சூ. 148 : | கரணத்தின் அமைந்து முடிந்த காலை |
| நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் |
| எஞ்சா மகிழ்ச்சி இகந்துவரு பருவத்தும் |
| அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் |
| நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் |
| பெற்ற தேஎத்துப் பெருமையி்ன் நிலைஇக் |
| குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் |
| நாமக் காலத்து உண்டெனத் தோழி |
| ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் |
| அல்லல் தீர ஆர்வமொ டளைஇச் |
| சொல்லுறு பொருளின் கண்ணும், சொல்லென |
| ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது |
| வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென |
| அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் |
| அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் |
| அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும் |
| ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக் |
| களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி |
| அலமர லுள்ளமொடு அளவிய விடத்தும் |
| அந்தரத் தெழுதிய எழுத்தின் மான |
| வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் |
| அழியல் அஞ்சலென்று ஆயிரு பொருளினும் |
| தானவட் பிழைத்த பருவத் தானும் |
| நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் |
| பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் |
| தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் |
| புதல்வர்ப் பயந்த புனிறுதீர் பொழுதின் |
| நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி |
| ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் |
| செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் |
| பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது |
| உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி |
| அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் |
| மெல்லென் சீறடி புல்லிய இரவினும் |
| உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் |
| பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் |
| பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் |
| பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் |
| நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் |
| சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியும் |
| காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் |
| தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் |
| உடன்சேறற் செய்கையொடு அன்னவை பிறவும் |
| மடம்பட வந்த தோழிக் கண்ணும் |
| வேற்றுநாட் டகல்வையின் விழுமத் தானும் |
| மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் |
| அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் |
| பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் |
| காமக் கிழத்தி மனையோள் என்றிவர் |
| ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் |
| சென்ற தேஎத் துழைப்புநனி விளக்கி |
| இன்றிச் சென்ற தன்னிலைக் கிளப்பினும் |
| அருந்தொழில் முடித்த செம்மற் காலை |
| விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் |
| மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் |
| கேளிர் ஒழுக்கத்துப் புணர்ச்சிக் கண்ணும் |
| ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப் |
| பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் |
| எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன |
| (5) |
க - து : | கற்பொழுக்கத்தின்கண் தலைமகனிடத்து நிகழும் கூற்றுவகை இவையென அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. |
பொருள் : 1) கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் என்பது : கரணத்தினான் மணவினை நிகழ்ந்து முற்றிய பின்னர் அதுகாறும் கட்டுண்டிருந்த நெஞ்சத்தனை நீங்கித் தான் வேண்டியாங்குத் தலைவியைக் கூடிய கூட்டத்தின்கண் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
‘தலைவன் கூற்று நிகழும்’ என்பதை மேல் வருவனவற்றோடும் கூட்டிக்கொள்க. தளை என்றது களவின்கண் தன் பெருமைக்கும் தலைவியது நாண் முதலியவற்றிற்கும் இழுக்குநேருங்கொல் எனவும், தம்குடிக்கும் குலத்திற்கும் மாசு நேருங்கொல் எனவும், அலருக்கு அஞ்சிக் கரந்தும் தன் தணியா வேட்கையை நெஞ்சத்து அடக்கியிருந்த நிலையை. அத்தளை வரைதலான் உரிமை பெற்றபின் தானே ` நீங்கி விடுதலின் "அவிழ்ந்த" என்றார். இது கற்பொழுக்கத்தின் முதற் கூட்டமாகலின் தளையவிழ்தலே அதற்குச் சிறப்பாயிற்று. |
எ - டு : | விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் |
| அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் |
| இரண்டும் தூக்கின் சீர்சா லாவே |
| பூப்போல் உண்கண் பொன்போல் மேனி |
| மாண்வரி யல்குற் குறுமகள் |
| தோள்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. |
| (குறு-101) |
எனவரும். |
2) எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் என்பது; தலைவியது செயலும் பண்பும் ஒருகாலைக் கொருகால் சிறந்தோங்கி வருதலை நோக்கி ஒழியாத மகிழ்ச்சி தன்பால் மிக்கு வெளிப்படும் பொழுதின்கண்ணும் என்றவாறு. |
எ - டு : | அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம் |
| செறிதோறும் சேயிழை மாட்டு |
| (குறள்-1110) |
3) அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் என்பது : அங்ஙனம் நிகழும் எஞ்சா மகிழ்ச்சியை இடையீடு படுத்துதற்குரியவாய தனது கடமைகளைக் கருதுதற் கண்ணும் என்றவாறு. |
அவையாவன : ஆட்சிப்பணியும், அவையகத்து ஆற்றும் பணியும் அறப்புறங்காவல் முதலியனவும், விழாநிகழ்த்தும் பொறுப்பு முதலியனவும் அவரவர்க்குரிய இன்றியமையாத கடமைகளுமாம். அவை தமக்குக் கடப்பாடாக அமைந்துள்ளமையின் ‘உரிமை’ என்றும் அவை தலைவியினின்றும் தன்னைப் பிரிப்பனவாதலின் ‘அஞ்சவந்த’ என்றும் கூறினார். எ - டு : வந்துழிக் கண்டுகொள்க. |
இதற்கு அஞ்சும்படியாகத் தலைவி மாட்டுளதாகிய கற்புரிமை என்பார் சிலர். கற்பு குலமகளிர்க்குரிய இயற்கைக் குணமாகலானும் அதுபற்றிய செயல்கள் உவத்தற்குரியனவன்றி அஞ்சத்தக்கன அல்லவாகலானும் அவர்கருத்து ஒவ்வாமையறிக. |
4) நன்னெறிப்படரும் தொன்னலந் பொருளினும் என்பது : நன்னெறிக்கண் செலுத்தும் தொன்மை நலஞ்சான்ற பொருண்மையைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
என்றது : கல்வியிற்பிரிவைக் கருதுதற் கண்ணும் என்றவாறு. பொதுப்படக்கூறியவதனான் பகைதணி வினையாகிய தூது பற்றிய பிரிவைக் கருதுதலும் கொள்க. எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
5) பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத்துரைப்பினும் என்பது : தலைவியையே மனைக் கிழத்தியாகப் பெற்ற விடத்து அவளை அப்பெருமைக்கண் நிறுத்திக் களவின்கண் குற்றஞ் சான்றவையாக நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்குமிடத்தும் என்றவாறு. |
‘குற்றஞ் சான்ற பொருள்’ என்றது ஆற்றதுதீமை யஞ்சாது ஒழுகியமையும் இடையீடுபட்டு வருந்தியமையும் உடன்போக்கின்கண் நிகழ்ந்தவையும் அவை போல்வன பிறவுமாம். |
எ - டு :வந்துழிக் கண்டு கொள்க. |
|
6) நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்தியமருங்கினும் என்பது ; களவின்கண் தலைவன் வருந்தொழிற் கருமை கருதிய காலத்தும்; ஆற்றூறு அஞ்சிய காலத்தும் ஆற்றியிருந்தமைக்குக் காரணமாகியதொரு கடவுள் உண்டு எனக்கூறித் தோழி அத் தெய்வத்தை ஏத்தியவிடத்துத தலைவன் வதுவை நிகழுந்துணையும் அங்ஙனம் காத்து மனையற வாழ்வை நல்கிய அத்தெய்வம் இனியும் காத்தளிக்கும் எனத்தானும ஏத்துதற்கண்ணும் என்றவாறு. |
எ - டு :வந்துழிக் கண்டு கொள்க. |
|
7) அல்லல் தீர ஆர்வமொடளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் என்பது : களவுக் காலத்துத் தலைவி தானுற்ற துயரெல்லாம் நீங்கப் பெருகிய அன்பொடு அளாவித் தலைவி சொல்லும் பொருண்மையிடத்தும் என்றவாறு. |
