சூ. 276 :

கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

(27)
 

க - து :
 

மேற்கூறிய  மெய்ப்பாட்டிற்குரிய  பொருள்களையும் அவற்றான்
தோன்றும் எண்வகை மெய்ப்பாட்டினையும்  திரிபின்றி அறிந்து
கோடற்குரிய   கருவி   கூறுமுகத்தான் இவ்வியலுக்காவதொரு
புறனடை கூறுகின்றது.
 

பொருள் :   மன்பதையுள்   உயர்திணையாய   மக்களிடத்தும், பிறவு முளவே அக்கிளைப்  பிறப்பே  (மரபியல்)  எனப்பெற்ற  உயிர்களிடத்தும்
பல்வேறு நிலைகளில் நிகழும் நிகழ்ச்சிகளையும்
 

குறிப்பானும்      வெளிப்படையானும்,      மக்களிடத்து     நிகழும்
உரையாடல்களையும் முறையே கண்ணானும் செவியானும்  தம்  நுண்மாண்
நுழைபுலத்தான்   ஓர்ந்து   திரிபின்றி    உணரும்  அறிவுடையார்க்கன்றி
ஆராயுமிடத்து அவ்வுணர்வில்லா மாந்தர்க்கு மேற்கூறிய  நன்னயம் சான்ற
மெய்ப்பாட்டுப் பொருள்களையும் அவை  பற்றி எழும் மெய்ப்பாடுகளையும்
எண்ணி அறிந்து கோடல் அரிதாகும்.
 

என்றது :  பண்ணைத்    தோன்றிய      பொருள்பற்றி      நிகழும்
நாடகச்சுவையினை  உணரும்  கருவிகளும் அறிவுமே   செய்யுளுறுப்பாகிய
மெய்பாட்டினை உணர்ந்து கோடற்கும் மூலமாம் என்றவாறு.
 

நாடகக்   காட்சியின்கண்   ஒரு  பொருநன் வெளிப்படுத்தும் சத்துவம்
(விறல்) அவன் மெய் வாயிலாகவும் உரை  வாயிலாகவும் வெளிப்படுதலான்
அதனைக் காண்போன்  அச்சுவையைத்  தன்   கண்ணானும்  செவியானும்
கண்டும்  கேட்டும் எய்துவானன்றே  அங்ஙனம் காட்சிவகையான் உணர்ந்து
எய்தும் அவ்வறிவே   செய்யுளுறுப்பாகிய   மெய்ப்பாட்டினை   உணர்ந்து
கோடற்கும் கருவியாம் என்பதை   விளக்குதற் பொருட்டுக்   "கண்ணினும்
செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வு" என்றார்.
 

என்னை?   செய்யுட்கண்வரும்    நிகழ்ச்சிகள்   அகவிழிக்கும்  அகச் செவிக்கும்  புலனாகி  நிற்றலின்  என்க. பிற  விளக்கங்கள்  முன்னுரையிற்
கூறப்பெற்றன.
 

எ - டு :

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

(குறள்-1097)
 

என்னும்    தலைவன்    தலைவியின்      செறுத்த   நோக்கினூடே அன்புண்மையைக்  கண்ணானும்   சிறுசொல்லின்கண்   காதலுண்மையைச்
செவியானும் தன் நுண்ணுணர்வான் நுண்ணிதின் அறிந்தமையான் இங்ஙனம்
கூறுவானாயினமை   தெரியலாம்.  தலைவன்  காணும்  காட்சியும்  அவன்
உணர்வும் இச்செய்யுளைப் பயில்வார்  தம்  அகவிழிக்குப்  புலனாதலையும்
அறியலாம்.
 

இது   நாடகக்   காட்சியாயின்   தலைவியிடமாகத்  தோன்றும் சுவை
பெருமிதமாம். இது தலைவன்  கூற்றாகலின் அவன்கண்  தோன்றும் சுவை
உவகையாம்.        இதனை           இலக்கியக்        காட்சியாகப
பொருட்பாடாக    அறியுமிடத்துத்       தலைவியைக்     கருதுமிடத்து

இல்வலியுறுத்தல்   என்னும்   பொருள்பற்றி   வந்த  பெருமிதம் என்னும்
மெய்ப்பாடாம். தலைவனைக் கருதுமிடத்துப் புலன்  என்னும் பொருள்பற்றி
வந்த உவகை என்னும் மெய்ப்பாடாம்.
 

இவையே கண்ணாற் காணும்  நாடகக்  காட்சிக்கும்  அறிவாற்  காணும்
இலக்கியக் காட்சிக்கும் உரிய வேறுபாடாகும்.
 

இனி,   இச்செய்யுட்குத்  "தலைவரு  பொருண்மையான்" முடிக்கப்படும்
மெய்ப்பாடு யாது என நோக்குமிடத்து  நன்னயப்  பொருளைத்  தலைவன்
கூற்றாகப் புலவர் யாத்துள்ளமையான் தலைவனுடைய சுவைவழித்தோன்றும்
மெய்ப்பாடாகிய உவகையே இதற்குரிய மெய்ப்பாடாதல் தெளியலாம்.
 

எனவே,   இச்செய்யுளின்  மெய்ப்பாடாகிய  உறுப்பு,  புலன்  என்னும்
பொருள் பற்றிவந்த உவகை  என்பதாம். பிறவற்றையும்  இவ்வாறே நாடகச்
சுவையொடு ஒப்பிட்டு மெய்ப்பாட்டியல்பினை ஓர்ந்துணர்ந்து கொள்க.
 

மெய்ப்பாட்டியல் உரை முற்றும்.