சூ. 195 : | தோழி தாயே பார்ப்பான் பாங்கன் |
| பாணன் பாட்டி இளையர் விருந்தினர் |
| கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் |
| யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப |
(52) |
க - து : | இது கற்பொழுக்கத்தின்கண் தலைமக்களைச் சார்ந்து செயலாற்றும் வாயில்களாவார் இவர் எனக் கூறுகின்றது. |
பொருள் : தோழி முதலாகக் கண்டோர் ஈறாகக் கூறப்பெற்ற பன்னிருவரும் மனையறம் பேணும் தலைவன் தலைவியர் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளொடு பிணிக்கப்பெற்ற சிறப்பினையுடைய வாயில்களாவார் எனக் கூறுவர் புலவர். |
தாய் என்றது செவிலியை. தொன்முறைத்தாயும் அடங்கப் பொதுப்படத் தாய் என்றார். பார்ப்பான் என்றது உழையிருந்து நெறிப்படுத்தும் நூல் வல்லோனை. பாட்டி என்றது பண்ணொடு பாடும் மகளிரை. பாட்டி எனினும் பாடினி எனினும் ஒக்கும். விறலி என்றது விறல்பட ஆடும் நாடக மடந்தையரை. கண்டோர் என்றது உடன்போக்கின்கண் கண்டோரும் பரத்தையர் பிரிவின்கண் காண்டோருமாவாரை. |
உடன்போக்குக் கற்பினொடொக்கும் என்பதனான் கண்டோரைக் களவிற்கும் உரியராகக் கூறாமல் கற்பிற்கே உரியராகச் செய்யுளியலின்கண் ஓதுமாறு காண்க. |