சூ. 266 : | தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் |
| கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு |
| பொருந்திய நான்கே ஐந்தென மொழிப |
(17) |
க - து : | தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் ஐந்தாங் கூறு என்கிறது. |
பொருள் :தெரிந்துடம்படுதல், திளைப்புவினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழியுவத்தல் எனப்பொருந்திய நான்கும் ஐந்தாங்கூறு எனப்புகல்வர் ஆசிரியர். |
இவை களவியலுட் கூறிய, “மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும், அருமை செய்தயர்ப்பினும், வழிபாடு மறுத்தல், பெற்றவழி மலியினும்” (கள-21) எனவரும் கிளவி முதலியவற்றிற்குரியவாக நிகழும் மெய்ப்பாடுகட்குப் பொருள்களாம் என்பதை வலியுறுத்தப் ‘பொருந்திய நான்கு’ என்றார். |
1. தெரிந்துடம் படுதலாவது : தலைவன் ஒருவழித்தணத்தல் முதலியவற்றையும், வரைவுநீட்டித்தலையும் அம்பலும், அலரும் எழுந்து பரவுதலையும் தாயர் வெறியாட்டு முதலியவற்றை நிகழ்த்துதலையும் பிறவற்றையும் ஆராய்ந்து இனிச் செயற்பாலனவற்றைத் தேர்ந்து அறத்தொடுநிலை வாயிலாகத் தனது நிலைமையைத் தெரிவிக்கத் தலைவி உள்ளம் நேர்தல். |
உடம்படுதல் என்பது ஈண்டுத் தெரிவித்தல் என்னும் பொருள்பட நின்றது. பொதுப்படக் கூறியுள்ளமையான் தலைவி உடம்போக்கிற்கு உடம்படுதலும் கொள்க. |
எ - டு : | ...............அன்னை |
| எவன்செய் தனையோநின் இலங்கெயிறு உண்கென |
| மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து |
| உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து |
| உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் |
| காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி |
| தீந்தொடை நரம்பின் இமிரும் |
| வான்தோய் வெற்பன் மார்பணங் கெனவே |
(நற்-17) |
எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
2. திளைப்புவினை மறுத்தலாவது : தலைவனது வருந்தொழிற் கருமையும் இடையூறும் எண்ணித் தலைவி வரைவு கடாதற் கருத்தினான் இருவகைக்குறிக்கண்ணும் இடையீடு செய்து கூட்டத்தைத் தவிர்த்தலாம். தவிர்த்தலை மறுத்தல் என்றார். |
எ - டு : | கருங்கற் கான்யா றருஞ்சுழி வழங்கும் |
| கராஅம் பேணாய் இரவரின் |
| வாழேன் ஐய மைகூர் பனியே |
(நற்-292) |
எனவும் |
| குடிமுறை புரக்கும் நெடுமலை நாட |
| உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் |
| இரவின் அஞ்சாய், அஞ்சுவல் இரவின் |
| ஈரளைப் புற்றம் காரென முற்றி |
| இரைதேர் எண்கினம் அகழும் |
| வரைசேர் சிறுநெறி வாரா தீமே |
(நற்-336) |
எனவும் வரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். |
3. கரந்திடத் தொழிதலாவது :தலைவனைக் கண்டவழி உளந்தடுமாறு மென அஞ்சி அவன் காணாவகையிற் கரந்து மனையிடத்து அடங்கி அவனின் நீங்கியிருத்தல். ஒழிதலாவது தலைவன் வழியமையாது தவிர்த்தல். தங்குதல் எனக் கருத்துப் பொருள் கூறுவர் உரையாசிரியன்மார். அது சொற் பொருளாகாமை எழுத்ததிகாரத்து விளக்கப்பட்டது. |
எ - டு : | யாவதும் அறிகிலர் கழறு வோரே |
| தாயில் முட்டை போல உட்கிடந்து |
| சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தே |
| யாமைப் பார்ப்பின் அன்ன |
| காமங் காதலர் கையற விடினே |
(குறு-152) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கண்டவழி உவத்தலாவது : கரந்துறைதலால் ஆற்றாமைமிக்கு வருந்திப் புலம்பியிருக்குங்கால் தலைவன் ‘புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழியும் பகாஅ விருந்தின் பகுதியாய வழியும்’ (கள-17) கண்டு பெருங் களிப்புறுதல். |
எ - டு : | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
| கள்ளுக்கில் காமத்திற் குண்டு |
(குறள்-1281) |
இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |