| 2. | பளிங் கத்தன்ன பல்காய் நெல்லிமோட்டிரும் பாறை ஈட்டுவட்டேய்ப்ப | (அகம்-5) |
| 3. | வேய்மருள் பணைத்தோள் நெகிழ | (குறு-318) |
| 4. | உரல்புரை பாவடி | (கலி-21) |
| 5. | முத்துடைவான்கோடொட்டியமுலைமிசை | (இளம்-மேற்) |
| 6. | பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின் | (") |
| 7. | செந்தீ ஒட்டிய வெண்சுடர்ப் பருதி | (") |
| 8. | பரங்குன் றிமயக் குன்றம் நிகர்க்கும் | (பரிபா-8) |
எனவரும். இவை எட்டும் மெய்யுவமத்தின் பாலானமைக்குக் காரணம் : கடுத்தல் என்பது ஐயுறுதலாகலான் அஃது பொருளுள் ஒன்றனைத் துணியாமை பற்றி வருதலின் மெய்யுவமத்திற்குச் சிறந்ததாயிற்று. ஏய்ப்ப என்பது எய்த்தல் என்பதன் நீட்சியாகும். ஏய்த்தல் இளைத்தற் பொருட்டாகலின் வடிவுக்கு ஏற்றதாயிற்று. [பொருந்துதல் என்னும் பொருளில் வரும் ஏய்தல் வேறு; இது வேறு. ஏய்தல் என்பது எச்சமாகவரின் ‘ஏய’ என வரும்] மருளுதல் என்பது ஒன்றைப் பிறிதொன்றாகக் கருதும் மயக்கமாகலின் இதற்குச் சிறந்ததாயிற்று. புரை என்பது உயர்பு ஆகலானும், ஒடுங்குதல் என்பது ஒன்று ஒன்றனுள் அடங்குதலாகலானும் ஒட்டுதல் என்பது நீக்குதல் பொருட்டாகலானும் நிகர் என்பது அளவைப் பொருட்டாகலானும் இவையும் வடிவிற்குச் சிறந்துரிமை பெறலாயின. |