சூ. 252 :

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப

(3)
 

க - து :  

தமிழியலார்   கூறும்   செய்யுளுறுப்பாகிய  மெய்ப்பாடுகளின்
பெயரும் தொகையும் கூறுகின்றது.
 

பொருள் : மெய்ப்பாடாவன    நகையும்,   அழுகையும்,  இளிவரலும்,
மருட்கையும்,  அச்சமும்,  பெருமிதமும்,  வெகுளியும்,  உவகையும்  என்று
சொல்லப்பட்ட அப்பகுதி எட்டே எனக்கூறுவர் புலவர்.
 

நகையே  என்பது   எண்ணேகாரம்.  எட்டே  என்பது  தேற்றேகாரம்.
அப்பால்   என்றது   நகை  முதலாகப்   பகுத்தவற்றை.  இக்குறியீடுகளும்
தொகையும் தொல்லோர் வகுத்தவை என்பது தோன்ற "என்ப" என்றார்.
 

1. நகையாவது முறுவலித்தல். அஃது புன்முறுவலும்  நன்முறுவலும் என
இருதிறப்படும்.  நகையெனினும்   மூரல்  எனினும்  ஒக்கும்.  (வன்முறுவல்
வெகுளிபற்றிப் பிறத்தலின் அதனை வேறாகக் கொள்க)
 

2. அழுகையாவது அவலித்தல். அது கண்கலுழ்தலும், துயர் உறுதலுமாக
நிகழும். தனக்குற்ற இடர்  காரணமாக  வரும்  அழுகை  நொந்தழுதலாம்.
பிறர்க்குற்ற இடர் காரணமாக வரும் அழுகை இரங்கியழுதலாம்.
 

அழுகை, அவலம், இரக்கம், துயரம் என்பவை ஈண்டு  ஒத்த பொருளில்
வரும். பெருமிதம் பற்றி வரும் உவகைக்கலுழ்ச்சி அழுகையாகாதென்றறிக.
 

3. இளிவரலாவது இழிவுறுதல்.  இகழ்வுறுதல்  எனினும்  ஒக்கும்.  அது
கொள்ளுதற் கொவ்வாக் குறையும் மனக்குறையும் பற்றிவரும் துன்பமாம்.
 

4. மருட்கையாவது வியப்புறுதல். அஃது  ஆராய்ச்சிமுட்டுப் பாடுற்றவழி எய்தும் அறிவு இயங்காநிலையாகும்.
 

5. அச்சமாவது  பருவரலிடும்பை நேருங்கொல்  என எண்ணி  உள்ளம்
மெலிதலாம். பயம் என்பது உலகவழக்கு.
 

6. பெருமிதமாவது  வீறு.  அஃது  அறிவும்  ஆற்றலும்  மிக்க  விடத்
தெய்தும் மனநிலை (பெரும்மிதம்-பெருமிதம், மிதம்-அளவு)  வீரம்  என்பர்
உரையாசிரியன்மார். பெருமிதத்திற்குக் காரணமான  பொருள்களுள் தறுகண்
என்பது மட்டுமே வீரம் எனற்குத் தகுமாதலின்  வீரம் வேறு;  வீறு  வேறு
என அறிக.
 

7. வெகுளியாவது  சினத்தல்.  சீற்றம்   எனினும்   ஒக்கும்.  இச்சொல்,
வேகும்-உள்-இ. என்னும் உரியடிகளாற் பிறந்த பெயராகும்.
 

8. உவகையாவது  உவத்தல்.  அஃதாவது  இனிமையொடு  திளைக்கும்
உள்ளக்களிப்பு. மகிழ்வெனினும் ஒக்கும்.
 

இனி, இவற்றை இங்ஙனம் நிரல்படவைத்தமைக்கு ஒருவாறு அமைதி
கூறும்.
 

உணர்தற்கு   எளியதும்  யாவர்க்கும்  ஒப்பதும்பற்றி  நகை  முதற்கண்
வைக்கப்பட்டது. அவ்வாறே அமைந்து நகைக்கு  மறுதலையாக  வருதலின்
அழுகை அதன்பின் வைக்கப்பட்டது.
 

அழுகையொடு  இயைபுடைமையானும்   இளநிலை  அறிவு  காரணமாக
எய்துதலானும் இளிவரல்  அதன்பின்  வைக்கப்பட்டது.  நிரம்பா  அறிவும்
ஆய்விலா   நிலையும்  பற்றி  வருதலின்  இளநிலை  அறிவான்  எய்தும்
இளிவரலுக்குப்பின்   மருட்கை   வைக்கப்பட்டது.   தளர்நிலை   அறிவும்
மெலிநிலை உள்ளமும் காரணமாக  வரும்  அச்சம்  ஆய்விலா  அறிவான்
வரும்  மருட்கைப்பின்  வைக்கப்பட்டது.  அச்சத்திற்கு  மறுதலையாகலின்
பெருமிதம்  அதன்பின்   வைக்கப்பட்டது.  பெருமிதத்திற்கு  வரும்  ஊறு
காரணமாக   வரும்  வெகுளி   அதன்பின்  வைக்கப்பட்டது.  யாவரானும்
விரும்பப்படுதலானும் அறிவானும் ஆற்றலானும் நிரம்பி நிற்றலானும் உவகை
இறுதிக்கண் வைக்கப்பட்டது.
 

அன்றிச்   சான்றோர்   செய்யுட்களுள்   ஒன்றின்   ஒன்று   மிக்குப்
பயின்றுவரும்  சிறப்பு  நோக்கி  வைக்கப்பட்டன;  எனினும்  தொல்லோர்
அமைத்தமுறை எனினுமாம்.
 

பேராசிரியர்  இளிவரலுக்குப்பின்  மருட்கையும்  அதன்பின்  அச்சமும்
வைக்கப்பட்டமைக்குக் கூறும் காரணம் நிறைவு தருவதாக  இல்லை.  மற்று
இவற்றைச் சுவை  என  வழங்கினும்  அமையும்  என்பார்  அவர்.  சுவை
நாடகத்தமிழுக்குரியது.    மெய்ப்பாடு     இயற்றமிழுக்குரியது    என்பது
மேல்விளக்கப் பட்டமையான் அது பொருந்தாமை புலனாகும்.
 

இனி,   இவ்    எண்வகை     மெய்ப்பாடுகளும்    தோன்றுதற்குரிய
அடிப்படைப்பொருகள்    பலவாயினும்    அவற்றுள்   அகத்திணைக்கும்
புறத்திணைக்கும்      பொருதுவனவாய்ச்     சிறப்பாக     வருவனவாய்
உள்ளவற்றைத் தொகுத்து  ஒவ்வொன்றற்கும் நான்கு நான்கு பொருள்களை
விதந்து கூறுகின்றார்.