சூ. 213 :

தேரும் யானையும் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப

(17)
 

க - து : 

தலைவர்க்குரியதோர் மரபு கூறுகின்றது.
 

பொருள் :களவின்கண் குறியிடத்துக்குச்  செல்லும்  தலைவர்  தத்தம்
நிலைமைக்கேற்பத்     தேரையும்   யானையையும்  குதிரையையும்   பிற
ஊர்திகளையும் ஊர்ந்து சேறலும் உரியர் எனக் கூறுவர் புலவர்.
 

தத்தம் தகுதிகட்கு ஏற்பச்  செல்லாமையும்  பிறர்  ஐயத்திற்கு ஏதுவாம்
ஆதலின் ‘இயங்கலும் உரியர்’ என்றார். உம்மையான் ஊர்தியின்றிச் சேறலே
பெருபான்மை     எனக்   கொள்க.   பிறவாவன   வையமும்,   அத்திரி
முதலாயினவுமாம்.
 

எ - டு :

கடிகொண் டனளே தோழி பெருந்துறை

எல்லையும் இரவும் என்னாது கல்லென

வலவன் ஆய்ந்த வண்பரி

நிலவுமணல் கொட்குமோர் தேருண்டு எனவே

(அக-20)
 

கடுமான் பரிய கதழ்பரி கடைஇ

நடுநாள் வரூஉம்

(நற்-149)
 

இவை தேரும் பரியும் ஊர்ந்து வந்தமை கூறின.
 

கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி

நெடுநீ ரிருங்கரிப் பரிமெலிந் தசைஇ

(அக-120)
 

என்பது  அத்திரியூர்ந்து  வந்தமை  கூறிற்று. பிறவும்  வந்தவழிக்   கண்டு
கொள்க.
 

இதன்கண் பொருளியற்குச் சிறந்த குறிப்பமைதி இல்லையாயினும் தோழி
எளித்தல், ஏத்தல் முதலிய  வகையான் அறத்தொடு  நிற்றற்கண் கூறப்படும்
தலைவனது சிறப்புப் புலப்படுமாதலின் இதனை ஈண்டு வைத்தார் என்க.