சொல்லுறு பொருள் என்றது இற்செறிப்புற்றும், அலரஞ்சியும், குறிவழிச் செல்லாத காலத்துத் தலைவன் ஆற்றியிருந்தமையை எடுத்துக் கூறுதலாம். |
எ - டு : | வந்துழிக் கண்டு கொள்க. |
|
8) சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலு பூவும் தொடுதற் கண்ணும் என்பது : சுவைத்தற் கொவ்வாதது ஒன்றைச் சுவைப்பினும் நின்கையாற் தீண்டிய பொருளாயின் எமக்கது வானோரின் அமிழ்தினை ஒக்கும். அதற்குக் காரணம் சொல்வாயாக என, அவளிட்ட அடிசிலையும் தொடுத்த பூவினையும் தீண்டுதற் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | வேம்பின் பைங்காய்என் தோழி தரினே |
| தேம்பூங் கட்டி என்றனிர் |
| (குறு-196) |
இது தலைவன் முன்பு கூறியதனைத் தோழி பிறிதொரு அமையத்தின்கண் கொண்டு கூறியது. |
9) அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் பிறர்திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் என்பது : செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் பக்கத்தும் பண்பால் உயர்ந்த சான்றோரிடத்தும் ஈறில்லாத சிறப்பினையுடைய ஏனைய பிறரிடத்தும் ஒழுகும் முறைமையைத் தான் ஒழுகிக் காட்டிய குறிப்பின்கண்ணும் என்றவாறு. |
அந்தமில் சிறப்பிற் பிறர் என்றது இரு முதுகுரவரையும் முத்தோரையுமாம். பின்னும் பிறர் என்றது கேளிரையும் ஒக்கலையும் விருந்தினரையுமாம். |
எ - டு : | வந்துழிக் கண்டு கொள்க. |
|
10) ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரலுள்ளமொடு அளவிய விடத்தும் என்பது: தான் ஒழுகிக் காட்டியவழி தலைவி ஒழுகுமிடத்துக் களவினுள் இங்ஙனம் கலந்துரையாடற்கு இயலாது நிகழ்ந்த அருமைப் பாட்டினைக் கூறி அன்றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்குமாகச் சுழலும் நெஞ்சத்தொடு உரைக்குமிடத்தும் என்றவாறு. ஒழுக்கத்து என்றது நிகழ்ந்துவரும் கற்பொழுக்கத்தினையாம். அருமை என்றது காலம் அமர்ந்து தன்காதல் நெஞ்சம் புலப்பட உரையாடற்கியலாமல் குறியிடத்துக் காண்டலும் அலரஞ்சி நீங்கலுமாக நிகழ்ந்த நிலைமையை. புலம்பி என்றது புலப்படுத்தி என்றவாறு. |
புலம்பு என்பது தனிமை என்னும் பொருள்தருமிடத்து உரிச் சொல்லாம். ஏக்கத்தானும் இரக்கத்தானும் இளிவரவு தோன்றப் பேசுதல் என்னும் பொருள்தருமிடத்து வினைச் சொல்லாம். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
11) அந்தரத்து எழுதிய எழுத்தின்மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் என்பது : இருமுதுகுரவர் முதலாயினாரையும் தன்னையும் பேணி ஒழுகுமிடத்து அறியாமையான் தலைவி மாட்டு நிகழ்வனவாகிய குறை கருதத்தக்கவை யன்மையான் ஆகாயத்தின்கண் எழுதிய எழுத்து அக்கணமே மறையுமாறு போலத், தோன்றிய சுவடுமின்றிக்கெட அவள் மாட்டு அன்பு செய்தொழுகுதற்கண்ணும் என்றவாறு. |
இதற்கு உரையாசிரியன்மார் கூறும்பொருள் நூலோர் சிறப்பித்துக் கூறும் களவொழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதாகலின் ஒவ்வாமை புலப்படும். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
12) அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் என்பது : பகை முதலாய பிரிவின்கண், வருந்தற்க எனவும் செல்லும் கொடிய வழிகளைக் கருதி அஞ்சற்க எனவும் கூறும் அவ்விரு பொருண்மைக்கண்ணும் என்றவாறு. தலைவி அழிதலும் அஞ்சலும் வெவ்வேறு பொருண்மை பற்றியவையாதலின் ஆயிரு பொருளினும் என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
13) தானவட் பிழைத்த பருவத்தானும் என்பது : தான் குறித்த பருவத்து மீண்டு வாராமல் பிழைபட்டுப் பருவம் நீட்டித்தவிடத்தும் என்றவாறு. தலைவியை வந்தடையாமல் பாசறை முதலியவற்றின்கண் காலந்தாழ்தலின் ‘தானவட் பிழைத்த’ என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
14) நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும் என்பது : பிரிவினைப் பொறுத்துறையும் நோன்மையும் துயர் பிறர் அறியாவண்ணம் மறைத்து மனையறம் ` புரியும் பெருமையும் பொருண்மையுறத் தண்ணளிசெய்து துனி தீரப் பேசுதலின் சிறந்த தோழி முதலிய வாயிலோரது கருத்தொடு பொருந்தி ஊடலைத் தவிர்ந்தொழுகும் தலைவியான் தனக்குண்டாகிய தகவினைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
|
