சூ. 117 : | களவல ராயினும் காமம்மெய்ப் படுப்பினும் |
| அளவுமிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும் |
| கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் |
| ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் |
| ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் |
| காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் |
| தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் |
| போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் |
| கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் |
| பிரிவின் எச்சத்தும் மகள்நெஞ்சு வலிப்பினும் |
| இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் |
| இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு |
| அன்னவை பிறவும் செவிலி மேன (25) |
க - து : | களவின்கண் செவிலி தானே கூறுவனவாயும் தலைவியும் தோழியும் கொண்டெடுத்துக் கூறுவனவாயும் வரும் செவிலிக்குரிய கூற்று வகையாமாறு கூறுகின்றது. |
பொருள்:1. களவு அலராயினும் என்பது : தலைவியது களவொழுக்கம் அயலார்க்குப் புலனாய் அலர் தூற்றப்படுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | பாவடி யுரல பகுவாய் வள்ளை |
| ஏதில் மாக்கள் நுவல்தலும் நுவல்ப |
| அழிவ தெவன்கொல்இப் பேதை யூர்க்கே |
| பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் |
| கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய |
| நல்லியற் பாவை யன்னவென் |
| மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே |
| (குறு-89) |
இது செவிலி தானே கூறியது. |
| அம்ம வாழி தோழி நென்னல் |
| ஓங்குதிரை வெண்மணல் உடைக்குந் துறைவற்கு |
| ஊரார் பெண்டென மொழிய என்னை |
| அதுகேட்டு அன்னாய், என்றனள் அன்னை |
| பைபைய எம்மை என்றனென் யானே |
| (ஐங்-113) |
இது செவிலிகூற்றைத் தலைவி கொண்டு கூறியது. |
2) காமம் மெய்ப்படுப்பினும் என்பது : தலைவி மறைத்தொழுகினும் கூட்டத்தான் விளைந்த பொலிவு அவளது மெய்யின்கண் விளங்கக் காணுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | மணியிற் றிகழ்தரும் நூல்போல் மடந்தை |
| அணியிற் றிகழ்வதொன் றுண்டு |
| (குறள்-1273) |
இது செவிலிதானே கூறியது. |
3. அளவுமிகத் தோன்றினும் என்பது : தலைவியது தோற்றமும் செய்கையும் பெதும்பைப் பருவத்து இயல்பினைக் கடந்து பெண்மைத் தன்மை மிக்குக் காணப்படுதற்கண்ணும் என்றவாறு. |
அஃதாவது கண்ணும் முலையும் தோளும் கதிர்ப்புற்று விளங்குதலும், பேச்சும் விளையாட்டும் அருகிக் காணப்படுதலுமாம். |
எ - டு : | கண்ணிறைந்த காரிகை காம்பேர்தொட் பேதைக்குப் |
| பெண்ணிறைந்த நீர்மை பெரிது. |
| (குறள்-1272) |
4) தலைப்பெய்து காணினும் என்பது : களத்தை நோக்கி வந்த தலைவனைத் தற்செயலாக எதிர்பட்டுக் காண நேரினும் குறியிடத்துச் சென்று மீளும் தலைவியை அவ்வாறே காண நேரினும் அதுபற்றி எண்ணுமிடத்தும் என்றவாறு. தலைப்பெய்தல் = ஓரிடத்து எதிர்ப்படுதல். |
எ - டு : | இரும்புலி தொலைத்த (அகம் - 272) |
| என்னும் அகப்பாட்டினுள் |
| குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் |
| மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு |
| முருகென உணர்ந்து முகமன் கூறி |
| உருவச் செந்தினை நீரொடு தூஉய் |
| நெடுவேட் பரவும் அன்னை" எனவும் |
உருமுரறு கருவிய (அகம்-158) என்னும் அகப்பாட்டினுள் |
| "மிடையூர் பிழியக் கண்டனென் இவளென |
| அலையல் வாழிவேண் டன்னை" |
எனவும் தோழி கொண்டுகூறினமை காண்க. |
5. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது: கட்டுக் கண்டதனானும் கழங்கிட்டுப் பார்த்ததனானும் தலைவியது வேறுபாடு வேலனான் எய்தியது எனத் தானும் நற்றாயும் ஒன்றுபட்ட கருத்தானே வெறியாட்டெடுத்தலைச் செய்யும் செயலின் கண்ணும் என்றவாறு. |
‘தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே’ என மேற்கூறலான் இருவர் என்றது செவிலியும் நற்றாயும் என்பது போதரும். |
எ - டு : | பெய்ம்மணல் முற்றங் கவின்பெற இயற்றி |
| மலைவான் கோட்ட சினைஇய வேலன் |
| கழங்கினான் அறிகுவ தென்றால் |
| நன்றா லம்ம நின்றவிவள் நலனே |
| (ஐங்-248) |
இது வேலன் கழங்குபார்த்தமை கூறியது. |
| அறியா மையின் வெறியென மயங்கி |
| அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனான் |
| எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் |
| ஆய்மலர் உண்கண் பசப்பச் |
| சேய்மலை நாடன் செய்த நோயே |
| (ஐங்-242) |
இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. "அணங்குடை நெடுவரை" என்னும் அகப்பாட்டினுள் (22) கட்டுப் பார்த்தல் கூறிற்று. கண்டு கொள்க. |
6) ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் என்பது : அங்ஙனம் அவர் வெறியாட்டெடுத்தலை மேற்கொண்டவழி அதற்கு (தோழியான்) இடையூறு நேர்ந்த விடத்தும் என்றவாறு. |
| முருகயர்ந்து வந்த முதுவாய் வேல |
| சினவல் ஓம்புமதி வினவது உடையேன் |
| பல்வேறு உருவின் சில்லவிழ் மடையொடு |
| சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி |
| வணங்கினை கொடுத்தி யாயின், அணங்கிய |
| விண்தோய் மாமலைச் சிலம்பன் |
| ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே |
| (குறு-362) |
என்றாற் போலத் தோழி வெறி விலக்குதலை அழிவுதலை வருதல் என்றார். செவிலி கூற்று வந்துழிக் கண்டுகொள்க. |
7) காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் என்பது : தலைவி தன்னொடு உடன் துயிலுங்கால் அவள் கனவின்கண் அரற்றுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | நெடுவே லேந்தி நீயெமக்கு யாஅர் |
| தொடுதல் ஓம்பென அரற்றலும் அரற்றும் |
| கடவுள் வேங்கைக் காந்தளும் மலைந்த |
| தொடலைக் கண்ணி பரியலும் என்னும் |
| பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப் |
| பூம்பொறிக் கழற்கால் ஆஅய் குறைத்துக் |
| குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச் |
| சிறுதேன் கலந்த அம்மெல் லாகம் |
| வாழியெம் மகளை உரைமதி இம்மலைத் |
| தேம்பொதி கிளவியென் பேதை |
| யாங்கா டினளோ நின்னொடு பகலே |
| (நச்-மேற்) |
இதன்கண் அரற்றலும் எனத் தலைவி கனவின்கண் அரற்றியதும் அது பற்றித் தோழியொடு கூற்று நிகழ்த்தியவாறும் கண்டு கொள்க. |
8) தோழியை வினவலும் என்பது : களவு அலராயின வழியும் அதன் பின்னும் தானே கூறும் கூற்றொடு வேண்டுமிடத்துத் தோழியிடத்து இஃது எற்றினானாயிற்று என வினவுதற் கண்ணும் என்றவாறு. இச்சூத்திரத்தான் விதந்து கூறிய கூற்றுக்களையன்றிப் பிறவாறு கூறும் செவிலி கூற்றெல்லாம் தோழியிடமாக நிகழ்தலின் அவற்றை எல்லாம் அடக்கித் "தோழியை வினவலும்" என்றார். அதனான் அதுவும் ஒரு கிளவியாகத் தொகை பெறுதலாயிற்றென்க. |
எ - டு : | "ஓங்குமலை நாட ஒழிக நின்வாய்மை |
| காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி |
| அறுபகை பேணாது இரவின் வந்திவள் |
| பொறிகிளர் ஆகம் புல்லா தோள்சேர்பு |
| அறுகாற் பறவை அளவில மொய்த்தலின் |
| கண் கோளாக நோக்கிப் பண்டும் |
| இனையை யோஎன வினவினள் யாயே" |
| (நற்-55) |
