சூ. 263 : | கூழை விரித்தல் காதொன்று களைதல் |
| ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு |
| ஊழி நான்கே இரண்டென மொழிப |
(14) |
க - து : | கூழைவிரித்தல் முதலிய நான்கும் இரண்டாங்கூறு என்கின்றது. |
பொருள் :கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல் உடைபெயர்த்துடுத்தல் ஆகிய முறைமையுடைய நான்கும் இரண்டாங்கூறு என மொழிவர் ஆசிரியர். |
1. கூழை விரித்தலாவது :கண்கூட முடித்த கனங்குழல் உள்ளத்தின் கண் நேர்ந்த சிதைவான் நெகிழ்ந்தமையின் அதனைச் செம்மையுறுத்தற் பொருட்டு விரித்தல். |
இது செயன்மையாயினும் காதற்குறிப் புடையமையான் மெய்ப்பாட்டிற்குப் பொருளாயமைந்ததென அறிக. பின்வரும் செயற்பாடுகளுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். இதற்குப் பேராசிரியர் வலிந்து கூறும் விளக்கம் நூல்நெறிக்கு ஏலாமையை ஓர்ந்து கொள்க. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. |
2. காதொன்று களைதலாவது :காதணியாகிய தோடு செவித்துளையில் ஒன்ற நிறுத்துவதாகலின் உள்ளத்து நேர்ந்த சிதைவினான் மேனி மெலிந்தமை போன்ற உணர்வு காரணமாக முன்னர் விரித்த குழலை முடிப்பவள் ஆங்கே காதணிகள் தாம்நெகிழ்ந்து வீழாமுன் அவற்றை நன்கு பொருத்துதற்காகக் களைந்து கொள்ளுதல். காதொன்று-காதணி, தொடுத்தல் தொடியாயினாற்போல ஒன்றுதல் ஒன்று என நின்றது. இதனைத் தொழிலாகு பெயர் என்ப. இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |
3. ஊழணி தைவரலாவது :மங்கல மகளிர்க்குரிய அணிகளாகிய வளை தொடி விரற்செறி முதலியவை தன்மேனி மெலிவானே நெகிழ்வன போலக்கருதும் உணர்வான் அவற்றைச் செறிக்கும் முயற்சியான் தைவருதல். மங்கல மகளிர்க்கென வகுத்துக் கொள்ளப் பெற்றமையான் வளை முதலாயவற்றை ஊழணி என்றார். ஊழ்-நியதி. இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |
4. உடைபெயர்த்துடுத்தலாவது :செறித்துப் பிணிக்காத மேலாடை, இடைசூழ் மேகலை முதலியவற்றைத் திருந்த உடுத்தல். இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் காண்க. இவை நான்கும் இம்முறையே நிகழ்தலான் ஊழி நான்கே என்றார். ஊழ் - முறைமை. |
புகுமுகம் புரிதல் முதலாகிய இவ்எட்டும் களவியலிற் கூறிய வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல் என்பவற்றிற்கும், நன்னயமுரைத்தல் நகைநனியுறாஅ, அந்நிலையறிதல், மெலிவு விளக்குறுத்தல் என்பவற்றிற்கும், மெய்தொட்டுப்பயிறல், பொய்பாராட்டல், மறைந்தவற்காண்டல் முதலியவற்றிற்கும் உரியவாக நிகழும் மெய்ப்பாட்டுப் பொருள்களாக அமையும். இவை நான்கும் வந்த செய்யுளாகப் பேராசிரியர் காட்டும் மேற்கோள். |
விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன் |
கண்ணின் நோக்கிய தல்லது தண்ணென |
உரைத்தலு மில்லை மாதோ அவனே |
வரைப்பாற் கடவுளு மல்லன் அதற்கே |
ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ |
நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் |
துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே |
நீயறி குவையதன் முதலே |
யாதோ தோழி யதுகூ றுமாறே. |
என்பதாகும். |
இதுவும் உரைக்கேற்ப யாத்த பாடலாகும். |