சூ. 150 :

புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து

இடைச்சுரத் திறைச்சியும் வினையும் சுட்டி

அன்புறு தக்க கிளத்தல் தானே

கிழவோன் செய்வினைக்கு அச்ச மாகும்

(7)
 

க - து:

தலைவன் வினைமேற்   பிரியக்கருதியவழித்   தலைவியிடத்து
நிகழ்வதொரு கூற்றுப்பற்றிய இலக்கணங் கூறுகின்றது.
 

பொருள் : களவின்கண்  தலைவனொடு கூடி உடன்போக்கு நிகழ்த்திய
தலைவி   கற்பின்கண் மனையிலிருந்து முன்னர்  உடன் போயவழி இடைச்
சுரத்தே தலைவனொடு கண்ட கருப்பொருள்களின் செயலையும்  தலைவன்
புரிந்த வினைகளையும் குறித்து அவற்றுள்  தலைவன்  அன்பு   கூர்தற்குத்
தக்கனவற்றைத் தலைவி கிளந்து கூறுதல் தலைவன் மேற்கொள்ள நினையும்
தொழிற்கு அச்சம் பயப்பதாகும்.
 

இறைச்சியின் இலக்கணமும் விளக்கமும் பொருளியலுள்  கண்டுகொள்க.
‘செய்வினை’    எதிர்காலவினைத்      தொகை.   அச்சமாவது-  இத்தகு
காதலுடையவள் தான்  வினைமுடித்து    வருமளவும்    ஆற்றியிருப்பாள்
கொல்லோ என அழுங்குதலாம்.
 

எ - டு:

கான யானை தோல்நயந் துண்ட

பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை

அலங்கல் உலவை ஏறி ஒய்யெனப்

புலம்புதரு குரல புறவுப் பெடைபயிரும்

அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்

சேர்ந்தனர் கொல்லோ தாமே யாம்தமக்கு

ஒல்லேம் என்ற தப்பற்குச்

சொல்லா தகறல் வல்லு வோரே

(குறு-79)
 

இது முன்னர்   இடைச்சுரத்துக்   கண்ட   கருப்பொருள்களின்   நிகழ்ச்சி.
இதனான்   புறவின்   காதலை    உணர்த்துவாளாய்த்    தன்னிலையைப்
புலப்படுத்தினாளாவாள்.
 

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்

வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்கு

அலமரல் வருத்தந் தீர யாழநின்

நலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்

      

பொரிப்பூம் புன்கின் அழல்தகை ஒண்குறி

சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி

நிழல்காண் தோறும் நெடிய வைகி

மணல்காண் தோறும் வண்டல் தைஇ

வருந்தா தேகுமதி வால்எயிற் றோயே

மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்

நறுந்தண் பொழில கானம்

குறும்பல் ஊரயாம் செல்லு மாறே

(நற்-9)
 

இது முன்னர்த் தலைவி தலைவனொடு உடன்   போயவழித் தலைவன் தன்
ஆராக் காதல் மீதூரக் கூறினவும் புரிந்தனவுமாம். அவற்றைக்கூறுவாளாய்த்
தன் மென்மையைப் புலப்படுத்தினாளாவாள்.
 

இக்கிளவி களவின்கண் உடன்போய தலைவிக்கு மட்டுமே உரியதாகலின்
பிரித்துக் கூறினார் என்க.
 

நச்சினார்க்கினியர் இது     தலைவன்   மேற்கொண்ட     காரியத்தை
முடித்தலாற்றான்கொல் எனத் தலைவி அஞ்சும் அச்சமாம் என்பார். பிரிவை
விரும்பாத தலைவிக்கு அஃதியல் பாகாமையறிக.