சூ. 210 :

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான

(14)
 

க - து : 

அச்சம்,   மடம்,  நாண்  முதலிய   பெண்மைக்  குணமுடைய
மகளிர்       அகனைந்       திணைக்கண்       இங்ஙனம்
அறிவாராய்ச்சியுடையராய்த்  திகழ்தலும், குறிப்பறிந்து ஒழுகலும்,
வினாவும் செப்பும்   நிகழ்தலும்  எவ்வாறு? என்னும் ஐயத்தைக்
களையுமுகத்தான் பெண்டிர்க்குரிய இயல்பு ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் : நிலையிற்றிரியாத அடக்கமும், மறைபுலப்படா வாறொழுகும்
நிறையும் மனக்கோட்டமின்மையும்  காலமும் இடமும் அறிந்து கூறத்தகுவன
கூறலும்    நன்மை   தீமைகளை  ஆராய்ந்து   கொள்ளும் அறிவும்  தம்
உளத்தினைப்  பிறர்  எளிதின் அறியவொண்ணா  தொழுகும்  அருமையும்
பெண்பாலார்க்குரிய திறன்களாகும்.
 

குரவரின்  வழி  நின்றொழுகுங்கால்  இவை   புலப்படா,   வேண்டுழி
விளங்கித்  தோன்றுமென்பார் "பெண்பால் ஆன" என்றார். இத்திறங்களைத்
தோழி, செவிலி முதலானோர்க்கு இந்நூலுள் ஓதப்பெற்றுள்ள கிளவிகளானும்
அவற்றிற்குக் காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களானும் தெரிந்து கொள்க.