பொருள் : உவமத்தை அதனான் விளக்கப்படும் பொருளொடு அமைத்து வேறுபடக் கூறாமல் உவமமாகப் பிறப்பிக்கும் பொருளொடு ஒருங்கமையக் கருதிக் குறிப்பாற் பொருள் விளக்கும் இலக்கண நெறியானே உவமங் கூறுமிடத்துத் துணியும் உணர்வுடையோர் கொள்ளின் அத்துணிவின்கண் உவமப் போலியானது உள்ளுறைப் பொருள் உணருமாறு வரும். |
‘படாது’ என்பது படுத்தாது எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. ‘படாது’ என்பதற்கும் ‘கூறுங் காலை’ என்பதற்கும் செயப்படுப்பொருள் வருவிக்கப்பட்டன. ‘வரும்’ என்பதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ‘துணிவு’ என்பது எண்ணித் துணிக கருமம் என்புழிப் போல மேற் கொள்ளுதலை உணர்த்தி நின்றது. |
அகத்திணையியலுள் "உள்ளுறுத் திதனொடு ஒத்துப் பொருள் முடிகென உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம்" என அதன் இலக்கணம் கூறப்பட்டமையின் அதனைச் சுட்டி ஈண்டுப் ‘பிறிதொடு படாது’ என்றும் "உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே’’ (அகத்-50) என்றதனான் அக் கருப்பொருள்களைச் சுட்டிப் "பிறப்பொடு நோக்கி" என்றும் இஃது உவமம் இதனான் தோற்றுவித்து விளக்கப் பெறும் பொருள் இதுவென்பது கூறுவோரது குறிப்பினாற் பெறப்படுதலானும் அக்குறிப்பு மரபினைத் தழுவி நிற்றல் வேண்டுமாகலானும் "முன்ன மரபிற் கூறுங் காலை" என்றும் இஃது உள்ளுறை; இஃது இறைச்சி என்றாங்கு உய்த்துணர்வார்க்கன்றி உள்ளுறையானது செவ்விதின் விளங்காமையான் "துணிவினோர் கொளினே’’ என்றும் கூறினார். |
எ - டு : | கரும்பு நடுபாத்தியிற்............. சிதைப்பதுவே (ஐங்-65) |
| இதற்கு விளக்கம் மேற்கூறப்பட்டது |
இச்சூத்திரத்திற்குப் பேராசிரியரின் உரையை நோக்குமிடத்து அவரும் "முன்ன மரபின்" என்றே பாடங் கொண்டமை புலனாகும். இதற்கு இளம்பூரணர் கூறும் உரையும் எடுத்துக்காட்டுக்களும் "வேறுபட வந்த உவமத் தோற்றம்" என்னும் சூத்திரத்துள் அடங்கும். |