| சூ. 283 : | சுட்டிக் கூறா உவம மாயின் |
| பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே |
(7) |
க - து : | உவமச்சொல்லும் உவமத்தன்மையும் தொக்கு வருமாறும் அவற்றை விரித்துணருமாறும் பற்றிக் கூறுகின்றது. சொல்லதிகாரத்துள் உவமத் தொகை மொழியின் இலக்கணத்தைக் கூறுங்கால் "உவமத் தொகையே உவமவியல்" எனத் தோற்றுவாய் செய்ததை ஈண்டு விதந்து கூறுகின்றார் ஆசிரியர். |
பொருள் :இவ்வுவமம் இப்பொருளை இன்னவாற்றான் விளக்கி நின்றது என உவமத்தின் உவமத்தன்மையை உவமச்சொல்லோடு கூட்டிக் கூறாமல் தொகுத்துக் கூறப்பெற்ற உவமத் தொடராயின், உவமிக்கப்படும் பொருட்கு எதிரே வினையும் பயனும் மெய்யும் உருவுமாகிய உவமத் தன்மைகளைப் பொருத்தி நோக்கி அவற்றுள் பொருந்துவனவற்றை அவ்வுவமமாகத் தேர்ந்து கொள்க. |
"விரவியும் வரூஉம் மரபின" வாதலின் "புணர்ந்தன கொளலே" எனப்பன்மையாற் கூறினார். சுட்டிக்கூறுதலாவது கருதிய உவமத்தன்மை விளங்க விரித்துக் கூறுதலாம். |
உவமத்தொகை மொழியிலும் உவமத்தொடரிலும் உவமப் பொருளும் உவமிக்கப்படும் பொருளும் விரிந்தே நிற்குமாதலின் "சுட்டிக் கூறா உவமம்" என்றது உவமத்தன்மையையும் உவம உருபுச் சொல்லையும் என்பது தாமே போதரும். |
இவ்வாசிரியர் முன்னையோர் மரபு பற்றி அன்ன, ஆங்க முதலிய உவமச் சொற்களை உவமம் என்று குறியீடு செய்து ஓதுவராகலின் சுட்டிக் கூறா உவமமென உவமத் தன்மையையும் உருபையும் ஒருங்குணரப் பொதுப்பட ஓதினார் என்க. |
தொடர்மொழிக்கண் உவமஉருபு தொக்கு வருதலை உவமத்தொகைத் தொடர் என்றும், தொகைமொழிக்கண் உவம உருபும் உவமத் தன்மையும் ஒருங்கு தொக்கு வருதலை உவமத் தொகைமொழி என்றும் வழங்குதல் இந்நூல்நெறி என்பதனை எச்சவியலுள் விளங்கக் கூறினாம். ஈண்டுச் சுட்டிக்கூறா உவமம் என்றது தொடர்மொழி தொகைமொழிகட்குப் பொதுவாக நின்றதென்க. |
வரலாறு :"பவளம் போற் செந்துவர்வாய்" என்பது உவமையும் உருபும் விளங்க எடுத்துக்கூறிய உவமத்தொடர். இனி அத்தொடர் தன் மொழிப்பொருள் சிதையாமல் ‘பவள வாய்’ எனவருதல் சுட்டிக் கூறா உவமத்தொகை மொழியாம். |
இனிப், பவளம் போலும் வாய் என்பதும் பவளச் செவ்வாய் என்பதும் சுட்டிக் கூறா உவமத்தின்பாற்படும். என்னையெனின்? பவளம் போலும் வாய் என்பதன்கண் உவமத்தன்மையும் பவளச்செவ்வாய் என்பதன்கண் உவம உருபும் விரியாமையான் என்க. இவற்றுள் முன்னது உவமைத்தொகை எனவும் பின்னது உவமஉருபுத்தொகை எனவும் விளக்கப் பெறும். |
இவ்விலக்கண நெறியை நெகிழ்ந்து "உவம உருபிலது உவமத் தொகையே" என்னும் நன்னூற் சூத்திரத்தையும் பிற இடைக்கால நூல்களையும் இலக்கணமாகக் கருதிக் கொண்டு அவற்றின் வழித் தொல்காப்பிய மரபினை நோக்குதல் ஒவ்வாதென அறிக. |
இச்சூத்திரத்திற்குரிய இளம்பூரணருரை சிதைவுற்றுப்பின் செப்பஞ் செய்யப் பெற்றுள்ளது என்பதை ஊன்றி நோக்கின் உணரலாம் அவ்வுரையுள் காணப்படும் |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
நோக்கக் குழையும் விருந்து |
(குறள்-90) |
என்னும் எடுத்துக்காட்டினை நோக்கின் சுட்டுச் சொல்லும் உவம உருபுமின்றி வருவது சுட்டிக் கூறா உவமம் என்பது அவர் கருத்தாதல் புலப்படும். தண்டியலங்கார உரையாசிரியர் இக்குறட்பாவை எடுத்துக்காட்டி இது தொகையுவமம் என்பார். அதனான் உவம உருபின்றி வருவது தொகையுவமம் என்பது அவர் கருத்தாதலை அறியலாம். |
உவம உருபினை விரித்துக் கூறாமல் உவமத்தை எடுத்துக் காட்டிய அளவே நிற்றலான் இதனை எடுத்துக்காட்டுவமை என்பர் உரையாளர். உவமம் யாவும் எடுத்துக்காட்டப் பெறுவனவேயாதலின் அங்ஙனங் குறியீடு செய்தலாற் பயனின்மை யறிக. அதனான் சுட்டிக் கூறா உவமம் என்பதன் நுட்பமும் இவ் இலக்கணமும் வெளிப்படாமையும் உணர்க. |