சூ. 151 :

தோழி யுள்ளுறுத்த வாயில் புகுப்பினும்

ஆவயின் நிகழும் என்மனார் புலவர்

(8)
 
க - து :

இதுவுமது

 

பொருள் : தலைவன் பிரியக்  கருதியிருக்குமிடத்துத்   தலைவி தோழி
யுள்ளிட்ட வாயில்களைத் தலைவன்பால் தூது போகவிடினும் அவ்விடத்தும்
அக்கூற்றுத் தலைவன் செய்வினைக்கு அச்சம் பயப்பதாகும்  என்று கூறுவர்
புலவர்.
 

உம்மை அன்புறுதக்கன கிளத்தலேயன்றி   வாயில் புகுப்பினும் என்னும்
பொருள் தருதலான் எச்சவும்மையாம்.   இதனாற்   றலைவி தலைவன்பால்
தூது விடுதலாகக் கூற்று   நிகழ்த்தும்   என்பதும்   பெறப்படும்.  முன்னர்
‘வாயிலின் வரூஉம் வகை’ என்றது ஊடற்   பொருள்   பற்றியது.   இஃது
ஏனைய நிகழ்ச்சி பற்றியது என்க.
 

எ - டு :

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்

பைதற வெந்த பாலை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சம் நீடிய பொருளே

(ஐங்-317)
 
இது தலைவி தன்நெஞ்சினைத்  தூது   விட்டமைபற்றித்   தோழியிடத்துக்
கூறியது.
 
மையறு சுடர்துதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே
(ஐங்-474)
 

இது தலைவியின் உளக்குறிப்பறிந்து தான் தூதாகிச் சென்று தலைவனைக்
கொணர்வேன் என்ற பாணன்கேட்பத் தலைவி தோழியிடத்துக் கூறியது.
 

"அறனின்றி அலர்தூற்றும்" என்னும் பாலைக் கலியுள் 

(3)

"வினை வேட்டாய் கேளினி

வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவள்என

ஒல்லாங்குயா மிரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை"

 
எனப்பல்கால் கூறித்தோழி தூதுபட மொழிந்தவாறு கண்டுகொள்க. பிறவும்
இவ்வாறு வருவன கண்டுகொள்க.