அஃதாவது, தலைவன் தேவர்க்குச் சிறப்பும் பூசனையும் நிகழ்வித்தலும் கலைவல்லாரைப் பேணுதலும் இரவலர்க்கு வழங்கலும் ஆகிய கடப்பாடு பற்றிப் பொழுது இடையிட்டுப் பிரிந்து வந்த காலத்துத் துனியுற்றிருந்த தலைவி வாயிலார் வேண்ட வாயில் நேர்ந்து ஊடல் தவிர்ந்து ஒழுகுமிடத்துத் தலைவனது பெருமை மிகுதலின், மகிழ்ந்து கூற்று நிகழ்த்தும் என்றவாறு. |
அப்பெருமை தலைவியான் வருதலின் "தன்னின் ஆகிய தகுதி" என்றார். பரத்தையர் எள்ளியுரையாதவாறு ஊடல் தவிர்ந்து தலைவனை ஏற்று ஒழுகிய உயர்வு ‘தகுதி’ எனப் பட்டது. |
இக்கிளவிக்குரிய ஒழுகலாறு தலைவி கருவுற்றிருக்கும் காலத்து நிகழ்வதாகும். தலைவி ஊடல் தவிர்ந்து அருளுதற்கு அஃது ஏதுவாகும் என்க. மேல் வரும் கிளவியும் இதனைப் புலப்படுத்தும். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
15) புதல்வற் பயந்த புனிறுநீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும் என்பது : தலைவி புதல்வனை ஈன்ற புனிறு தீர்ந்தகாலை நெய் பூசி நீராடி வாலாமை போக்கி விளங்குமிடத்து அவளைக் குறித்துத் தலைமைப் பாடுடைய மேலோர் பாலும், தேவரைக் கருதியும் செய்யும் பெரிய விழாக்கள் காரணமாக ஈன்றணிமைக் காலத்துப் பிரிந்திருந்த தலைவன் வந்து சேருமிடத்தும் என்றவாறு. |
சிறப்பாவது, புதல்வனை ஏந்தி வாழ்த்தலும், பெயரிடலும், ஐம்படைத் தாலி அணிவித்தலும், அவ்வழித் தேவர்க்குப் பூசனை புரிதலும் இரவலர்க்குப் பரிசில் வழங்கலும் பிறவுமாம். புனிறு = மகவை ஈன்றதனான் உடம்பு எய்திய நொய்ம்மை. |
எ - டு : | வாராய் பாண நகுகம் நேரிழை |
| கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி |
| நெய்யொ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் |
| விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் |
| புதல்வனை ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் |
| திதலை யல்குல் முதுபெண் டாகித் |
| துஞ்சுதி யோமெல் லஞ்சில் ஓதியெனப் |
| பன்மா ணகட்டிற் குவளை யொற்றி |
| உள்ளினென் உள்ளுறை எற்கண்டு மெல்ல |
| முகைநாண் முறுவல் ஒன்றித் |
| தகைமல ருண்கண் கைபுதைத் ததுவே |
| (நற்-370) |
இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது. |
| குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை |
| குடம்நிறை தீம்பால் படூஉம் ஊர |
| புதல்வனை ஈன்றிவள் நெய்யா டினளே |
|
இது புதல்வன் பிறந்தமை காணத் தலைவன் வந்தமையைத் தோழி கூறியது. பிறவும் சான்றோர் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க. |
16) பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடிப் புல்லிய இரவினும் என்பது : தழுவிக்கோடலாகிய பயன் பொருந்துமளவினதாகிய பஞ்சின் மெல்லணையைப் புல்லித் தலைவனைப் புல்லப் பெறாதே வருந்தினளாகிக் கிடந்த தலைவியை அணுகித் தங்குதலைக் கருதி நிறையழிந்த காலத்து அவளது மெத்தென்ற சிறிய பாதங்களை அணைத்து இரந்து நிற்குமிடத்தும் என்றவாறு. |
தலைவி வாலாமையுற்றிருந்த காலத்துத் தான் பிரிந்திருந்து புரிந்த குறையைக் கருதியவழி நிறையழிவு நேர்தல் இயல்பு என்பது விளங்க "நிறையழி பொழுதின்" என்றார். இரவினும் என்றது இரந்து நிற்றற் கண்ணும் என்றவாறு. |
| என்னை நீ செய்யினும் உணர்ந்தீவா ரில்வழி |
| முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் |
| (மருதக்கலி) |
|
எனத்தலைவன் சீறடிப் புல்லி யிரந்தமையைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் கொள்க. |
17) உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் என்பது : அங்ஙனம் இரந்தவிடத்தும் தீராது ஊடலைத் தலைவி மிகுத்தவழி அவளைக்கூடுதல் அருமையுடைத்தாகலின், உணர்த்த உணர்ந்த பிறபிற மகளிரின் வரலாறுகளைக் கூறிப் புலவியை மாற்றுமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | "ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று |
| வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் |
| தண்டா ரகலம் புகும்" எனக்கூறி |
| . . . . . |
| நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் |
| தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் |
