சூ. 233 :

செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவும்

மெய்பெற உணர்த்தும் கிளவி பாராட்டே

(37)
 

க - து :

தலைவன்     கூற்றின்கண்    இசைதிரிந்திசைக்கும்   ஒருசார்
பொருண்மை கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்   தலைவியைச்  (செயற்கையாகச்)  சிறப்பித்துக்
கூறும் பாராட்டுரை  கடப்பாடு காரணமாகத்  தான்  செய்ய  எண்ணியுள்ள
பொருட்கு இவள்  இடையூறு  ஆவாள்   கொல்லோ?  எனத்   தலைவன்
தன்னுள்ளே அஞ்சும்  அச்சத்தினையும்  தான்  வினைமேற் பிரியவிருக்கும்
பிரிவுக் கருத்தையும் திரிபின்றித் தலைவிக்கு உணர்த்தா நிற்கும்.
 

என்றது : தலைவனது விஞ்சிய  பாராட்டுரையினான் அவன் தன் பொருட்டு
அஞ்சும் அச்சத்தினையும் அவன்பிரிய  இருக்கும் எண்ணத்தையும் தலைவி
தெளிவாக உணர்ந்து கொள்வாள் என்றவாறு.
 

எ - டு :

நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்துத்தாம்

அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னும்சொல்

இன்தீங் கிளவியாய் வாய்மன்ற, நின்கேள்

புதுவது பன்னாளும் பாராட்ட யானும்

இதுவொன்று உடைத்தென எண்ணி அதுதேர

மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்

பாயல் கொண்டு என்தோள் கனவுவார்

(கலி-24)
 

என  அவன் குறிப்பறிந்தவாறும் தலைவன் கனவின் அரற்றியவாறும் கண்டு
கொள்க.