சூ. 251 :நாலிரண் டாகும் பாலுமா ருண்டே
(2)
 

குறிப்பு : பொருளியைபு கருதி  இரண்டு  சூத்திரங்களுக்கும்  பொருள்
ஒருங்கு கூறப்பெறுகின்றது.
 

க - து :

நாடகநூலார் கூறும் சுவையினது விரியும்  வகையும் தொகையும்
இவை என்கின்றன.
 

பொருள் : அவினயக் கூத்தும் பொருநர்  கூத்தும்  என  இருதிறனாக
நிகழும்  நாடக  வழக்கின்கண்  அமைந்துள்ள  சுவையினது  விரிபொருள்
முப்பத்திரண்டும்  கட்புலனாதற்குப்  பொருந்திய  புறநிலையான்  பதினாறு
எனக் கூறுவர் நாடக நூலார். அவற்றைத் தொகுத்துக்காண  அவை  எட்டு
என்னும் பகுதியாதலும் உண்டு.
 

‘பண்ணை’ என்பது விளையாட்டு.  விளையாட்டாவது  அறிவின்பப்  பயன்
விளைக்கும் ஆடலாகும். வீணாட்டு என்பது  இதன்  எதிர்மறை.  ஆடுதல்
செயலுறுதல். நாவசைத்தலான் பேச்சு  நிகழ்தலின்  பேசுதலை  உரையாட்டு
என்பது   வழக்கு.   எனவே,   உடம்பாலும்   நாவாலும்  ஒரு  பொருள்
விளையுமாறு நிகழும் ஆடல் விளையாட்டென்பது போதரும்.
 

வெறியாட்டு,  களியாட்டு,  உண்டாட்டு  என்பவை  உடம்பு  பற்றியன.
பாராட்டு, சீராட்டு, கோதாட்டு  என்பன  உரை  பற்றியன.  கொண்டாட்டு,
திண்டாட்டு என்பவை உள்ளம் பற்றித் தோன்றி  உடம்பானும் உரையானும்
வெளிப்பாடாவன. ஈண்டு அவையாவும்  தொகுதியாக  அடங்கி  நிற்றலின்
பண்ணை எனப்பட்டது. பண்ணுதல் பண்ணையாயிற்று.
 

"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு"   (உரி-21)   என்பது
உரியியற் சூத்திரம்.  அதனால்  பண்ணை  என்பது  பெயர்ப்  போலியாய்
உரிச்சொல்லாக நிகழுமிடத்து அதன் பொருள் விளையாட்டென்பதாகும்.
 

மற்றைய வினைகள் கெடவருதலின் விளையாட்டிற்குக் ‘கெடவரல்’
என்பதும்   ஒரு    குறியீடாயிற்று.   இதுவும்    உரிச்சொல்   நிலையில் இப்பொருளினதாகும்.   சிற்றில்   இழைத்தல்    முதலியவை   கெடவரல்
என்பதற்கு   ஏற்கும்.   (இவை  பெயர்வினைகட்கு  அடியாக  வருதற்கண்
பொருள் வேறுபடும் என்பதை உரியியல் உரை நோக்கி அறிந்து கொள்க)
 

எண்ணான்கு, நானான்கு, நாலிரண்டு என்பவை  சுவைப்  பொருளையும்
சுவையையும் உணர்த்தி நிற்றலின் இவை எண்ணலளவை ஆகுபெயர்களாம்.
இவற்றை   மெய்ப்பாட்டியலின்கண்   வைத்து   ஓதுகின்றமையான்  இவை
சுவைபற்றியவை என்பது சார்பான் புலப்படும்.
 

எண்ணான்கு பொருளாவன : வீரம்,  அச்சம்,  வியப்பு,  இழிபு, காமம்,
அவலம், நகை, வெகுளி என்னும்  எட்டுக்குணங்களும்;  சுவைப்பொருளும்,
சுவைப்போனும்,    சுவைப்போனது     சுவையுணர்வும்,    சுவைத்தோன்
வெளிப்படுத்தும் விறலும் (சத்துவமும்) ஆகிய நான்கனொடும்  உறழ்தலான்
வருவனவாம்.
 

