|
சூ. 301 : | தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின் | | வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் | | பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப | (25) | க - து : | மேற்கூறிய ஐந்தும் வருமாறு கூறுகின்றது. | பொருள் :தபுதலில்லாத சிறப்பினையுடைய அவ்வியல்புகளை ஆராயின் அவை தொழிலானும், பயத்தானும், உறுப்பானும், உருவானும் பிறப்பானும் வரும் திறப்பாடுடையன என்று கூறுவர் புலவர். | என்றது: விளக்க எடுத்துக்கொண்ட பொருளின் தன்மையை ஏனையுவமமானது வினை, பயன், மெய், உரு. கிழக்கிடு பொருள் என்னும் ஐந்துவகையான் விளக்கிநிற்குமாறு போல உவமப்போலியானது வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என்னும் ஐவகையான் உள்ளுறைப்பொருளை விளக்கி நிற்கும் என்றவாறு. | நோயும் இன்பமும் இருவகைநிலையிற் | காமங் கண்ணிய மரபிடை தெரிய | இருபெயர் மூன்றும் உரிய வாக | உவம வாயிற் படுத்தலும் உவமம் | ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி (பொரு-2) | இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் | உவம மருங்கிற் றோன்று மென்ப | (உவம-30) | என்பவற்றான் உள்ளுறை உவமம் தோன்றுதற்குரிய நிலைக்களம், நோயும் இன்பமும், துனியும் என்பது பெறப்படுதலான் உவமப்போலி நிலைக்களம் பற்றிப் பிறிதுமொரு சூத்திரம் மிகைப்படக் கூறாராயினார் என்க. | சிறப்பு, நலன் முதலாக ஏனையுவமத்திற்குக் கூறிய ஐந்துமே உவமப்போலிக்கும் நிலைக்களம் என்பார் பேராசிரியர். அவை பொருளின்கட் கிடக்கும் பண்புகளாதலின், வரைதல் வேட்கையும், புணர்ச்சி வேட்கையும், பிரிவச்சமும், ஆற்றாமையும், தலைவனது பரத்தைமை காரணமாகத் தோன்றும் புலவியும், துனியும், தலைவனது அருளிப்பாடும் பற்றித் தன்கண் தோன்றும் உள்ளுறை உவமத்திற்கு அவை நிலைக்களமாதல் பொருந்தாமையறிக. |
எ - டு : | 1. வினை : வினையாவது கருப்பொருள் நிகழ்ச்சிகளுள் அவற்றின் தொழில் பற்றித் தோன்றுவதாகும். | | கருங்கோட் டெருமை கயிறுபரிந் தசைஇ | | நெடுங்கதிர் நெல்லின் நாள்மே யலாரும் | | புனல்முற் றூரன் பகலும் | | படர்மலி யருநோய் செய்தனன் எமக்கே | (ஐங்-95) | எனவரும், இத்தலைவி கூற்றினுள் கரணமொடு புணர்த்த கற்புக்கடம் பூண்ட தன்னைத் தலைவன் இகழ்ந்து சென்று பரத்தையரை நுகரும் இயல்பினனாக உள்ளான் என்னும் உள்ளுறைப் பொருள். கருங்கோட்டெருமை ..... ....... மேயலாரும்" என்னும் கருப்பொருளின் தொழிலை உவமமாகக் கொண்டு தோன்றியவாற்றினைக் கண்டு கொள்க. இதன்கண் துனியுறு கிளவி தோன்றிற்று. | 2. பயம் = பயன்.பயனாவது கருப்பொருளின் செயல்களான் அமையும் பயன்பற்றித் தோன்றுவதாகும். | | வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் | தண்ணக மண்ணளை நிறைய நெல்லின் | இரும்பூ வுறைக்கும் ஊரற்கிவள் | பெருங்கவி னிழப்பது எவன்கொ லன்னாய் | (ஐங்-30) | எனவரும் இத்தோழி கூற்றினுள் தலைவன் தன் இனிய மனையிடத்துத்தான் ஈட்டிய செல்வத்தை நிரப்பும் இயல்பினன் அதனான் அவனுக்கு வரைவு நேர்ந்து தலைவி இல்லறப் பயன் கொள்ளச் செய்தல் வேண்டும் என்னும் உள்ளுறைப்பொருள் தண்ணக மண்ணனை ...... ...... ...... இரும்பூவுறைக்கும் - என்னும் பயன்பாடு பற்றித் தோன்றியவாறு காண்க. இதன்கண் இனிதுறு கிளவி தோன்றிற்று. | 3. உறுப்பு : உறுப்பாவது சினை. அஃது ஈண்டு வடிவினை உணர்த்தி நின்றது. எனவே இஃது வடிவுபற்றித் தோன்றுவதாகும் என்பது பெறப்படும். ஏனையுவமத் தோற்றத்தின்கண் மெய் என்றும் ஈண்டு உறுப்பென்றும் கூறியதன் கருத்தாவது. ஆண்டு உறுப்பினையும் ஈண்டு மெய்யினையும் கூட்டிக் கொள்ள வைத்தலாம். | எ - டு : | அகன்றுறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த | | பகன்றைப்பூ உறநீண்ட பாசடைத் தாமரை | | கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தாற் | | றண்கமழ் நறுந்தேறல் உண்பவள் முகம்போல | | வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர | (கலி-8) |
எனவரும், இத்தலைவி கூற்றினுள் பரத்தையர் சேரிக்கண் பாணர் முதலிய வாயிலொடு வந்து தங்கியிருக்கும் விருந்தியற் பரத்தையைப் பொருந்தி நிற்கும் தலைவன் என்னும் உள்ளுறைப் பொருள். அகன்றுறை............ தாமரை, என்பனவற்றின் வடிவு பற்றித் தோன்றியவாறு கண்டுகொள்க. இதன்கண் துனியுறு கிளவி தோன்றிற்று. | 4. உரு : உருவாவது வண்ணம். அது சுவை முதலாகிய பண்புகளையும் அகப்படுத்தி நிற்குமென்பது ஏனையுவம உரையின்கண் விளக்கப்பட்டது. | எ-டு: | ‘வேங்கை தொலைத்த’ என்னும் குறிஞ்சிக் கலியுள், | | நுண்பொறி மான்செவி போல வெதிர்முளைக் | | கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்றே | | மாறுகொண் டாற்றா ரெனினும் பிறர்குற்றம் | | கூறுதல் தேற்றாதான் குன்று | (குறிஞ்சிக்கலி-7) | எனவரும், இத்தலைவி கூற்றினுள் தலைவன் இதுகாறும் வரைதற்கு முயலாமையான் தன் மேனியிற்றோன்றிய வருத்தம் இனி நீங்கிப்பொலிவுறும் என்னும், உள்ளுறைப்பொருள் ‘வெதிர் முளைக் கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்று’ எனப் பாளை நீங்கிய வெதிரின் உருப்பற்றித் தோன்றியவாறு கண்டு கொள்க. இதன்கண் இனிதுறு கிளவி தோன்றிற்று. | 5. பிறப்பாவது குலம் : அது குலப்பிறப்புப் பற்றித் தோன்றுவதாகும். | எ-டு: | கரைசேர் வேழங் கரும்பிற் பூக்கும் | | துறைகே ழூரன் கொடுமை நன்றும் | | ஆற்றுக தில்ல யாமே | | தோற்க தில்லவெம் தடமென் றோளே | (ஐங்-12) | எனவரும், இத்தலைவி கூற்றினுள் பொதுமகளாகிய பரத்தை குலமகளிரைப் போலச் சிறப்புச் செய்து கொண்டு ஒழுகா நிற்பாள், என்னும் உள்ளுறைப் பொருள் ‘வேழம் கரும்பிற் பூக்கும்’ எனச் சாதிப் (பிறப்புப்) பற்றித் தோன்றியவாறு காண்க. இதன்கண் துனியுறுகிளவி தோன்றிற்று. | இனித், "தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத் தவனூர்’’ என்பது (ஐங்-41) என்னும் செய்யுளுள் "தன்பார்ப்புத்தின்னும் அன்பில் முதலை" என்றதனான் தலைவன் கொடுமையும் "வெண்பூம் பொய்கைத்து" என்றதனான் தலைவி பசந்துள்ள நிலைமையும் புலப்படுத்தலின் வினையும் உருவும் ஒருங்குவந்தன. |
|