சூ. 112 : | சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் |
| அல்ல கூற்றுமொழி அவள்வயி னான |
(20) |
க - து : | தலைவியது கூற்றுமொழிக் காவதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் :களவொழுக்கத்தின்கண் தலைவன் தன்னை நோக்கிக் கூற்று நிகழ்த்துமிடத்துத் தலைவி நேர்க்கூற்றாக மறுமொழி கூறுதல் அருமையுடைத்தாகலின் நேர்க்கூற்றல்லாத மொழி (குறிப்புமொழி) அவளிடத்தனவாகும். |
எதிர்மொழிதல் - முன்னின்று கூறுதல். அல்ல கூற்றுமொழி என்றது முன்னிலைப்புறமொழியை. எதிர்மொழிதல் இல்லை என்னாது "அருமைத்து" என்றமையான் சிறுபான்மை முன்னிலையாகக் கூற்றுமொழி நிகழினும் இழுக்காதென்பது கொள்ளப்படும். |
மேலைச் சூத்திரங்களான் எய்திநின்ற குறிப்புமொழியே யன்றி இவ்வுழி இவ்வாறு சிறுபான்மை கூற்றுமொழியும் நிகழும் என்றமையான் இஃது அவற்றிற்குப் புறனடையாயிற்று என்க. |
எ - டு : | மரையா மரல்வர மாரி வறப்ப |
| வரையோங் கருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர் |
| சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் |
| உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத் |
| தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம் |
| கண்ணீர் நனைக்கும் கடுமைய காடென்றால் |
| என் நீர் அறியாதீர் போல இவைகூறல் |
| நின்நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும் |
| அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு |
| துன்பம் துணையாக நாடின் அதுவல்லது |
| இன்பமும் உண்டோ எமக்கு |
(பாலைக்கலி-6) |
எனவரும். |