சுவை வெளிப்பாட்டினை விறல் என்னும் தமிழ்ச் சொல்லானும், சத்துவம்
என்னும்  வடசொல்லானும்   வழங்குப.  ஒரு  பொருளைச்  சுவைத்தவன்
வெளிப்படுத்தும்  விறல்   காண்போரிடத்து  எழுப்பும்   அவ்வுணர்ச்சியே
நாடகநூலார்  கூறும்  சுவை  (ரசம்)  யாகும்.  இச்சூத்திரங்களான்   தமிழ்
நாடகநூலார் கொண்ட சுவை எட்டு என்பதும் புலப்படும்.
 

வடநூலார் ‘சாந்தம்’ என்பதைனைக் கூட்டி  ஒன்பது  (நவரசம்)  என்ப.
அவர்   கூறும்   ஒன்பதாவன:-  வீரம்  பயாநகம்,  அற்புதம்,  பீபத்ஸம்,
சிருங்காரம், கருணா, ஹாஸ்யம், ருத்திரம்,  சாந்தம்  என்பனவாம்.  மற்றும்
ஒரு  சாரார்   வாத்ஸல்யம்,  (அன்பு)  லௌல்யம்  (பொருளாசை)  பக்தி
(பேரன்பு) ஆகியவற்றைக் கூட்டிப் பன்னிரண்டாகக் கொள்வர்.
 

இனி  நானான்காவன : சுவைப்பொருளையும்  சுவைப்போனையும்  ஒரு
கூறாகவும் சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலையும்
ஒரு  கூறாகவும்  தொகுத்துக்  கொள்வதனான்  வருவனவாம்.  காரணம் :
சுவைத்தோன்  சுவைத்த   பொருளும்,  சுவைத்தோனது  உள்ளஉணர்வும்
அரங்கின்கண்   அமர்ந்து    காண்போர்க்குத்   தெற்றெனப்புலப்படாமல்,
சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விறலுமே  புலப்படுதலின்  என்க.
அதனால் தெற்றெனப் புலப்படுமவற்றைக் "கண்ணியபுறன்"  என  விளங்கக்
கூறினார்.
 

நாலிரண்டாகும் பாலாவது;  சுவைத்தோன்   வெளிப்படுத்திய  விறல்
அரங்கின்கண்  இருந்து   காண்போர்  உணர்வோடு  பொருந்தி  நிற்பதே
சுவையாமாதலின் நாடகக்காட்சியைக்கண்டு சுவைப்போரை  அடிப்படையாக
வைத்து  நோக்குங்கால்  அவை  பதினாறும்  எட்டாக  அடங்கிவிடுதலின்
எட்டாக நிற்றலாம்.
 

இங்ஙனம்   எண்வகையாகக்   கோடல்    உய்ப்போனை   விடுத்துக்
காண்போனை   அடிப்படையாகக்   கொள்ளுங்கால்   என்பது   தோன்ற
நாலிரண்டாகும் எனவாளா கூறாமல் ‘பாலுமாருண்டே" என்றனர்.
 

நாடகச் சுவைக்குரிய  காரணப்பொருள்கள்  பண்பும்  செயலும்  பற்றிப்
பலவாக அமையும், தமிழ் நாடகநூலார் அவைபற்றிக் கூறிய தொன்னூல்கள்
காணக்கிடையாமையான்      கடைச்சங்க       காலத்தைச்     சார்ந்தது
எனக்கருதப்பெறும் ஆசிரியர் சாத்தனார் இயற்றியருளிய கூத்துநூல்  நாடக,
நாட்டியச்  சுவைக்குரிய   குணங்களாகவும்   (பொருள்)   இழைகளாகவும்
கூறுவனவற்றை ஈண்டுக் காட்டுதும்.
 

கூத்துநூல்கூறும் குணம்  ஒன்பது :  அவையாவன  அமைதி,  ஊக்கம்,
ஒழுக்கம்,   இச்சை,   சினம்,   குறுக்கு,   மயக்கம்,  தேக்கம்,  திணக்கம்
என்பவையாகும்.
 

