சிறத்தல் தலைவிக்கும் ஐயம், தலைவற்கும் உரிய என்பது பின்வரும் "வண்டே இழையே" என்னும் சூத்திரத்தான் உய்த்துணரலாகும். அச்சமும் நாணும் மடனும் பெண்மைக் குரியவையாகலான் தலைவிக்கு ஐயம் தோன்றுதலில்லை. ஒருகால் ஐயுறினும் தலைவி ஐயுற்றாளாக் கூறுதல் புலனெறிவழக்காகாமையான் நூலோர் கூறாராயினர். |
“உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி |
ஐயக் கிளவி ஆடூஉவிற்குரித்தே” |
(43) |
எனப் பொருளியலுள் இதனை விதியாகக் கூறுவார் ஆசிரியர். |
எ - டு : | “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை |
| மாதர்கொல் மாலுமென் நெஞ்சு”, எனவரும். |
இனித் திருத்தொண்டர்புராணத்துள் நம்பியாரூரைக் கண்ட பரவையார் ஐயுற்றாளாகச் சேக்கிழார் கூறுமாறென்னையெனின்? அது சுட்டியொருவர் பெயர் கொண்டு கூறிய வரலாற்று நிகழ்ச்சி யாகலின் அது "புரைதீர் காமம் புல்லிய வகை" பற்றி வந்த பாடாண் பகுதியாய்ப் "புறத்திணை மருங்கிற் பொருந்தி" வந்த இலக்கணநெறி என அறிக. |