பொருளதிகாரம் |
நான்காவது கற்பியல்
|
பாயிரம் : ‘வெளிப்பட வரைதல்’ எனக் களவியலுட் கூறிய வரைதலொடு நிகழும் கற்பொழுக்கமாகிய கைகோள் பற்றிய இலக்கண மரபுகளை விரித்துக் கூறலின் இது கற்பியல் எனப் பெயர்பெற்றது. அஃதாவது, |
| மறைவெளிப் படுத்தலும் தமரிற் பெறுதலும் |
| இவைமுத லாகிய இயல்நெறி திரியாது |
| மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் |
| பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே |
(செய்-179) |
எனச் செய்யுளியலுட் கூறப்பெற்ற மரபுகளை விரித்துக்கூறும் படலம் என்பதாம். |
தலைவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் களவிற்கும் தலைவியை முதன்மையாக வைத்துக் கூறுதல் கற்பிற்கு உரிய மரபாகும். அம்முறைமையான் குல மகளிர்க்குரிய பெருங்குணமாகிய கற்பு மனையறத்திற்கு அடிப்படையாகலின் வரைவொடு நிகழும் இல்லற ஒழுக்கம் கற்பொழுக்கம் எனப்பட்டது. |
கற்பாவது, ‘உயிரினும் சிறந்ததாகக் குறிக்கொண்டொழுகும் குல மகளிரது மனத்திண்மையாம். இதனைப் ‘’பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்’’ எனவரும் பொய்யா மொழியான் அறியலாகும். கற்பென்னும் தொழிற்பெயர் ஈண்டு ஓர் ஒழுகலாற்றினை உணர்த்தும் பண்புப் பெயராய் மனையற ஒழுக்கமாக முதுபெருங்குரவரான் வகுத்தோதப் பெற்ற நெறியினைக் குறிக்கோளாக ஏற்று அதனின்றும் வழுவாதொழுகும் மனத்திண்மையைக் குறித்து நின்றது. அதனான் அஃது இலக்கணக் குறியீடாயிற்றென்க. அது கொண்டானையே தெய்வமாகக் கொண்டு அவற்கு ஆக்கமும் புகழும் எய்தத் தன் உயிர் முதலியவற்றையும் தந்தொழுகும் செயலார்ந்த தலைவியது பண்பாகும். அத்தகு கற்புடைய மனைவியைப் பேணி அவள் வழி ஒழுகும் ஒழுக்கம் தலைவற்கு அறனாகும். |
|
சூ. 144 : | கற்பெனப் படுவது கரணமொடு புணரக் |
| கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் |
| கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே |
க - து :
| கற்பொழுக்கமாவது கரணத்தொடு புணர்ந்த மங்கல வினையாகிய திருமணத்தை அடிப்படையாக் கொண்டு நிகழ்தலின் அவ்வடிப்படையாகிய திருமண நெறியாவது இதுவென்கின்றது. |
பொருள் : கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது கரணத்தொடு பொருந்தியமைய மகட்கோடற்குரிய முறைமையை உடைய தலைவன் தனக்கொத்த தலைவியைக் கொடுத்தற்குரிய முறைமையினை உடையார் மணஞ்செய்து கொடுப்ப வரைந்து கொள்வதாகும். |
கற்பென்னும் கைகோளின் பெயர் ஈண்டு ஆகுபெயராய் மணவினையைச்சுட்டி நின்றது. கரணமாவது ஒத்த கிழவனும் கிழத்தியும் இல்லறக் கிழமை பூண்டொழுகும் தகவும் உரிமையும் பெற மறைமொழியும் நிறைமொழியுமாகிய மந்திரங்களொடு முதுமொழிகளையும் கூறியும் கூறுவித்தும் பிற மங்கல வினைகளைச் செய்தும் செய்வித்தும் தலைமக்களைக் கூட்டுவிக்கும் நூல்நெறியொடு உலகியல் வழக்கினையும் தேர்ந்துணர்ந்த ஐயர்களான் வகுத்தமைக்கப் பெற்ற முறைமை (விதி) களாம். வதுவைச் சடங்கென்பார் இளம்பூரணர். வேள்விச் சடங்கென்பார் நச்சினார்க்கினியர். |
கொளற்குரி மரபிற்கிழவன் என்றது மெய்ப்பாட்டியலுள் கூறப்பெற்ற ஒத்த கிழவனை. கொடைக்குரி மரபினோர் என்றது இருமுது குரவரையும் அவரில்வழித் தன்னையரும். குரவரும், அந்தணரும், அரசனும் ஆகிய, சான்றோரை. கரணமொடு புணரக் கிழவன் கிழத்தியைக் கொள்ளும் திருமண வினை கற்பொழுக்கத்தின் அடிப்படைச் சிறப்பாதல் நோக்கி அதனையே கற்பென உபசரித்தார் நூலோர் என்க. |
எ - டு : | உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை |
| பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால் |
| தண்பெரும் பந்தல் தருமணல் ஞெமிரி. |
| மனைவிளக் குறுத்து மாலை தொடரி |
| கனையிருள் அகன்ற கவின்பெறு காலை |
| கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் |
| கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென |
| உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் |
| பொதுச்செய் கம்பலை முதுசெம் பெண்டிர் |
| முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர |
| புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று |
| வாலிலை மகளிர் நால்வர் கூடி |
| கற்பினின் வழாஅ நற்பல உதவிப் |
| பெற்றோற் பெட்கும் பிணையை யாகென |
| நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி |
| பல்லிருங் கூந்தல் நெல்லொடு தயங்க |
| வதுவை நன்மணங் கழிந்த பின்றை |
| கல்லென் சும்மையர் ஞெரேர் எனப்புகுந்து |
| பேரிற் கிழத்தி ஆகெனத் தமர்தர |
| ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் |
| கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து |
| ஒடுங்கினள் இடந்த ஓர்புறந் தழீஇ |
| முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப |
| அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின் |
| நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன |
| இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின் |
| செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர |
| அகமலி உவகைய ளாகி முகனிகுத்து |
| ஒய்யென இறைஞ்சி யோளே மாவின் |
| மடங்கொள் மதைஇய நோக்கின் |
| ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே |
(அகம்-86) |
இஃது உள்ளப்புணர்ச்சியான் நிகழ்ந்த களவின்பின் கரணமொடு நிகழ்ந்த வரைவின்பின் பள்ளி யிடத்து நிகழ்ந்ததனைப் பின்னொரு காலத்துத் தலைவி ஊடியஞான்று தோழியை வாயில் வேண்டிய தலைவன் கூற்று. இதன்கண் அவர்தம் குலமரபிற்கேற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுக்கப் பெற்றவாறும் கண்டு கொள்க. |