சூ. 234 :

கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்

உள்ளத்து ஊடல் உண்டென மொழிப

(38)
 

க - து :

தலைவி  கூற்றினுள்  இசைதிரிந்திசைக்கும் ஒருசார் பொருண்மை
கூறுகின்றது.
 

பொருள் :  கற்புநெறி  பற்றி  உயர்ந்து  ஒழுகும்  தலைவி தண்ணளி
காரணமாக  ஒரோவழிப்  பரத்தையைப்   பாராட்டிப்  பேசினும்   அவள்
உள்ளத்தே ஊடலுறுந்தன்மை உண்டென்று கூறுவர் புலவர்.
 

ஏத்தினும்   என்னும்  எதிர்மறை  உம்மை  அதன் அருமை  தோன்ற
நின்றது. உள்ளத்து ஊடல் உண்டு என்றதனான்   ஏத்துதல்    தலைவனது
குறிப்பினை   உணரும்   பயத்தாக     நிற்கும்   என்க.  இஃதுவரும்
சூத்திரத்தானும் விளங்கும்.
 

எ - டு :

நாயுடை முதுநீர் கலித்த தாமரைத்

தாதின் அல்லி அவிர்இதழ் புரையும்

மாசில் அங்கை மணிமருள் செவ்வாய்

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்

தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே

கூர்எயிற் றரிவை குறுகினள் யாவரும்

காணுநர் இன்மையின் செத்தனள் பேணி

வருகமாள என்உயிர் எனப்பெரிது வந்து

கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்

மாசில் குறுமகள் ! எவன்பே துற்றனை

நீயும் தாயை இவற்கென யான்தற்

கரைய வந்து விரைவனென் கவைஇ

களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா

நாணி நின்றோள் நிலைகண்டு யானும்

பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து

அணங்கருங் கடவுள் அன்னோள்நின்

மகன் தாயாதல் புரைவதாங் கெனவே

(அக-16)
 

எனத்  தலைவி பரத்தையை ஏத்தினமையும், நீயும் தாயை இவற்கு எனவும்,
மகன்  தாயாதல்  புரைவது  எனவும்  கூறினமையான்  உள்ளத்து  ஊடல்
அமைந்துள்ளமையும் கண்டு கொள்க.