| ஆனா விருப்போ டணியயர்பு காமற்கு |
| வேனில் விருந்தெதிர் கொண்டு" |
|
எனத் தலைவிக்குணர்த்தியவாறு : பிறவும் வந்துழிக் கொள்க. |
"பிறபிற பெண்டிரின்" என்றதனான் உணர்ப்புவயின் தீரா ஊடற்காலத்துத் தலைவன் துனியுற்றுக் கூறுதலும், பல்லாறாக ஊடலுணர்த்தலும் பிறவும் இதன்கண் அடக்கிக் கொள்க. |
18) பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் என்பது : தூது முதலாய பிரிவின் கண் குறித்தபருவம் நீட்டித்தவிடத்துத் தனித்தனி வருந்தியிருந்த தலைவியையும் தோழியையும் அவ்வருத்தத்தினின்று நீக்கிய பகுதிக்கண்ணும் என்றவாறு. |
பல்வகையானும் முயன்று தண்ணளி செய்தலின் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும் என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
பின்னர்க் "காமக்கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்" என்பதனான் ஈண்டு இருவர் என்றது தலைவியையும் காமக்கிழத்தியையும் எனினும் ஒக்கும். தோழி தானே செவிலி மகளே என்பதனான் தாயத்தாய்க் கொண்டொழுகும் மரபானே காமக்கிழத்தியாவாள் ஒன்றித் தோன்றும் தோழி எனக் கொள்க. அஃது ஆளும் மன்னரது குடி வழக்காய்ப் பெரும்பான்மையும் நிகழுமென்க. ஆண்டுக் காமக்கிழத்தியை முற்கூறியதும் அவ்வழக்குப் பற்றியே என்க. |
19) நின்று நனிபிரிவின் அஞ்சியபையுளும் என்பது : பகை முதலாயவற்றைக் கருதி நின்று அப்பிரிவுகளான் ஆற்றாது தலைவி என்படுமோ என மிக அஞ்சிய நோவின் கண்ணும் என்றவாறு, நெடுநாள் நேரும் எனக் கருதி உளம் வருந்தலின் அப்பிரிவுத் துன்பத்தைப் பையுள் என்றார்; |
எ - டு : | அன்பும் மடனும் சாயலும் இயல்பும் |
| என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் |
| ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி |
| இன்றே இவண மாகி நாளை |
| புதலிவர் ஆடமை தும்பி குயின்ற |
| அகலா அந்துளை கோடை முகத்தலின் |
| நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல் |
| ஆய்க்குழல் பாணியின் ஐதுவந் திசைக்கும் |
| தேக்கமல் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து |
| யாத்த தூணித் தலைதிறந் தவைபோல் |
| பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர் |
| கழல்துளை முத்தின் செந்நிலத் துதிர |
| மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச் |
| சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை |
| புயல்என ஒலிவரும் தாழிருங் கூந்தல் |
| செறிதொடி முன்கைநம் காதலி |
| அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே |
| (அகம் 225) |
எனவரும். |
20) சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் என்பது = பொருள் முதலிய பிரிவின்கண் செல்வோன் மிகச் சேய்த்தாகச் சென்று அவ்விடத்துத் தலைவியின் நிலைமையை மீண்டும் கருதிய வழியும் என்றவாறு. கையிகந்து சென்று என மாறுக. இஃது இடைச்சுரத்து அழுங்கலாம். |
எ - டு : | உண்ணா மையின் உயங்கிய மருங்கின் |
| ஆடாப் படிவத்து ஆன்றோர் போல |
| வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும் |
| கான யானை கவினழி குன்றம் |
| இரந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த |
| சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி |
| ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு |
| உடைமதி வாழிய நெஞ்சே நிலவென |
| நெய்கனி நெடுவேல் எஃகின் இமைக்கும் |
| மழைமருள் பஃறோல் மாவண் சோழர் |
| கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை |
| இறவொடு வந்து கோதையொடு பெயரும் |
| பெருங்கடல் ஓதம் போல |
| ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே |
| (அக-123) |
இஃது இடைச்சுரத்தழுங்கும் நெஞ்சிற்குக் கூறியது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. |
21) காமத்தின் வலியும் என்பது : காமத்தின் வலிமையைக் கருதியவிடத்தும் என்றவாறு. |
எ - டு : | "ஏஎ இவை ஓருயிர்ப் புள்ளின் இருதலையுள் ஒன்று |
| போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறியென் |
| ஆருயிர் நிற்குமாறியாது" |
| (கலி-89) |
