும் என்பார். உள்ளுறையுவமம் என்பது அகத்திணை மாந்தர் தம் உள்ளக்கருத்தினை முன்னத்தாற் புலப்படுத்துவதோர் இலக்கண நெறியாதலின் அதற்கு நிலங்களை உரிமை செய்து. |
கூறல் சாலாமையானும், சாலுமேல் பெருவரவிற்றாய குறிஞ்சி நிலத்தைக் கூட்டி மூன்றிடத்துரித்தே எனக் கூறாமை குன்றக் கூறலாகலானும், இனிச், |
‘சென்ற நாட்ட’ (குறு-183) என்னும் முல்லைத்திணைப் பாவினுள் "புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை மென்மயில் எருத்திற் றோன்றும், புன்புல வைப்பு" என்பது பருவமல்லாதது பருவம் போல நம்மை மயக்கா நின்றது எனத் தலைவி உள்ளுறை கூறியதாகக் கொள்ளற்கும் ‘மட்டம் பெய்த’ (குறு-193) என்னும் முல்லைத்திணைப்பாடலுள் "இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையின் கறங்கும் நாடன்" |
என்பது அறப்புறங்காவல் காரணமாகப் பிரிந்த தலைவனது பிரிவைத் தோழி மாறுபடக் கருதினாள் எனத் தலைவி உள்ளுறையமையக் கூறினாள் எனக் கொள்ளற்கும் அம்மவாழிதோழி பன்னாள் (அகம்-249) என்னும் பாலைத்திணைச் செய்யுளின்கண் |
மழவர் நாகா வீழ்த்துத் திற்றி தின்ற |
புலவுக்களந் துழைஇய துகள்வாய்க் கோடை |
நீள்வரைச் சிலம்பின் இறைவேட் டெழுந்த |
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து |
வேறுவேறு கவலைய ஆறுபரிந் தலறி |
உழைமான் இனநிரை யோடும் |
கழைமாய் பிறங்கல் மலை ..............."என்பது |
அம்பற் பெண்டிர் பிறர் பழியாயவற்றையே ஆராய்ந்து தம்பாற் கொள்ளுகின்றனர் என்றும், தலைவனானாகிய வேறுபாட்டினைத் தெய்வத்தானாயது என அன்னை அஞ்சுகின்றாள் என்றும், உள்ளுறை தோன்றத் தலைவி கூறினாளாகக் கொள்ளற்கும் ஏற்பச் சான்றோர் செய்யுட்கள் வருதலானும் அவர் கருத்துப் பொருந்தாமையறியலாம். |