சூ. 155 :

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக் குரிய வாகும் என்ப

(12)
 

க - து :

கற்பின்கண் செவிலி கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றது.
 

பொருள் : இறப்பு     நிகழ்வு     எதிர்வு    என்னும்      மூன்று
காலத்திற்கும்   ஏற்புடையவாய்   வழிவழித்  தொடர்ந்து   மேற்கொள்ளத்
தக்கனவாய நற்பொருள்களை  எடுத்துரைத்தலும்  நல்லவையல்லாதவற்றைக்
கடிந்துரைத்தலும் செவிலிக்குரியவாகும் எனக் கூறுவர் புலவர்.
   

எ - டு :

கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்

உட்குடையாள் ஊராண் இயல்பினாள்-உட்கி

இடனறிந் தூடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்

(நாலடி-384)
 

இது நல்லவை கூறி அல்லவை கடிந்தது.
 

"ஆகும்"  என்றதனானே  தலைவியின்  இல்லற  மாண்பினை  உவந்து
நற்றாய்க்குக் கூறுவனவும் கொள்க.
 

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப்

புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமலிந் தொழியப் பந்த ரோடி

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்

கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்

கொடுத்த தாதைக் கொடுஞ்சோ றுள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே

(நற்-110)
  

இது தலைவி மனையறங் கண்டு மருண்டு கூறியது.