சூ. 258 :

 கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே

(9)
 

க - து :

கல்வி முதலிய நான்கும் பற்றிப் பெருமிதம்வரும் என்கின்றது.
 

பொருள் :சான்றோரான்       புகழப்பெற்ற      பெருமிதமென்னும்
மெய்ப்பாட்டிற்குக்   காரணமாகிய  பொருள்  கல்வி,  தறுகண்  இசைமை,
கொடை என்னும் நான்குமாம் எனக் கூறுவர் புலவர்.
 

சொல்லுதல்-புகழ்ந்து  கூறுதல். "சொல்லப்பட்ட" என்றதனான்  கருத்தா
வருவிக்கப்பட்டது.  கல்வி  முதலாய  நான்கும்  அறஞ்சாரா  நெஞ்சத்தார்
பாலாயவழி அவை  பழிக்கு  ஏதுவாதலு  முடைமையான்  "சொல்லப்பட்ட"
என்றார்.
 

1. கல்வியாவது :அறமுதலாய  மும்முதற்பொருள்  பற்றிய  நூலறிவும்
இசைநாடகம் சிற்பம் முதலிய கலையறிவும் படைக்கலக்கல்வியும் பிறவுமாம்.
 

எ - டு :

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத் தற்றே

எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே

(புற-200)
 

முற்றிய திருவின் மூவ ராயினும்

பெட்பின் றீதல் யாம்வேண்டலமே

(புறம்-205)
 

என வரும்.
 

2. தறுகண்ணாவது : அஞ்சாமை. அஃதாவது பகைக்கும், பகைசெய்யும்
பொருட்கும் அஞ்சாத மனத்திண்மையாகிய வீறு.
 

எ - டு :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்

(குறள்-774)
 

அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேல்

மன்றம் படர்வித்தனள்

(கலி-41)
 

எனவரும்.
 

3. இசைமையாவது : அறத்தாறொழுகும்   நன்னடையானும்   அருள்
முதலாய உயர் பண்பானும் உலகுடன் பெறினும்  பழியொடு  வருவனபுரியா
நெறியானும்   ஊராண்மை  முதலிய   ஒப்புரவானும்  கைம்மாறு  கருதாத
ஈகையானும் வரும் ஒளி.
 

எ - டு :

"வலம்படு வான்கழல் வயவர் பெரும

நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்

புறஞ்சொற் கேளா புதைதீர் ஒண்மை

பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்

கற்பிறை கொண்ட கமழும் சுடர்நுதற்

புரையோள் கணவ"

(பதிற்-70)
 

எனவரும்.
 

வடமீன் புரையும் கற்பின் மடமொழி

அரிவை தோள வல்லதை

நினதென இலைநீ பெருமிதத் தையே

(பதிற்-122)
 

என்பது மது.
 

4. கொடையாவது :வரையாது    வழங்கும்     வண்மை.    அஃது ஈகைபோலாது   செல்வமேயன்றி    உயிரும்    உடம்புமாகிய   பொருள்
யாவற்றையும் வழங்குதலாம்.
 

எ - டு :

முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு

முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்

(புறம்-110)
 

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்

நாடிழந் தனினும் நனியின் னாதென

வாள்தந்தனனே தலையெ மக்கீய

(புற-165)
 

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்கக் குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன்"

(புறம்- )
 

எனவரும்.
 

"சொல்லப்பட்ட"  என்றதனான்  பல்லிருங்க  கூந்தல்  மகளிர்  ஒல்லா
முயக்கிடைக்  குழைக  என்தாரே  (புறம்-73)  எனக்  காமஒழுக்கம்  பற்றி
வரும் வீறும் பெருமிதமாக அடங்குமெனக் கொள்க. இவை  நான்கும்  தன்
கட்டோன்றிய பொருள் பற்றிப் பிறக்குமென்க.