இழைகள் நாற்பத்தெட்டு : அவையாவன : கோபம், இச்சை,  சிறுமை,
சோர்வு, படபடப்பு, பாய்ப்புறுதல், அகங்காரம், பற்றுடைமை, வெறுப்புறுதல்,
கொடுமைசெய்தல், எடுத்தெறிந்து  பேசுதல்,  பொறாமை,  தாழ்மையுணர்வு,
பயம்,  தெவிட்டல்,  சோம்பல்,  மகிழ்தல்,  கையாறு,  அமைதி,  மயக்கம்,
களித்தல்,   வெறித்தல்,   பிடிவாதம்,   கவலை,   அழுகை,  நினைத்தல்,
நெட்டுயிர்ப்பு, பேதுறல், உறக்கம், கனவு,  விழிப்பு,  நாணம்,  தெய்வமுறல்,
பேய்மயக்கம், நஞ்சுறல்,  மிதப்பு,  காப்பு,  விதிர்விதிர்ப்பு,  நோக்கியறிதல்,
ஒப்புமை,  அகநோய்,  புறநோய்  சன்னிவெளி,  ஏமாற்றம்,  கொதிப்புறல்,
தயக்கம்,   பசி,    தாகம்    என்பவையாம்   (கூத்துநூல் சூ-29)  மேலும்
இழைகளாகக்  கொள்ளத்தக்கவை   என்ற  முறையில்  அந்நூல்  கூறுவன
வருமாறு
:
 

"தலைமயிர் விடைத்தல் தழைத்தலே தகைத்தல்

நுதல்பட படத்தல் முறுக்கலே மிறுக்கல்

கண்கள் கலத்தல் கடைத்துடி துடித்தல்

விட்டுவிட் டிருத்தல் வெறுமைநோக் குறுத்தல்

மூக்கது அடைத்தல் மூக்கிதழ் நடைத்தல்

வாயிதழ் மடித்தல் பல்கடி கடித்தல்

நாச்சுவை சுழித்தல் நனைத்தலே குழற்றல்

கனங்குழி குழித்தல் கவ்வகம் கடுத்தல்

மெய்ம்மயிர் பொடித்தல் வெப்புறல் வியர்த்தல்

பனிநடுக் குறுதல் பசலையே நமைத்தல்

மார்வகம் மிடைத்தல் வயிறுகிள யுளைத்தல்

கடிக்கடி நொடித்தல் கணைக்கணை கடுத்தல்

ஏணிநோக் கிறுத்தல் இடைக்கிடை சுளித்தல்

மாணிமீக் கொடுத்தல் மோதிநீக் கிருத்தல்

கால்குழை குழைத்தல் கைதழை தழைத்தல்

நச்சுறல் வங்குறல் சொங்குறல் மூச்சை

நோயுறல் பேயுறல் சாவுற லென்ன

பற்பல மெய்யும் பற்பல இழையே" என்பனவாம்.
 

இவற்றுள்  முற்கூறியவை  பெரும்பான்மையும்  பண்பு  பற்றியனவாயும்
பிற்கூறியவை  செயல்   பற்றியனவாயும்  அமைந்திருத்தலைக்  காணலாம்.
இவை யாவும்  நாட்டியக்  கூத்திற்குரிய  சுவைப்பொருள்  பற்றியனவாகும்.
இவற்றுள்   சில    மெய்ப்பாட்டிற்குரிய   பொருளாகத்   தொல்காப்பியம்
கூறுவதனை மேற்காணலாம்.
 

