சூ. 170 :

தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்

பல்லாற் றானும் ஊடலிற் றணித்தலும்

உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்

அணிநிலை யுரைத்தலும் கூத்தர் மேன

(27)
 

க - து :

இது   வாயில்களுள்  கூத்தர்க்குரிய   கிளவி   பற்றிய    மரபு
கூறுகின்றது.
 

பொருள் :  தொல்லவையுரைத்தலும் = பண்டையோரின் சிறந்த காதல்
வாழ்வு பற்றிய வரலாறுகளை எடுத்தியம்பலும்,
 

நுகர்ச்சி   ஏத்தலும்  =  நமது  இன்பநுகர்ச்சி  போற்றத்தக்கது   என
உயர்த்திக்  கூறலும்,   பல்லாற்றானும்   ஊடலிற்  றணித்தலும்  =  அவர்
தாம் ஊடலுற்ற வழிப் பல்வகையானும் தனியக்கூறுதலும், உறுதிகாட்டலும் =
மனத்திண்மை  உடையாரது  சீரிய  வாழ்வினை  எடுத்துக்கூறலும்,  அறிவு
மெய்ந்நிறுத்தலும்  =  கற்றதன்  பயன்  அதற்குத்தக நிற்றல் என அவர்தம்
அறிவினை  மெய்ப்  பொருள்களின்கண் நிலைபெற உரைத்தலும், ஏதுவின்
உரைத்தலும்  =  அறநெறி  ஏதுவாக   இவ்வாறு  ஒழுகின்   இன்னவை
நிகழுமெனப்  புலப்பட   மொழிதலும்,  துணிவு   காட்டலும் = காதலறம்
வழுவினாரது  முடிவுகளை  எடுத்துக்  கூறலும், அணிநிலை உரைத்தலும் =
பல்வகைப்    பண்பும்    மக்கட்கு    அணியாதலை   நயந்துரைத்தலும்
[நிலையணியுரைத்தல்   என    மாறுக]   கூத்தர்மேன  =  வாயில்களுள்
கூத்தரிடத்தனவாம்.
 

பலகடம் பூண்டொழுகும் தலைவன்  நிலைமையை விளக்கலும் கற்புடை
மனைவியின்  கடமையினைச்  சுட்டிச்  சொல்லுதலும் தணியாதவழி நேரும்
இழப்பினை  எடுத்துக் கூறுதலும்  பிறவுமாகச்  சாற்றுதலின் பல்லாற்றானும்
என்றார்.
 

கூத்தாராவார் உலகியல் வழக்கினைத் தேர்ந்துணர்ந்து அவரவர்போலத்
தம்மைப்  புனைந்து  கொண்டு   வேத்தியலும்  பொதுவியலுமாக   நாடக
மியற்றும்  கலைவல்மாந்தர். அவர்  பன்னெறியும்  பற்றிப்  புனைந்துரைக்க
வல்லராதல் பற்றி அவரை முற்கூறினார்.
 

எ - டு :

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்

(குறள்-914)
 

இஃது அறிவு மெய்ந்நிறுத்தியது. பிறவும் சான்றோர் இலக்கியங்களுட் கண்டு
கொள்க.