செல்வம் முதலிய நான்கும் அறத்தொடு கூடி வாராவிடத்துத் தனக்கும் பிறர்க்கும் அவை வருத்தமும் செய்வனவாதலின் "அல்லல் நீத்த" எனச் சிறப்பித்துக் கூறினார் என்க. |
1. செல்வமாவது :பொருட் செல்வமேயன்றி அறுசுவை உண்டி முதலிய நுகர்பொருளும், ஆடையணி முதலாய துய்த்தற் பொருளும், கொடியும் படையும் முதலிய அரசச் செல்வமுமாம். |
எ - டு : | வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் |
| எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே |
| பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் |
| திருந்துவேற் குமணன் நல்கிய வளனே. |
(புறம்-163) |
எனவும் ....... ...... .......... ........ .......... ......... ........ இரவல |
| வென்வே லண்ணற் காணா வூங்கே |
| நின்னினும் புல்லியேம் மன்னே, இனியே |
| இனன் மாயினேம் .... .... ..... ..... |
(புறம்-141) |
எனவும் வரும். இது தன்கண்ணதாய் நிகழவரும். |
2. புலனாவது :ஊழான் அமைந்த தன்னுணர்வான் எய்தும் உண்மையறிவாகிய புலமைப் பேறு. |
எ - டு : | வழிபடு வோரை வல்லறி தீயே |
| பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே |
| நீமெய் கண்ட தீமை காணின் |
| ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி |
| வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் |
| தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே |
(புறம்-10) |
| இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ |
| நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்து |
| உம்பர் உறைவார் பதி |
(நாலடி-137) |
எனவரும். இஃது இருபாலும் பற்றிவரும். |
3. புணர்வாவது :ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் பொருந்திய தலைவனும் தலைவியும் எய்தும் உள்ளப் புணர்ச்சியும், மெய்யுறு புணர்ச்சியுமாம். "அல்லல் நீத்த" என்றதனான் உயிரோரன்ன நட்பிற் புணர்ச்சியுமாம் எனக் கொள்க. |
எ - டு : | தம்மில் லிருந்து தமதுபாத் துண்டற்றால் |
| அம்மா அரிவை முயக்கு |
(குறள்-1107) |
எனவரும். |
| "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்" |
| என்னும் குறுந்தொகைச் செய்யுளும் அது. |
| நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் |
| பண்புடை யாளர் தொடர்பு |
(குறள்-783) |
எனவும் வரும். இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும். |
4. விளையாட்டாவது : உள்ள மொத்தாரொடு கூடிச் சோலைபுக்கு விளையாடலும், குரவை முதலிய ஆடலும், இகலின்றிப் புரியும் வீர விளையாட்டுமாம். |
எ - டு : | மேவர, நான்மாடக்கூடல், மகளிரும் மைந்தரும் |
| தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் |
| ஆனா விருப்பொடு அணியயர்ப, காமற்கு |
| வேனில் விருத்தெதிர் கொண்டு |
(கலி-92) |
எனவும் |
| வையை வருபுனல் ஆட லினிதுகொல் |
| செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல் |
(பரிபாடல் திரட்டு)
|
எனவும் வரும். |
| துயிலின்றி யாம்நீந்த தொழுநையம் புனலாடி |
| மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான் மன்னோ |
(கலி. 30) |
என்பது காட்டுவார் பேராசிரியர். இன்னோரன்ன அல்லல் நீத்த உவகை எனற் கேலாமை கண்டு கொள்க. |
இம்முப்பத்திரண்டு பொருளும் நாடகச் சுவைக்கும் உரிமையுடையனவாய் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குச் சிறப்புடையனவாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாய் அமைந்து வருதலின் இவற்றை முதற்கண்விதந்தோதினார் என்க. |