சூ. 246 :சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு
அனைநால் வகையும் சிறப்பொடு வருமே

(50)

க - து :
 

அந்தமில் சிறப்பின்  ஆகிய  இன்ப  பொருளிடத்து  உடனுறை
முதலாய  உள்ளுறைப்  பொருள்தரும்  கூற்றுக்கள்  அல்லாமல்
வெளிப்படையாகக்  கூறும்   கூற்றுக்களாயின்   அவை  இன்ன
பொருள் பற்றி வரும் என்கின்றது.
 

பொருள் :இன்பத்திற்கு    இடையூறாக    நிற்கும்   பொருளிடத்துத்
தோன்றும் சினமும்,  அறிவுடைமைக்கு  மாறாய  பேதைமையும்,  உள்ளம்
ஒவ்வாவழித்    தோன்றும்     வெறுப்பும்,    துய்ப்பதற்குரிய   பொருள்
நிரம்பாமையாகிய  நல்குரவும்  என்னும்  அத்தன்மையவாகிய  நால்வகைக்
குணங்களும் அகப்பொருள் ஒழுக்கத்தொடு சார்ந்து தோன்றும்.
 

இவை மேலோர்க்குரிய  குணங்களாகாமையின்  தலைமக்கட்கு  ஆகா.
எனினும் இருவகைக் கைகோளினும் அருகி  நிகழும்  துனியும்,  புலவியும்,
ஊடலும் காரணமாக  ஒரோவழித்  தோன்றுதலின்  "அனைநால்  வகையும்
சிறப்பொடு வருமே" என்றார்.  சிறப்பென்றது  அக  ஒழுக்கத்தை. ஈண்டுக்
கூறிய நிம்பிரி என்பது புலவி காரணமாகத் தோன்றிய செயற்கை  வெறுப்பு.
மெய்ப்பாட்டியலுள்  விலக்கப்பட்ட   நிம்பிரி   இருவர்   மாட்டும்  காதற்
கேண்மையின்றி ஒருவர்  ஒருவரை  உள்ளத்தான்  வெறுக்கும்  இயற்கைக்
குணம் என அறிக.
 

எ - டு :

"ஒரூஉ, கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற

முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்

தொடிய எமக்கு நீயாரை? பெரியார்க்கு

அடியரோ ஆற்றாதவர்"

(கலி-88)
 

என்பது புலவியுள் தலைவி சினந்தது.
 

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு

பைய முயங்கிய அஞ்ஞான்று அவையெல்லாம்

பொய்யாதல் யான்யாங்கு அறிகோ மற்றைய

(கலி-19)
 

என்பது தலைவி பேதைமை.
 

"அகல்நகர் கொள்ளா அலர்தலைத் தந்து

பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்

மகனல்லை மன்ற இனி"

(கலி-19)
 

என்பது தலைவியின் நிம்பிரி.
 

நல்குரவிற்கு எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க.