சூ. 120 :

தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை

பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப

(28)
 

க - து : 

இது   காறும்   தலைவன்    முதலானோர் களவின்கண் கூற்று
நிகழ்த்துமாறு       கூறி           இச்சூத்திர    முதலாகக்
களவொழுக்கத்திற்குரியவாகவரும்    எஞ்சிய இலக்கணங்களைக்
கூறத்தொடங்கி     இச்   சூத்திரத்தான்    அகனைத்திணைத்
தலைவிக்குரியதோரியல்பு கூறுகின்றார்.
 

பொருள் : தலைவன்பால் தான் கொண்டுள்ள பெருவிருப்பினை அவன்
முன்னர் வெளிப்படையாகக்     கூறுதல் ஆராயுமிடத்து அகனைந்திணைக்
களவிற்குரிய   தலைவிக்கு    மரபில்லை.        ஏனைக்    கைக்கிளை,
பெருந்திணைத்    தலைவியர்  தம்   கூற்றுமொழியான்  அறிதலைஒப்பத்
தலைவன் அறிந்து   கொள்ள  அவ்வேட்கை   புதுக்கலத்துப்   பெய்தநீர்
புறத்தே    பொசிந்து   காட்டுதல்   போலப்   புலப்படும்   உணர்வினை
உடைத்தாகும் என்று கூறுவர் புலவர்.
 

பிறநீர்   மாக்கள்      என்றது   கைக்கிளை,    பெருந்திணைக்குரிய
ஒழுகலாற்றினை    உடையாரை.   அவர்      வேட்கை     அன்பொடு
புணர்ந்ததின்மையான் அவரை மாக்கள் என்றார்.
 

எ - டு :

கவவுங் கடுங்குரையள் காமர் வனப்பினள்

குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே

யாங்குமறைந் தமைகோ யானே ஞாங்கர்க்

கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பின் அன்ன

சாஅய் நோக்கினள் மாஅ யோளே

(குறுந்-132)
 

இதன்கண் ‘தாய்காண்   விருப்பின்      அன்ன   சாய்நோக்கினள்’ எனத்
தலைவியது வேட்கையைத்   தலைவன்   குறிப்பாலுணர்ந்து  கூறியுள்ளமை
காண்க.