என்னும் மருதக்கலியுள் ஆற்றாமை மிகுதியாற் காமத்தின் வலி கூறியவாறு காண்க. |
22) கைவிடின் அச்சமும் என்பது : பொருளீட்டங் கருதி இருதலைப்புள்ளின் ஓருயிரன்ன தலைவியைக் கைவிட்டுப் பிரியின் அவ்வழி அவள் எய்தும் நிலைமைக்கு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | ‘அளிநிலை பொறாது’ என்னும் அகப்பாட்டினுள் |
| . . . . . . .ஒண்டொடி |
| உழைய மாகவும் இனைவோள் |
| பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே |
| (அகம்-5) |
என அஞ்சியவாறு காண்க. |
23) தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் என்பது : களவுக் காலத்து நின்னைப் பிரியேன் பிரியின் தரியேன் என்ற வாய்மையைப் பிழைத்த நிலையை எண்ணுமிடத்தும் என்றவாறு. |
பருவம் பிழைத்தமை பற்றி முன்பு விதித்தமையான் இது சூள் பிழைத்தமை பற்றியது என்பது போதரும். எ - டு : வந்துழிக்கண்டு கொள்க. |
24) உடன் சேறற் செய்கையொடு அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் என்பது : இவள் நின்பிரிவை ஆற்றாளாதலின் உடனழைத்துச் செல்க எனக்கூறிச்செயற்படுதலொடு அவைபோல்வன பிறவுமாகக் கூறித் தோழி தன்அறியாமை தோன்றவந்த விடத்தும் என்றவாறு. |
உடன் அழைத்துச் செல்க எனக்கூறி உடன்போதற்கு ஆவனபுரிவாளாய் நிற்றலின் "செய்கையொடு" என்றார். அறிவுடையாளாகிய பாங்கி தலைவியின் துயர் ஒன்றையே கருதி எண்ணரும் பாசறை பெண்ணொடு செல்லுதல் முறைமையன்று என்பதை மறந்து கூறினாளாதலின் "மடம் பட வந்த தோழி" என்றார். |
எ - டு : | ‘பாஅல் அஞ்செவி’ என்னும் பாலைக்கலியுள் |
| பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு |
| எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது |
| அந்நாள் கொண்டிறக்கும் இவள்அரும் பெறலுயிரே |
| (கலி-5) |
என்றாங்குக் கூறுதல். |
25) வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் என்பது : நாடிடையிட்ட மொழிபெயர் தேயத்துப் பிரியும் பிரிவிற்கு ஒருப்பட்ட காலை இடும்பை கொள்ளுமிடத்தும் என்றவாறு. |
பகை முதலாய பிரிவினைக் கருதி எய்தும் துன்பம் பற்றி முன்னர் "நின்றநனி பிரிவின் அஞ்சிய பையுளும்" எனக் கூறினமையின் இப்பிரிவு ஓதற்பிரிவென்பது போதரும். பிரிவென வாளா கூறாமல் வேற்று நாட்டு என விதந்தமையானும் அது வலியுறும். |
போவோமோ தவிர்வோமோ எனத் தானே வருந்துதலும், செலவழுங்குதலாக நெஞ்சிற்குக் கூறுதலும், தலைவியை ஐயுற வேண்டா எனக் கூறலும் பிறவுமாக அலக்கணுறுதலின் ‘விழுமம்’ என்றார். |
எ - டு : | உயிரினும் சிறந்த ஓண்பொருள் தருமார் |
| நன்றுபுரி காட்சியர் சென்றனர் அவர்என |
| மனைவலித் தொழியும் மதுகைய ளாதல் |
| நீநற் கறிந்தனை யாயின் நீங்கி |
| மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் |
| கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் |
| கல்நெடுங் கவலைய கானம் நீந்தி |
| அம்மா அரிவை ஒழிய |
| சென்மோ நெஞ்சம் வாரலன் யானே. |
| (அக-245) |
இது நெஞ்சிற்குக் கூறியது. இதன்கண் உயிரினும் சிறந்த ஒண்பொருள் என்றமையானும் நன்றுபுரி காட்சியர் என்றதனானும் இஃது ஓதற் பிரிவென்பதும் கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல்நெடுங்கவலை என்றதனான் நாடு இடையிட்ட மொழி பெயர் தேம் என்பதும் விளங்குதல் காண்க. |
26) மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது : ஓதல் முதலாய பிரிவிற் பிரிந்தவன் மீண்டு வருதற்கு நேர்ந்த வகையின்கண்ணும் என்றவாறு. வரவு வாய்ந்த என்பது வரவாய்ந்த என விகாரப்பட்டு நின்றது. |
எ - டு : | நெடுங்கழை முளிய வேனில் நீடி |
| கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் |
| வெய்ய ஆயின முன்னே, இனியே |
| ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் |
| தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே |
| (ஐங்-322) |
எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க. |
27) அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் என்பது : ஓதல் முதலாய பிரிவின்கண் ஆற்றிய அருஞ்செயல்களிடமாகப் பெருக்கமுற்று எய்திய சிறப்பின்கண்ணும் என்றவாறு. |
