சூ. 199 :கனவும் உரித்தால் அவ்விடத் தான
(3)
 

க - து :

அந்நிலைமைக்கண் கனாக்கண்டுரைத்தலும் உரித்தென்கின்றது.
 

பொருள் :  காமங்  கண்ணியதாக  வரும்   நோயும்   இன்பமுமாகிய
நிலைமைக்கண்   கனவு    கண்டுரைத்தலும்   தலைவன்   தலைவியர்க்கு
உரித்தாகும்.
 

உவமவாயிற்  படுத்துக் கூறுதலேயன்றிக்  கனவும் உரித்து என்றமையின்
உம்மை எச்சவும்மை.
 

எ - டு :

அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென்

நலந்தா ராயோவெனத் தொடுப்பேன் போலவும்

கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப்

புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும்

..... ...... ....... கனவினாற் கண்டேன் தோழி!

(கலி-128)
 

இது தலைவி கனவு கண்டுரைத்தது.
 

‘ஒழித்தது பழித்த’ என்னும் அகப்பாட்டினுள்

(39)
 

தலைவன்
 

"இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு

நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு

இன்னகை! இனைய மாகவும் எம்வயின்

ஊடல் யாங்குவந் தன்றுஎன, யாழநின்

கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி

நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து

வறுங்கை காட்டிய வாயல் கனவின்

ஏற்று ஏக்கற்ற உலமரல்

போற்றா யாகலின் புலத்தியால் எம்மே"
 

எனக்கனவு    கண்டு   கூறியமை   காண்க.  பிறவும்   அன்ன.  இதற்கு
நச்சினார்க்கினியர் கூறும் உரை மேல்வரும் சூத்திரத்தொடு இயையாமையின்
மயங்கவைத்தலாய் நிற்பதையறிக.