சூ. 171 :

நிலம்பெயர்ந் துரைத்தல் அவணிலை யுரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய

(28)
 

க - து :

கூத்தர்க்கும் பாணர்க்கும் ஒப்ப உரிய கிளவிகள் ஆமாறு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்   தான்    மேற்கொண்ட   வினை நிகழ்த்தும்
அயலிடத்தின்கண்   சென்று  தம்   நகரது   நிலைமையைத்  தலைவற்கு எடுத்துக்  கூறுதலும், மீண்டு வந்து சேய் நிலத்தின்கண் உள்ள தலைவனது
நிலைமையைத்    தலைவியிடத்துக்   கூறுதலும்   நூலோர்யாத்தவாற்றான்
கூத்தர்க்கும் பாணர்க்கும் உரியவாகும்.
 

இக்கிளவிகள்   புறத்திணை   மாந்தராகிய   தூதர்க்கும்   ஒற்றர்க்கும்
உரியவாயினும்    அகத்திணைக்கண்     கற்பிற்குரிய       வாயில்களுள்
இவ்இருவர்க்கும்  ஏற்கும்   எனப்  பொருள்  நூலோர்  அமைத்துள்ளமை
விளங்க ‘யாத்தவை’ என்றார்.
 

இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை நூலொடு பொருந்து மாறில்லை.
இனி, வினைமேற்  சென்ற தலைவன்பால் தலைவியது நிலையை உரைப்பின்
அவன் செய்வினைக்கண்  கலக்கமுறுமாதலின்  வினை முடித்த பின்னல்லது
தலைவியின் பிரிவாற்றாத  நிலையைப் பாசறை முதலிய இடங்களிற் கூறுதல்
புலனெறி  வழக்காகாமையின் இளம்பூரணர்  கருத்து ஆராய்தற்குரியதாகும்.
அவர் காட்டிய கலிப்பாட்டு (கலி-30)  வினைமுற்றிய பின் தலைவனிடத்துக்
கூறியதாகும்.
 

பாணராவார்  பல்வகை  யாழினும் இசையமைத்துப்  பண்ணொடு பாடும்
கலைவல் மாந்தர். எடுத்துக்காட்டு வந்துழிக்கண்டு கொள்க.