க - து : | உலகியலால் பல்வேறிடங்களில் பல்வேறு மக்களிடத்து அரியவும் பெரியவுமாக நிகழும் ஒழுகலாறுகளைத் தொகுத்து நான்மறைப் பயன்கருதி நல்லிசைப்புலவோரான் செய்யப்படும் செய்யுள் வழக்கிற்கு ஏற்பன கொண்டு ஏலாதனவற்றை நீக்கி லோரான் அமைக்கப் பெற்ற நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்காகிய அகத்திணைக்கண், சுட்டி ஒருவர் பெயர் பற்றாமல் எஞ்ஞான்றும் ஒரு நிலையினராக அமைத்து ஓதப்பெறும் தலைமக்கட்கு உரியவாக வரையப்பெற்ற புகுமுகம்புரிதல் முதலாய பொருள்கள் யாவும் மக்களின்பால் ஆங்காங்கே நிகழ்வனவேயாகும். ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாகக் கூறப்பெற்ற பிறப்பு முதலாய சால்புகளேயன்றிச் சாலாத பிற குணங்களும் செயல்களும் மக்கள்பால் அமைந்து கிடத்தல் இயற்கையாதலின் அவை பற்றியும் மெய்ப்பாடுகள் தோன்றுமன்றே? அவ்வழிச சாலாதபண்பும் செயலுமாயவற்றுள் ஒருசார் பொருள்கள் அகனைந்திணைக்குரிய தலைமக்கட்கு ஒவ்வாமையான நல்லிசைப் புலவோர் செய்யுள் யாக்குமிடத்து அவற்றைத் தவிர்த்தல் வேண்டுமென்பாராய் ஆசிரியர் இச்சூத்திரத்தான் இன்னவை இன்மை வேண்டுமென விதிக்கின்றார். |
பொருள் : நிம்பிரி முதலாக ஒப்புமை யீறாகக் கூறப்பெற்ற பத்துப் பொருளும் மெய்ப்பாட்டுப் பொருளாதற்கு இன்மை வேண்டும் எனக் கூறுவர் புலவர். |
1. நிம்பிரியாவது : நேயமின்மை. அஃதாவது வெறுப்பு. இச்சொல் நேம்-பிரி (நேம் - நசை. பிரி - பிரிதல் - நீங்குதல்) என்னும் இரு உரியடிகளான் அமைந்ததொரு திரிசொல்லாகும். |
இதற்குப் பொறாமை - அஃதாவது பொறுத்தலின்மை எனப் பொருள் கொள்வர் உரையாசிரியன்மார். இளம்பூரணர் வெறுப்பு என்னும் பொருளே கொண்டனர். |
இஃது ஒன்றனைச் சிறப்பிக்குங் குறிப்பொடு கூறுதற்கண் வருவதற்கும் ஏற்கும் எனப் பொருளியலுள் ஆசிரியர் "சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையும் சிறப்பொடு வருமே" (பொரு-51) எனக் கூறியுள்ளமையான் அறிக. |
2. கொடுமையாவது : இரக்கமின்மை. அஃதாவது சொல்லானும் செயலானும் உயிர் நடுங்கும் வகை துன்புசூழ்தல். |
3. வியப்பாவது : தமது வனப்பும் வளமும் சிறந்தவையாகக் கருதித் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டொழுகுதல். |
வியத்தல் - புகழ்தல். இதனைப் பெரியோரை வியத்தலுமிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே (புறம்-192) என்பதனானறிக. |
4. புறமொழியாவது : தமது உள்ளத்தும் இல்லத்தும் நிகழ்வனவற்றைப் புறத்தார்க்குப் புலனாமாறு பேசுதல். இது குலனுடையார்க்கு ஒவ்வாத செயலாகலின் விலக்கப்பட்டது. |
இதற்குப் புறங்கூறுதல் எனப்பொருள் காண்பார். அஃது எல்லோர்க்கும் பொதுவாக விலக்கப்பட்டுள்ள குணமாதலின் காதலர்க்குச் சிறந்துரிமையாகாமை உணர்க. |
