சூ. 236 : | தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் |
| மெய்ம்மை யாக அவர்வயின் உணர்ந்தும் |
| தலைத்தாட் கழறல்தம் எதிர்பொழு தின்றே |
| மலிதலும் ஊடலும் அவையலங் கடையே |
(40) |
க - து : | இது கற்புவழிப்பட்ட தலைவியர்க்குரியதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவனுக்குரிய காமக்கிழத்தியர் அவனது புறத்தொழுக்கத்தான் தாம் உற்ற வருத்தத்தைத் தம்பால் வந்து கூறிய வழியும், அவர் கூறாமலேயே அவர்க்கு எய்திய துன்பத்தைப் பட்டாங்கு உணர்ந்த வழியும், தலைவியர் தாம் ஊடலுணர்ந்து மலிதலும், புலந்து ஊடலுறுதலும் ஆகிய அவ்விரண்டுமல்லாதவிடத்துத் தம்மை மகிழ்விக்கத் தலைவன் எதிர்பட்டபொழுதின்கண் கழறி உரைத்தலில்லை. |
எனவே மலிதற்கண்ணும் ஊடற்கண்ணும் கழறியுரைத்தல் மரபென்றவாறாம். |
‘எதிர்பொழுது’ என்றது தலைவன் தம்மை எதிர் ஏற்றுக் கொள்ளும் பொழுதினை. முன்முறை வதுவையும் பின்முறை வதுவையும் பற்றிவந்த தலைவியர்க்கெல்லாம் இம்மரபு பொருந்துமென்பது விளங்கத் "தம்" எதிர்பொழுதின்றே எனப் பன்மையாற் கூறினர். |