எனச் செவிலி வினாயமையைத் தோழி கொண்டு கூறியமை கண்டு கொள்க. |
9) தெய்வம் வாழ்த்தலும் என்பது : தலைவியைக் களவின்கண் பெற்ற தலைவன் வரைந்து கற்பொழுக்கத்தினைமேவி |
நலம் பயத்தலை விரும்பி அதுகூடுதற் பொருட்டுத் தெய்வத்தைப் பராவி வாழ்த்துமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | பெருமலைச் சிலம்பின்; என்னும் அகப்பாட்டினுள் | (282) |
| "வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
| இன்றீம் பலவின் ஏர்கெழு செல்வத்து |
| எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர்வாய் |
| அம்பல் ஊரும் அவனொடு மொழியும் |
| சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி |
| யாயும் அவனே என்னும் யாமும் |
| வல்லே கவருக வரைந்த நாள்என |
| நல்லிறை மெல்விரல் கூப்பி |
| இல்லுறை கடவுட்கு ஒக்குதும் பலியே" |
எனப் பராவியவாறு கண்டுகொள்க. |
10) போக்குடன் கழிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் என்பது : தலைவனொடு தலைவி உடன்போக்குற்றமை யறிந்து தோழியின் கருத்தொடு தானும் ஒன்றுபட்டுத் தலைவி மேற்கொண்ட கற்பினது ஆக்கத்தின்கண் உவப்புற்று நிற்குமிடத்தும் என்றவாறு. தலைவன் உடன்போக்குக் கற்பிற்கு ஆக்கமாதலின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் என்றார். |
எ - டு : | பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு |
| தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய |
| நாலுர்க் கோசர் நன்மொழி போல |
| வாயா கின்றே தோழி ஆய்கழல் |
| சேயிலை வெள்வேல் விடலையொடு |
| தொகுவளை முன்கை மடந்தை நட்பே |
| (குறு-15) |
நட்பு வாயாகின்று எனத் தலைவியின் கற்பினாக்கங் கூறிச் செவிலி உவந்தவாறு கண்டு கொள்க. |
11) பிரிவின் எச்சத்தும் என்பது : தலைவி உடன் பாக்குற்றவழித் தேடிப் பின் செல்லுதலைத் தவிர்ந்து வருந்துமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று |
| காடுபடு தீயின் கனலியர் மாதோ |
| நல்வினை நெடுநகர்க் கல்லெனக் கலங்க |
| பூப்புரை உண்கண் மடவரற் |
| போக்கிப் புணர்த்த அறனில் பாலே |
| (ஐங்-376) |
12) மகள் நெஞ்சுவலிப்பினும் என்பது : தலைவி தலைவன்வழி ஒழுகற்கு அவள் உள்ளம் உறுதி பூண்டுள்ள நிலையினை உணர்ந்தவிடத்தும் என்றவாறு. (வலித்தல் = திண்ணிதாதல் - உறுதியுறுதல்) |
எ - டு : | தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் |
| இனிதாம் கொல்லோ தனக்கே பனிவரை |
| இனக்களிறு வழங்கும் சோலை |
| வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே |
| (ஐங்-379) |
13. இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் என்பது : தலைவன் தலைவியது குடிமரபு முதலாய பொருள்கள் அமைந்துள்ள இயல்பினைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
பொருள் என்றது செல்வம், சீர்த்தி, குணம், தொழில் முதலியவற்றை. அவை ஒத்துள்ள வழி உவப்பும், முரண்பட்ட வழிக் கலக்கமும் எய்துதலின் கூற்று நிகழ்த்தற்கு அவை காரணமாயின என்க. |
எ - டு : "காமர் கடும்புனல்" என்னும் குறிஞ்சிக்கலியுள் (39) இருவர்தம் குடிப்பிறப்பு முதலாயவை ஒத்துள்ளமை கூறி அறத்தொடுநின்றமை கண்டு கொள்க. |
இன்னவகையிற் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவும் செவிலிமேன என்பது : இவ்வாறு வகைப்பட்டுவரும் பதின்மூன்று கிளவிகளும் அவைபோல்வனவாக வரும்பிற கிளவிகளும் செவிலியின் பாலவாம் என்றவாறு. அன்னபிற என்றவற்றுள் சில வருமாறு. |
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் (அகம். 122-4) சிறுகிளிகடிதல் தேற்றாள் இவள் (அகம். 28-12) எனவரும். |