சூ. 256 :

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே

(7)
 

க - து :

புதுமை முதலிய நான்கும் பற்றி மருட்கை பிறக்குமென்கின்றது.
 

பொருள் :அறிவு,     நிறையாவழித்தாகும்    மருட்கை    என்னும்
மெய்ப்பாட்டிற்குக்   காரணமாகிய   பொருள்,   புதுமையும்  பெருமையும்
சிறுமையும் ஆக்கமுமாகிய நான்கும் எனக் கூறுவர் புலவர். ஒடு  எண்ணுப்
பொருட்டாய் வந்தது. ஏகாரம் ஈற்றசை.
 

‘மதிமை சாலா’ என்றது யாதொரு பொருள்  மருட்கை  செய்கின்றதோ
அப்பொருள்   பற்றிய   அறிவு   நிரம்பாமையாம்.   மருட்கை  எனினும்
வியப்பெனினும்  இறும்பூதெனினும் ஒக்கும். அற்புதம்  என்பது  வடசொல்.
இவையும் மேலன போல இருபாலும் பற்றி வரும்.
 

1. புதுமையாவது :அதுகாறும்  காணாததைக்  காண்டலும்  நிகழாதது
நிகழ்தலுமாம்.
 

எ - டு :

நீங்கிற் றெறூஉம் குறுகுங்காற் றண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றா ளிவள்

(குறள்-1104)
 

என்றது தன்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

................... பெருந்தேர் யானும்

ஏறிய தல்லது வந்த வாறு

நனியறிந் தன்றோ விலனே

.................. இல்வயின் நிறீஇ

இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே

(அகம்-384)
 

என்பது பிறர்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

2. பெருமையாவது :அளவையின் இகத்து கழியப் பெரிதாயினது எனக்
கருதிக் கோடலாம். (பெருமை - பெருக்கம்)
 

எ - டு :

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு

(குறள்-1127)
 

கையான் முகக்குமளவிற்குப்  பெருகிற்றென்றலின் இது தன்கண் நிகழ்ந்த
பெருமைபற்றிப் பிறந்த மருட்கையாம்.
 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று

(குறள்-1146)
 

ஒரு    நாளைக்   காட்சியளவிற்றாக    நில்லாது    அலர்   ஊரெங்கும்
பரவிற்றென்றலின் இது பிறர்கட்டோன்றிய பெருமைபற்றி வந்த மருட்கை.
 

3. சிறுமையாவது : அளவையின்  இகந்து   தவச்சிறிதாயினது  எனக்
கருதிக்கோடல். (சிறுமை - சிறுத்தல்.)
 

எ - டு :

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்

(குறள்-1233)
 

இது தன்கண் நிகழ்ந்த சிறுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன்

கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம

கடையிற் சிவந்த கருநெடுங்கட் பேதை

இடையிற் சிறியதொன் றில்

(பேரா - மேற்கோள்)
 

இது பிறர் கட்டோன்றிய சிறுமைபற்றி வந்த மருட்கை.
 

4. ஆக்கமாவது : ஒன்றினின்று ஆதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று
பிறிதொன்றாகத் திரிதலுமாம்.
 

எ - டு :

புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்த லுறுவது கண்டு

(குறள்-1259)
 

புலவி கலவியாகத் திரிந்த தென்றலின் இது  தன்கட்டோன்றிய ஆக்கம்
பற்றிப் பிறந்த மருட்கையாம்.
 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்

(குறள்-1120)
 

தனக்கு   மென்மையாயவை    தலைவிக்கு   வன்மையாயின   என்றலின்
பிறர்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவந்த மருட்கை.
இனிப் பேராசிரியர்,
 

"எருமை யன்ன கருங்கல் லிடைதோ

றானிற் பரக்கும் யானைய முன்பிற்

கானக நாடனை நீயோ பெரும

(புறம்-5)
 

என்றது.
 

நரிவெரூஉத்தலையார் சாபம்  நீங்கி  நல்லுடம்பு  பெற்றமையான்  தன்கண்
தோன்றிய  ஆக்கம்பற்றி  வியப்புப்  பிறந்ததென்பார்.  நல்லுடம்பு  பெற்ற
நிகழ்ச்சி  அச்செய்யுட்கண்  அமையாமையான்  அது  பொருந்துமாறில்லை
என்க.
 

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாங்கு

(நாலடி - 38)
 

என்பதனைப்      பிறபொருளாக்கம்பற்றிப்       பிறந்த     வியப்பிற்கு
எடுத்துக்காட்டுவார்    அவர்.      அஃது      இயற்கை     யாதலன்றி
ஆக்கமாகாமையறிக.
 

இனி   "மதிமை     சாலா    மருட்கை"   என்றமையான்   சிறியோர்
பெருஞ்செயல்புரிதலும் பெரியோர் சிறுசெயல்புரிதலும் வியப்பின் பாற்படுத்து
அடக்கிக் கொள்க.
 

எ - டு :

"கிண்கிணி களைந்த கால்" என்னும் புறப்பாட்டு

(புறம்-77) சிறியோன் பெருஞ்செயல் செய்ததாம்.

அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச்

சொல்லுஞ் சொற்கேட்டி சுடரிழாய்

(கலி-47)
 

என்பது    பெரியோன்    சிறுசெயல்   புரிந்ததாம்,   பிறவும்   இவ்வாறு
வருவனவற்றை ஓர்ந்து கொள்க.