எனவே உவமந்தோன்றுவதற்கு அடிப்படை உள்ளத் துணர்வேயாகலான் சுவைப்போரின் எண்வகைச் சுவையும் நிலைக்களனாக அமையும் என்பது இச்சூத்திரத்தான் உணர்த்தப்பட்டதென அறிக. |
இதனை, உவம நிலைக்களம் பற்றிக் கூறிய "சிறப்பே நலனே" என்னும் சூத்திரத்தின் பின்வைத்து ஒருங்கோதாமல் இங்ஙனம் பிரித்துணர்த்தியமைக்குக் காரணம், சிறப்பு நலன் முதலிய பண்புகள் உவமிக்கப்படும் பொருட்கண் அமைந்து கிடப்பவையாகும். சுவையுணர்வு உவமிக்கப்படும் பொருளின் பண்பும் செயலும் காரணமாக உவமங் கூறுவோனிடத்து அமைந்து வருபவை ஆதலின் பிரித்துக் கூறினார் என்க. |
எ - டு : | 1. நகை : |
| கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை |
| வலித்தகை யரக்கண் வௌவிய ஞான்றை |
| நிலஞ்சேர் மதரணி கொண்ட குரங்கின் |
| செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு |
| அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே |
(புறம்-278) |
இஃது இளஞ்சேட் சென்னி வழங்கிய அருங்கல வெறுக்கைகளைப் பாடினிமார், அணியும் முறையறியாது மாற்றிப் பூண்டமையான் எழுந்த நகையாதலின் இவ்வுவமத்திற்குப் பேதைமை காரணமாக எழுந்த நகை என்னும் சுவை நிலைக்களமாக அமைந்தமை கண்டுகொள்க. |
"களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா நாணி நின்றோள் நிலை கண்டுயானும் பேணி னெனல்லெனோ" என்னும் உவமம் பரத்தையின் அப்போதைய நிலை காரணமாக எழுந்தது. இதற்கு எள்ளல் பற்றிய நகைச்சுவை நிலைக்களமாயினமை கண்டு கொள்க. |
2. உவமம் : | நீர்வார் நிகர்மலர் கடுப்பவோ மறந்து |
| அறுகுளம் நிறைக்குந போல அல்கலும் |
| அழுதல் மேவல வாகிப் |
| பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே |
(அகம்-11) |
என்பது தலைவியின் அப்போதைய நிலையை விளக்க எழுந்த உவமமாதலின் இதற்கு அவலச்சுவை நிலைக்களமாயினமை கண்டுகொள்க. |
3. இளிவரல் : | "வைகுநிலை மதியும் போலப் பையெனப் |
| புலம்புகொள் அவலமொடு புதுக்கவி னிழந்த |
| நலங்கெழு திருமுகம்" |
(அகம்-299) |
என்பது பருவரல் எவ்வமொடு அழிந்த பெருவிதுப்புறுவி பேதுறும் அப்போதைய நிலைகண்டு தலைவன் கூறியதாகலின் இவ்வுவமத்திற்குத் தலைவன் உள்ளத்தெழுந்த மென்மை பற்றிய இளிவரற் சுவை நிலைக்களமாயினமை கண்டு கொள்க. |
பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல |
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு |
(முத்தொள்-88) |
என்பதுமது. தலைவி தன்னெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமை யான் தலைவி சுவைப்போளாயினாள் என்க. |
4. மருட்கை : | அடகின் கண்ணுறை யாக யாம்சில |
| அரிசி வேண்டினே மாகத் தான்பிற |
| வரிசை யறிதலின் தன்னுந் தூக்கி |
| இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் |
| பெருங்களிறு நல்கி யோனே, அன்னதோர் |
| தேற்றா ஈகையும் உளதுகொல் |
(புறம்-140) |
என்பது நாஞ்சில் வள்ளுவனுடைய வள்ளன்மை எதிர்பாரா அளவு உயர்ந்தமை நோக்கிக் கூறியதாகலின் இதற்கு ஒளவையின் உள்ளத்திலெழுந்த பெருமை பற்றிய மருட்கைச்சுவை நிலைக்களமாயினமை அறிக. |
யாமும் காதலெம் அவற்குஎனச் சாஅய்ச் |
சிறுபுறங் சுவையினெ னாக, உறுபெயல் |
தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் |
மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்தே |
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. |
(அகம்-26) |
என்பது, ஊடிச் சென்ற நெஞ்சு கூடலை நோக்கி நெகிழ்ந்தமை நோக்கித் தலைவி கூறியதாகலின் இதற்கு ஆக்கம் பற்றிய மருட்கைச்சுவை நிலைக்களமாதலை அறிக. |
5. அச்சம் : | கானக நாடன் வரூஉம், யானைக் |
| கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறநெறி |
| மாரி வானந் தலைஇ நீர்வார்பு |
| இட்டருங் கண்ண படுகுழி இயவின் |
| இருளிடை மதிப்புழி நோக்கி அவர் |
| தளரடி தாங்கிய சென்றது....... |
(அகம்-128) |