சூ. 105 :பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப
(13)
 

க - து :

களவொழுக்கத்தின்கண்      தலைவற்குரியவென    மேற்கூறிய
கிளவிகளுள் பாங்கர் (பாங்கன் - தோழி)    கூட்டத்திற்குரியவை
இத்துணை     எனவும்    அவை      அவ்      இருவகைக்
கூட்டத்திற்கும் ஏதுக்களாம் எனவும் கூறுகின்றது.
 

பொருள்மெய்தொட்டுப்    பயிறல்   முதல்    மடன்மா  கூறுதல்
இறுதியாக    மேற்கூறப்பட்ட   கிளவிகளுள் பாங்கராற் கூடும் இருவகைக்
கூட்டத்திற்கும் நிமித்தமாக நிகழும் கிளவிகள் பன்னிரண்டு   எனக்கூறுவர்
நூலோர்.
 

அஃதாவது மேற்கூறிய இருபத்தொரு கிளவிகளுள் மெய்தொட்டுப்பயிறல்
முதலாக உள்ள இருநான்கு கிளவியும் இயற்கைப் புணர்ச்சிக்கும்  பெற்றவழி
மகிழ்தல் இடந்தலைப் பாட்டிற்கும் உரியவாம் எனவும்,பிரிந்தவழிக் கலங்கல்
முதல் மடன்மா கூறுதல் வரையுள்ள பன்னிரண்டு   கிளவிகளும்   பாங்கர்
கூட்டத்திற்கு உரியவாம் எனவும்  வகைப்படுத்தி  இயற்கைப் புணர்ச்சிக்கும்
இடந்தலைப்பாட்டிற்கும்   துணைக்   காரணம்   பாலதாணை    எனவும்,
மெய்தொட்டுப்   பயிறல்  முதலிய   ஏழும்  நிமித்த காரணமாம் எனவும்,
ஏனைய   இருகூட்டங்கட்கும்   பாங்கர்   துணைக்   காரணம்   எனவும்
உணர்த்தியவாறு.
 

இவற்றை   ஏழுதிணைக்கும்   உரிமைப்படுத்திப்  பின்வரும்    மூன்று
சூத்திரங்களான் கூறுவார்.