சூ. 154 :

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்

அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.

(11)
 

க - து :

அகநகர்ப்   புக்கு   உரையாடும்   மரபினையுடைய  வாயில்கள்
கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றது.
 

பொருள் :  தன்னைக்   கொண்டவனைப்     பேணித்தொழுதெழுதல்
முதலாகத்   தன்   உயிரினும்    சிறந்தவனாகக்   குறிக்கொண்டொழுகும்
மனத்திண்மையும்  நிறைந்தியலும்  காதற் பண்பும்   நன்றின்  பாலுய்க்கும்
அறிவானே  ஒழுகுதலும்,  மென்மைத்   தன்மையாற்  பிறர்  குறையினைப்
பாராட்டாத பொறையுடைமையும்  மறைபிறரறியாமை  நெஞ்சினை நிறுக்கும்
திறனும்,  இன்னலும்  இடும்பையும்  நோக்காமல்   ஒல்லும்    வகையான்
விருந்தினரைப்       போற்றியளித்தலும்      தலைவற்கும்     தனக்கும்
கேளிராயினாரையும் உறவாயின  ரையும்,  ஆட்சிக்கு  அங்கமாயினாரையும்
பேணிக்காத்தலும்     அவை     போல்வனவாகிய       தெய்வத்தையும்
தென்புலத்தாரையும்  தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த
காமக்கிழத்தியரை  வெறாது அவரான்  மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய
வாயில்கட்கு   அருளுதலும்    ஊடலும்    ஊடல்உணர்தலும்    ஆகிய
சால்புகளமைந்த   தலைவியின்   மாட்சிமைகளை  முன்னின்று  தலைவன்
முகனமர்ந்து    செவிமடுக்கும்    முறையமையான்   கூறும்   கூற்றுக்கள்,
மனையகத்துப்  புக்கு   உரையாடும்  மரபுரிமையுடைய  பாணன்  பாடினி,
முதலாய வாயில்கட்கு உரியவாகும்.
 

வாயில்களாவார், பின்னர்த் தோழி முதலாகக் கூறப் பெறுபவராவார். (சூ.
52)   அவருள்  பார்ப்பார்,  அறிவர்,  கண்டோர், விருந்தினர்  ஆகியவர்
அகநர்ப் புக்கு  உரையாடுதல் மரபன்மையான் அவரல்லாத ஏனையோரைச்
சுட்டி  "அகம்புகல்  மரபின்  வாயில்கள்"  என்றார். தோழி  கூற்று  மேல்
விதந்து   கூறப்பட்டமையான்   ஈண்டு    அவள்   அல்லாத    ஏனைய
வாயில்களையே கொள்க.
 

தலைவியின்  ஊடலை  உணர்த்தற்குத் தலைவன் பொருட்டு  வாயிலாக
வருதலும்,   தலைவியிடத்துக்  கூற்று  நிகழ்த்தலும்,   வாயில்கள் என்னும்
இலக்கணக் குறியீட்டானே  பெறப்படுமாகலான் அதனை  விதந்து கூறாமல்,
தலைவனது   புறத்தொழுக்கத்தின்  கண்ணும்   உணர்ப்புவயின்    வாரா
ஊடற்கண்   தலைவன்  புலத்தற்கண்ணும், தலைவி  வேண்டாமல்  தாமே
தலைவன்பாற்   சென்று   வாயிற்  கூற்றாக  மொழியாமல்  முகம்   புகல்
முறைமையாற்  கூறும் கூற்று  வகையாகலின்  இதனை  விதந்து  கூறினார்
என்க.
  

இந்நூல்    எழுந்த      காலத்திருந்த     இலக்கியங்கள்   மறைந்து
போயினமையான்       எடுத்துக்காட்டுமாறில்லை.       ஏனையவற்றொடு
நோக்கியறிந்து கொள்க.
 

இனி  "வாயில்  உசாவே  தம்முளும்  உரிய"  (செய்-191)  என்பதனான்
அவர்தம்முட்  கூறிக்கொள்ளும்  கூற்றுக்களை  இதன்பாற்படுத்து அடக்கிக்
கொள்க. அவற்றுள் சில வருமாறு :
 

கானங் கோழிக் கவர்குரற் சேவல்

ஒண்பொறி எருத்திற் றண்சிதர் உறைப்பப்

புதல்நீர் வாரும் பூநாறு புறவிற்

சீறூ ரோளே மடந்தை வேறூர்

வேந்துவிடு தொழிலொடு செலினும்

சேந்துவரல் அறியாது செம்மல் தேரே

(குறு-242)
 

இது பாணன், பாடினிக்குத் தலைவன் காதன்மை சிறப்புக் கூறியது.
 

‘கண்டிசின்  பாண பண்புடை  தம்ம" என்னும்  குறுந்தொகைப்  பாட்டு
(359)  தோழி  பாணற்குரைத்தது.  "மதவலியானை"  என்னும்  அகப்பாட்டு
(அக-354)  விறலி  பாணற்குரைத்தது. பிறவும்  சான்றோர் இலக்கியங்களுட்
கண்டு கொள்க.