பொருள் : கற்பொழுக்கத்து நிகழும் புலவித்தகவின்கண் தலைவன் தாழ்ந்து பணிந்தொழுகுதலேயன்றித் தன் வேட்கை மிகுதியான் தலைவியது வனப்பினைப் புனைந்து ஏத்துதலை நூலோர் நீக்காது கொள்வர்.
நிகழ்தகை என்றது மேற்கூறிய புலவிக்காலத்து நிலையினை. பணிந்த கிளவியே (கற்-13)யன்றிப் புகழ்ந்துரைத்தலும் பொருளியல் மரபு என்றவாறு.
"தடமருப் பெருமை" என்னும் நற்றிணையுள்
(120)
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அம்துகில் தலையில் துடையினள் நுப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை"
எனப் புகழ்ந்து தலைவன் தன்னெஞ்சிற்குக் கூறியவாறு காண்க.