சூ. 265 : | பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல் |
| ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் |
| கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ |
| எடுத்த நான்கே நான்கென மொழிப |
(16) |
க - து : | பாராட்டெடுத்தல் முதலியவை நான்காம் கூறு என்கின்றது. |
பொருள் :பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பது உட்படக் கூட்டிக் கிளந்து சொல்லிய நான்கு பொருளும் நான்காம் கூறு என மொழிவர் ஆசிரியர். |
இவை களவியலுள் கூறிய தெளிவகப்படுத்தல் (கள-10) சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் (கள-11) நொந்து தெளிவொழிப்பினும், அச்சம் நீடினும், தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும், களவறிவுறினும் எனவரும் கிளவி முதலியவற்றிற்கு உரியவாக நிகழும் மெய்ப்பாடுகட்குரிய பொருள்களாகும் என்பது தோன்ற "எடுத்த நான்கு" என்றார். |
1. பாராட்டெடுத்தலாவது :புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக் காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நல முதலியவற்றைப் பரக்கப் பேசுதல். |
தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும் |
| காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் |
| நாணு மடனும் பெண்மைய வாகலின் |
| குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை |
| நெறிப்பட வாரா அவள்வயி னான |
(கள-18) |
என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்பட நிகழும் என்க. |
எ - டு : | கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி |
| காமஞ் செப்பாது கண்டது மொழிமோ |
| பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் |
| செறியெயிற் றரிவை கூந்தலின் |
| நறியவு முளவோ நீஅறியும் பூவே |
(குறு-2) |
என்பது தலைவன் தலைவியைப் பாராட்டியது. |
| நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று |
| நீரினும் ஆரள வின்றே சாரற் |
| கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு |
| பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே |
(குறு-3) |
என்பது தலைவி பின்னொரு காலத்துத் தோழியிடத்துத் தலைவனைப் பாராட்டிய பாராட்டு. இந்நுட்பந் தோன்றப் பாராட்டுரைத்தல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார் என அறிக. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
2. மடந்தப உரைத்தலாவது :பெதும்பைப் பருவத்து முற்றி நின்ற மடப்பம் சிறிது நீங்கத் தலைவி அளவோடு பேசுதலாம். மடம் பெண்மைக்குரிய குணனாகலான் இது தலைவற்குரித்தன்மை புலப்படும். இது பெரும்பான்மையும் தலைவிக்குத் தோழியை நோக்கியதாக நிகழும். |
எ - டு : | அன்னாய் வாழி வேண்டன்னை என்னை |
| தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின |
| பொன்வீ மணியரும் பினவே |
| என்ன மரம்கொல் அவர்சா ரலவ்வே |
(ஐங்-20) |
இதன்கண் தலைவி செவிலிக்குத் தன் களவொழுக்கத்தைப் புலப்படுத்துமாறு தோழியிடம் கூறும் மடனழிவு கண்டு கொள்க. |
| எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் |
| தனிக்குரு குறங்குந் துறைவற்கு |
| இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே |
(ஐங்-144) |
இதன்கண் தலைவற்கு வரைவு கடாதல் முகத்தான் தலைவி கூறி மடனழிய நின்றவாறு கண்டு கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
3. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலாவது : நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் மாறுபட்டமையானும் அறிமடம் நீங்கிய உரையானும் தலைவியைச் செவிலியும் நற்றாயும் ஐயுற்றவழிக் கூறும் கடுஞ்சொற்களை மறாது ஏற்றுப் புறத்தார்க்கு இது புலனாங்கொல் எனக் கருதித்தலைவி நாணுதல். |
இனி, நசையிலாப் பழிச்சொற்களை ஏற்றிக் கூறும் அம்பல் மகளிரின் அலருக்கு நாணுதல் எனப்பொருள் கோடலுமாம். இப் பொருட்கு "ஏற்றலர்" என்பது வினைத்தொகை மொழியாகும். |
எ - டு : | யானே ஈண்டைய னேஎன் னலனே |
| ஆனா நோயொடு கான லஃதே |
| துறைவன் தம்மூ ரானே |
| மறைய லராகி மன்றத் தஃதே. |
(குறு-97) |
எனவும் |
| கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி |
| அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச் |
| சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே |
| வாய்க்கதில் வாழி தோழி ..... |
(அக-347) |
எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கொடுப்பவை கோடலாவது : தலைவனாற் கொடுக்கப்பெறும் தழையும் கண்ணியும் தாரும் மாலையும் ஆகிய கையுறைகளை ஏற்றுக்கோடல். |
எ - டு : | பெரும்புலர் விடியலின் விரும்பப் போத்தந்து |
| தழையுந் தாரும் தந்தனள் இவன்என |
| இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் |
| தைத்திங்கள் தண்கயம் படியும் |
| பெருந்தோட் குறுமகள் ..... |
(நற்-80) |
எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
"எடுத்த" என்றதனான் கொடுப்பவை கோடற்குத் தடுமாறலும் இதன்கண் அடங்குமெனக் கொள்க. அவ்வழி அஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். |