5. வன்சொல்லாவது : குடிமைக்கொவ்வாத கடுஞ்சொற்களைக் கிளத்தல். அஃது அன்பினைத் தேய்க்கும் அரமாதலின் விலக்கப்பட்டது. |
இன்சொல், வாய்ச்சொல் என்பவை தலைமகற்கும், மென்மொழி, சின்மொழி, பணிமொழி, கனிமொழி, தேமொழி என்பவை தலைமகட்கும் உரியவாகச் சான்றோர் ஓதுதலையறிக. இவற்றிற்கு மாறுபட்டது வன்சொல் என்க. |
6. பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால் கடைப்பிடியின்றி நெகிழ்ந்து விடுதல். இது நிறுத்த காமவாயிற்கு ஊறு செய்வதாகலின் விலக்கப்பட்டது. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் ஒக்கும். |
7. மடிமமையாவது : கடப்பாடாவனவற்றைக் காலத்தொடு புரியாமல், சோம்பியிருத்தல். இது காமச்செறிவிற்கு ஒவ்வாமையான் விலக்கப்பட்டது. |
8. குடிமையின்புறலாவது : தத்தம் குடிமைச் சிறப்பினை உயர்வாக எண்ணிச் செருக்கிக் களித்தல். இது மற்றவர் குடிமையை இகழும் குறிப்பாக அமைதலின் காதலுணர்வைச் சிதைக்கும் என விலக்கப்பட்டது. |
இதனை இரண்டாக எண்ணுவர் பேராசிரியர். இரண்டாயின் இரண்டும் வேண்டப்படும் பொருளாதலன்றி விலக்கப்பாட்டிற்கு ஒவ்வாமையறிக. இன்புறல் என்பதற்கு அவர் கூறும் பொருள் உடற்கூறு பற்றியதன்றிக் குணம் பற்றியதாகாமையும் அறிக. |
9. ஏழைமை மறப்பாவது : பணிவுடைமையை மறந்தொழுகுதல். ஈண்டுப் பணிவென்பது அன்பிற் கெளியராதல், மதிக்கத் தக்கார் மாட்டு மேலாளர் மாட்டும் தம்மை அடியேன், ஏழையேன், சிறியேன் எனப் பண்புடையோர் கூறிக் கொண்டொழுகும் வழக்கினைக் கண்டு கொள்க. |
ஏழைமையை மறந்தவழி உள்ளத்தே தலைமைச் செருக்கு மீதூருமாகலின் அது காதற்கேண்மைக்கு ஒவ்வாமையான் விலக்கப்பட்டதென்க. மற்று, இதனைத் தலைவிக்கே உரியதாகக் கொண்டு ஏழைமை, அறிவின்மை. அஃதாவது பேதைமை மறப்பு எனப்பொருள் கோடலுமாம். |
இதனையும் இரண்டாகக் கொள்வர் பேராசிரியர். மறப்பு, மறவி என்பார் அது பொச்சாப்பு எனமேல் விலக்கப்பட்டமையான் கூறியது கூறலாதல் காண்க. |
10. ஒப்புமையாவது : ஒருவரை ஒருவர் வடிவானும் வனப்பானும் பிறரொடு ஒப்பிட்டு நோக்குதல். அஃதாவது இன்னாளை ஒப்பாள் இவள் எனத்தலைவனும் இன்னானை ஒப்பான் இவன் எனத்தலைவியும் கருதுதலாம். அந்நோக்கு அறக்கற்பிற்கு ஒவ்வாத பண்பாகலின் விலக்கப்பட்டது. |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
யாருள்ளி நோக்கினீர் என்று |
(குறள்-1320) |
எனத் தலைவியின் இல்லது காய்தல் பற்றி வரும் கூற்றில் இப்பொருள் வந்தவாறு கண்டுகொள்க. |
இவை இன்மை வேண்டுமென்றதனான் அகனைந்திணை பற்றிய நல்லிசைப் புலவோர் செய்யுட்கண் உதாரணம் காணல் கூடாமை தெரிக. |
இனி, இவை சுட்டி ஒருவர் பெயர் கூறி ‘உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்துச் செய்யப்படும் தொடர்நிலைச் செய்யுட்கண் ஒரோவிடத்து வருமாறும் உலக வழக்கின்கண் ஆங்காங்கே நிகழுமாறும் நோக்கி இவற்றைத் தெரிந்து கொள்க. |