செய்யுளுறுப்பாகிய  மெய்ப்பாடு   பற்றிய   இலக்கணங்கூற  முற்பட்ட
ஆசிரியர்   நாடக   நூலார்  கூறும்  சுவையினை  ஈண்டுச்  சுட்டுதற்குக்
காரணம்  என்னையெனின்?   நகை   முதலாய   மெய்ப்பாடுகள்  எட்டும்
காட்சிஅளவையாகிய நாடகச்  சுவைகளோடு  தொடர்புடையவையாகலானும்
நாடகச் சுவைகளாகிய வீரம், அச்சம்,  வியப்பு,  இழிவு,  காமம்,  அவலம்.
நகை,  வெகுளி   என்பவற்றை  அடிப்படையாகக்  கொண்டே,  முறையே
பெருமிதம்,  அச்சம்,   மருட்கை,  இளிவரல்,   உவகை,  அழுகை,  நகை,
வெகுளி  என்னும்  மெய்ப்பாடுகள்  அமைக்கப்பட்டன  என்பது  புலனாக
வேண்டுதலானும்   நாடகத்   தமிழுக்குரிய   சுவைகளே   இயற்றமிழாகிய
செய்யுட்கண்    பொருள்    புலப்பாடு    செய்யும்   மெய்ப்பாடென்னும்
உறுப்பாக அமைகின்றன என்பதை உணர்த்த வேண்டுதலானும் என்க.
 

மற்றுப் புறத்திணை  ஒழுகலாற்றிற்குரிய  அந்தணர்,  அரசர்  முதலாய
உறுப்பினரையும்  அகத்திணை   ஒழுகலாற்றிற்குரிய  தலைவன்,  தலைவி,
தோழி முதலாய உறுப்பினரையும் அமைத்துச்  செய்யுள் செய்யும் புலவோர்
தம்    கூற்றாகவும்     அவ்வுறுப்பினர்     கூற்றாகவும்    செய்யுளைப்
புனைந்துரைக்குமிடத்துப் பொருளை விளக்கும்  திணையுணர்  வகையாகிய
உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் தோன்றி வருமாறு பற்றி உவமவியலுள்;
ஒருவன் ஒரு பொருளை உவமவாயிலாக விளக்க முற்படுதற்குக் காரணத்தை
இருவகைப்படுத்துக்   கூறுவார்   ஆசிரியர்.   ஒன்று   அப்பொருளிடத்து
அமைந்துள்ள   நிலைமை;     மற்றொன்று    அப்பொருளைப்   பற்றித்
தன்னுள்ளத்து   எழும்   உணர்வு;   இவற்றுள்  பொருளிடத்தமைந்துள்ள
நிலையைச்
 

"சிறப்பே நலனே காதல் வலியொடு

அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப" எனவும்

"கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்" எனவும் கூறுவார்.
 

அப்பொருளைப்பற்றித்   தன்   உள்ளத்து   எழும்   உணர்வென்பது
அப்பொருள் எழுப்பிய சுவையாதலின் எண்வகைச் சுவையும் நிலைக்களமாக
அமையும் என்பார். "நாலிரண் டாகும் பாலுமா ருண்டே" எனக் கூறுவார்.
 

அச்சூத்திரங்களின்   பொருள்   திரிபின்றி   விளங்குதற்   பொருட்டு
ஈண்டுப் பிறன்கோட்கூறல் என்னும் உத்திவகையான்  நாடகத்  தமிழ்நூலார்
கூறும்  சுவையின்   வகை  தொகைகளைக்  கூறினார்  என  அறிக.  பிற
விளக்கங்களை உவமவியலுரையுட் கூறுதும்.
 

இனி, இவ்விரண்டு  சூத்திரங்கட்கும்  உரையாசிரியரும்  பேராசிரியரும்
பெரும்பான்மையும் வடமொழி நாடக  நூலைத் தழுவி  உரைவிளக்கங்கூறிச்
சென்றுள்ளனர்.  நாவலர்  சோமசுந்தர  பாரதியார்  அவர்கள்  மேல்வரும்
மெய்ப்பாடுகளைத் தொகுத்துக் கூறுவதாக உரை செய்துள்ளார்.  பாரதியார்
கருத்து  நூல்  நெறிக்கு  ஒவ்வுமாறில்லை.  பிறவிளக்கங்களை  மேல்வரும்
உரைகளொடு ஒப்பிட்டறிந்து கொள்க.
 

மெய்ப்பாடு நாடகச் சுவையொடு தொடர்புடையது  என்பதை  உணர்த்த
இவ்விரண்டு சூத்திரங்களையும் பிறன்கோட்கூறல் என்னும்  உத்திவகையாற்
கூறி இனி இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாடு பற்றிக் கூறுகின்றார்.