சூ. 145 : | கொடுப்போ ரின்றியும் கரணம் உண்டே |
| புணர்ந்துடன் போகிய காலை யான |
(2) |
க - து : | மேற்கூறிய மணவினை பற்றியதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : தலைவியின் தமர் வரைஉடம்படாதவழி நிகழும் உடன்போக்கின்கண் கொடைக்குரிய மரபினராய்க் கொடுப்போர் இல்லாமலும் கற்புக்கடம் பூணுதலாகிய கரணம் நடைபெறுவது உண்டு. |
ஆண்டுத் தலைவன் தமரே கரணம் நிகழ்த்துவர். அதனான் கற்பொழுக்கத்திற்குக் கரணம் இன்றியமையாத தென்பதும், கரணமொடு புணர்த்தலை மக்கள் மணவாவழி அவர்தாம் கூடி வாழினும் அஃது இல்லறமாகாது என்பதும் உணர்த்தியவாறாம். |
"வெளிப்படை தானே கற்பினொடொப்பினும் .... வரையாது பிரிதல் இல்லை" (கள - 51) என்றதும் அக்கருத்தானே என்பது புலப்படும். |
எ - டு : | பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு |
| தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய |
| நாலூர் கோசர் நன்மொழி போல |
| வாயா கின்றே தோழி ஆய்கழற் |
| செயலை வெள்வேல் விடலையொடு |
| தொகுவளை முன்கை மடந்தை நட்பே. |
| (குறு-15) |
இதன்கண் விடலையொடு மடந்தை நட்பு வாயாகின்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறுதலானும்-உவமத்தின்கண் பறை படப் பணிலம் ஆர்ப்ப என்று கூறிய குறிப்பானும் கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்து வதுவை கூடினமை புலனாகும். |
‘அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோட் குறுமகள்’ (அகம்- 195) என்னும் நெடுந்தொகையுள் எம்மனை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ? என நற்றாய் கூறுதலான் உடன்போக்கின்கண தங்கிய சிற்றூர் மக்கள் கரணம் செய்வித்தமை குறிப்பான் அறிக. |