சூ. 217 : | சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே |
(21) |
க - து : | தலைவன் பொருள்வயிற் பிரிதலைக் கருதியவிடத்துத் தலைவிக்குரியதொரு கூற்று அமையுமாறு கூறுகின்றது. |
பொருள்: தலைவனது பிரிவுக் குறிப்புணர்ந்தவழித் தலைவி தானும் அவனொடு சுரத்தின்கண் செல்லுதும் எனக் கூறலும் புலனெறி வழக்கின்கண் நீக்கும் நிலைமைத்தில்லை. |
இஃது இருவகைக் கைகோளிற்கும் பொதுவாகிய குறிப்பாகும். |
எ - டு : | மரையா மரல்கவர மாரி வறப்ப |
| வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர் |
| சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் |
| உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத் |
| தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம் |
| கண்ணீர் நனைக்கும் கடுமையகாடு என்றால் |
| என்நீர் அறியாதீர் போல இவைகூறல் |
| நின்நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் |
| அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு |
| துன்பந் துணையாக நாடின் அதுவல்லது |
| இன்பமும் உண்டோ எமக்கு |
(கலி-6) |
இது கற்பின்கண் தலைவி கூறியது. களவின்கண் கூறியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. |
உரையாசிரியன்மார் இதற்குத் தோழி சுரத்தருமை கூறித் தலைவனை அழுங்கச் செய்தல் என்றும், தலைவன் சுரத்தருமை கூறித் தலைவியை விலக்குதல் என்றும் பொருள் கூறுவர். தலைவன் கூற்று அதிகாரப்படாமையானும் அங்ஙனம் தோழி கூறின் அஃது அச்சுறுத்தலாக அமையுமாகலானும் அவர் கருத்து ஆய்விற்குரியதாகும் என்க. |