அவையாவன : வேற்றுநாட்டு அகல்வயிற் சென்று ஓதியும் உணர்த்தியும் எய்திய ஞானத்தான் இசை பெறுதலும், பகை வென்று தணித்துச் சீர்த்தி பெறுதலும், பணிந்தார் மாட்டுத் திறைபெற்றுயர்தலும் தூதினான் மாண்புறுதலும், பொருள் முற்றி அடைதலும், காவலான் போற்றப் பெறுதலும் பிறவுமாம். |
எ - டு : | "கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும் |
| கேளல் கேளிர் கெழீஇயனர் ஒழுகவும் |
| ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து |
| ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் |
| அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன |
| பெறலரும் நன்கலம் எய்தி நாடும் |
| செயலும் செய்வினை முற்றின மாயின் |
| அரண்பல கடந்த முரண்கொள் தானை |
| வாடா வேம்பின் வழுதி கூடல் |
| நாள்அங் காடி நாறும் நறுநுதல் |
| நீளிருங் கூந்தல் மாஅ யோ ளொடு |
| வரைகுயின் றன்ன வான்றோய் - நெடுநகர் |
| நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை |
| நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து |
| நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப |
| முயங்குகம் சென்மோ நெஞ்சே" |
| (அகம்-93) |
இது வினை முற்றி மீள்வோன் நெஞ்சிற்குக் கூறியது. சிறப்புப் பெற்றுக் கூறியவை வந்தவழிக் கண்டு கொள்க. |
28) பேரிசையூர்திப் பாகர் பாங்கினும் என்பது : சிறப்பொடு மீள்வோன் பெரிய புகழையுடையதாகிய தேரினைச் செலுத்தும் பாகரிடத்தும் என்றவாறு. ‘பாகர்’ எனப் பன்மையாற் கூறினமையின் இளையோர்பாற் கூறுவனவும் கொள்க. |
எ - டு : | "வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும் |
| தம்திறை கொடுத்துத் தமர்ஆயினரே |
| முரண்செறிந் திருந்த தானை இரண்டும் |
| ஒன்றென அறைந்தன பணையே, நின்தேர் |
| முன்னியங் கூர்தி பின்னிலை ஈயாது |
| ஊர்க பாக ஒருவினை கழிய - " |
| (அக-44) |
இது துணைவேந்தன் வினை முற்றி மீளுங்கால் பாகனிடத்துக் கூறியது. |
| "இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென |
| புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் |
| ஏறியது அறிந்தன் றல்லது வந்த |
| ஆறுநனி யறிந்தன்றோ இலனே தாஅய் |
| முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில் |
| கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் |
| மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ |
| இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே |
| வான்வழங் கியற்கை வளி பூட் டினையோ |
| மானுரு வாகநின் மனம்பூட் டினையோ |
| உரைமதி வாழியோ வலவ" |
| (அக-384) |
இது தானைத்தலைவன் மனைவந்திறங்கிப் பாகனொடு கூறியது. பிறவும் சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க. |
29) காமக்கிழத்தி மனையோள் என்றிருவர் ஏமுறுகிளவி சொல்லிய எதிரும் என்பது : தலைவியொடு ஓரில்லத்து உடன் வதியும் காமக்கிழத்தி மகன்றாயாகிய இற்கிழத்தி என்று கூறப்படும் இருவர் சொல்லிய வருத்தமைந்த உரைகளை ஏற்று மறுமொழி கூறுமிடத்தும் என்றவாறு. |
ஏறுமுறுகிளவி என்றது பிரிந்து செல்வுழிச் சுரத்து வருந்தினிர் கொல் எனவும், எம்மை நினைத்திரோ எனவும் பிறவுமாகப் பரிவுற்றுக் கூறுவனவாம். இற்பிறப்புக் காரணமாக மனைவி விரைந்து உரையாளாதலின் காமக்கிழத்தி அவள் கருத்தையும் உள்ளடக்கி முனைந்து கூறும் ஆதலின் காமக்கிழத்தியை முற்கூறினார் என்க. |
எ - டு : | எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை |
| அரிய வாயினும் எளிய வன்றே |
| அவவுறு நெஞ்சம் கவவுநனி விரும்பி |
| கடுமாண் திண்டேர் கடைஇ |
| நெடுமான் நோக்கிநின் உள்ளியாம் வரவே |
| (ஐங்-360) |
இஃது இருவர்க்கும் ஒப்பக் கூறியது. |
"தொடங்கு வினைதவிரா" என்னும் அகப்பாட்டுத் (அக-29) தலைவியிடத்துக் கூறியது. |
30) சென்ற தேஎத்து உழப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது : அங்ஙனப் பரிவுற்றுக் கூறிய இருவர் பாலும் தான் சென்ற நாட்டகத்துத் தனக்கு நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கச் சொல்லித் தலைவியின்றித் தனித்துச் சென்றமையான உற்ற நிலைமையினைக் கிளந்து கூறுமிடத்தும் என்றவாறு. எ-டு: வந்தவழிக் கண்டு கொள்க. |
31) அருந்தொழில் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் என்பது : செயற்கரியவாய வினை களைச் செய்து முடித்தலான் தலைமைத்தன்மை சிறந்த காலத்து விருந்தெதிர் கொண்டு உவத்தற்குரிய நல்லனவற்றைத் தலைவி ஆற்றுதலைக் காண விரும்பியவிடத்தும் என்றவாறு. |
எ - டு : | முரம்புதலை மணந்த நிரம்பா இயவின் |
| ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் |
| களரிப் புளியின் காய்பசி பெயர்ப்ப |
| உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலிர் |
| முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை |
| வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் |
| நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப |
| விருந்தயர் விருப்பினள் வருந்தும் |
| திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே |
| (நற்-374) |
எனவரும். |
32) மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் என்பது : வினை முற்றி மீண்டு வந்து அகம்புகும் தன்னை எதிரேற்கும் மாலை முதலாய மங்கலப் பொருள்களை ஏந்திய பெண்டிரும் வினைபுரியும் மக்களும் கேளிர் ஒப்ப ஒழுகுமிடத்து உள்ளம் மகிழ்தற்கண்ணும் என்றவாறு. |
தலைமக்கள் வேந்தரும் மன்னருமாகிய வழிப் பெண்டிர் என்றது தலைவியின் ஆயத்தாரையும் குற்றேவல் புரிவோரையும் குறிக்கும். மக்கள் என்றது அமைச்சர் முதலாகிய அரசச் சுற்றத்தினைக் குறிக்கும். வணிகரும், வேளிருமாயின் முறையே குற்றேவல் மகளிரையும் துணை வினையாளரையும் குறிக்கும். அவர் தம் உறவினரைப்போல மகிழ்ந்து அன்பு செய்தொழுகலின் "கேளிர் ஒழுக்கத்து" என்றார். கேளிர் ஒழுக்கம் என்பதன்கண் உவமஉருபு தொக்கதென்க. புகற்சி = விருப்பம் - மகிழ்ச்சி : எடுத்துக்காட்டு வந்தவழிக் கண்டு கொள்க. |
33) ஏனை வாயில் எதிரொடு தொகைஇ என்பது : மேற் கூறப்பெற்ற பெண்டிரும், மக்களும் அல்லாத பாணர், பாடினி முதலிய வாயிலோர் புரியும் வரவேற்பினை ஏற்று அவர்க்கு முகமனும் மறுமொழியும் கூறுதலொடுகூடி என்றவாறு. எ - டு : வந்தவழிக் கண்டு கொள்க. |
பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன மேலும் விரித்துச் செய்யுள் செய்தற்கு வகையாக அமைந்த இம் முப்பத்து மூன்று கூற்றுக்களும் எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய தலைமகனிடத்தனவாகும். |
தலைவனது ஒழுகலாறு கற்பின்கண் மிகப் பரந்து பட்ட நிலையை உடையதாகலின் நல்லிசைப்புலவோர் மேலும் மேலும் பலவாக விரித்துச் செய்யுள் வழங்குதற்குரிய வகைமையான் இவை அமைந்துள்ளமை தோன்றப் "பண்ணமை பகுதி முப்பதின் ஒரு மூன்று" என்றார். பண்ணுதல் = செய்யுள் செய்தல். கற்பின்கண் தலைமகன் ஒன்னாரைவென்று தன்னோரைப் புரந்து ஈதலும் துயத்தலும் ஓம்பலுமாகப் பலர் போற்ற இல்லறம் புரிந்து வாழ்தலின் "எண்ணருஞ் சிறப்பின் கிழவோன்" என்றார். அங்ஙனம் விரித்துப் பண்ணியவாக வந்தனவற்றுள் சில வருமாறு : |
எரிகவர்ந் துண்ட என்றுழ் நீளிடைச் |
சிறிதுகண் படுப்பினும் காண்குவன் மன்ற |
நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் |
வேங்கை வென்ற சுணங்கின் |
தேம்பாய் கூந்தல் மாஅ யோளே |
(ஐங்-324) |
இது தோழி வினாயவழித் தன் ஆராக்காதலைக் கூறியது. |
தாழிருள் துமிய மின்னித் துண்ணென |
வீழுறை இனிய சிதறி ஊழின் |
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் |
பெய்இனி வாழியோ பெருவான், யாமே |
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
இவளின் மேவினம் ஆகிக் குவளைக் |
குறுந்தாள் நறுமலர் நாறும் |
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே |
| (குறு-270) |
வினை முடிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியொடு உடனுறை மகிழ்ச்சி கூறியது. |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
நீடுவ தன்றுகொல் என்று (குறள் - 1307) |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
நீடுக மன்னோ இரா (குறள் - 1329) |
இவை ஊடிப்பெறும் மகிழ்ச்சி கூறின. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |