சூ. 262 :

புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்

நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு

தகுமுறை நான்கே ஒன்றென மொழிப

(13)
 

க - து : 
 

‘மன்னிய  வினைய’ (மெய்-19)  எனப்பெறும் அகத்திணைப்பற்றி
நிகழும்     மெய்ப்பாடுகட்குச்    சிறந்துரிமை    பெற்றுவரும்
பொருள்களைத் தொகுத்துக்கூறத்   தொடங்கி, (அகவொழுக்கம்
களவு   கற்பென்னும்   இரு  கைகோளாக  நிகழுமென  மேல்
வகுத்துணர்த்தியமையன்றிக்,    களவின்    பயனும்    கற்பின்
தொடக்கமுமாகிய  வரைதலை  ஆண்டு  ஓரியலாக அமைத்துக்
கூறாமையான்), வரைவுமலிதல், வரைவு  கடாதல் பற்றிக்  கூறிய
கிளவிகளுக்குரிய உணர்வுகள்  விதந்து  கூறும் சிறப்புடையவாக
உள்ளமையான்,   அவற்றை   அழிவில்  கூட்டமாகிய கற்பிற்கு
அடிப்படையாகக் கொண்டு அகத்திணை பற்றிய  மெய்ப்பாட்டுப்
பொருள்களைக்,  களவிற்குரியவை,   அழிவில்  கூட்டத்திற்குக்
காரணமாகிய   வரைவிற்குரியவை,    அழிவில்   கூட்டமாகிய
கற்பிற்குரியவை என அவற்றை மூன்றுவகைப்படுத் ஓதுகின்றார்.
 

அவற்றுள், முதற்கண் களவிற்குரிய  பகுதிகளை  உணர்த்தத் தொடங்கி
ஒன்றியுயர்ந்த  பாலதாணையான்  ஒத்த கிழவனும்  கிழத்தியும்  எதிருற்றுக்
காணும்  காட்சியின்கண்  ஐயுற்றுநின்ற  தலைவன்  தலைவிமாட்டு நிகழும்
"கண்ணேயலமரல் இமைப்பே அச்சம்" (கள-4) என்னுமவற்றான் ஐயம் நீங்கி
மெய்தொட்டுப்பயிறல்  முதலாயவற்றை  நிகழ்த்தித்   தலைவியைக்  கூடும்
தெய்வப்   புணர்ச்சிக்கு  முன்னும்  பின்னும்  இருவர்  மாட்டும்  நிகழும்
உணர்வுகளையும் செயல்களையும், களவியலுள்
 

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ வெல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்கா டென்றிச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப,எனவும்

முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்

நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ

அந்நிலை யறிதல் தெளிவகப் படுத்தலென்று

இன்னவை நிகழும் என்மனார் புலவர்

(கள.10)
 

எனவும் கூறியவற்றானும், மெய்தொட்டுப்பயிறல்,  பொய்பாராட்டல் முதலிய
கிளவிகளானும்    புலப்படுத்திய     உணர்வுகளையும்    செயல்களையும்
தொன்னூலார்  மரபு  பற்றி  இருபத்து   நான்கு  பொருள்களாக  வகுத்து
அவற்றை ஆறு   கூறுகளாக்கி   ஓதுகின்றார்.   அவற்றுள்   இச்சூத்திரம்
முதலாங்கூறுபற்றி  வரும்  பொருள் புகுமுகம் புரிதல் முதலாய நான்குமாம்
என்கின்றது.
 

பொருள் : புகுமுகம் புரிதல்,  பொறிநுதல்வியர்த்தல், நகுநய மறைத்தல்
சிதைவு  பிறர்க்கின்மை  என்னும்  தகவாய   முறைமையுடைய   நான்கும்
முதற்கூறு என மொழிவர் ஆசிரியர்.
 

ஒடு எண்ணுப் பொருட்டாய் வந்தது. ஏகாரம் இசைநிறை.
 

1. புகுமுகம் புரிதலாவது :ஒருவர் ஒருவரை நோக்குதற்கண்  ஒருவர்
மற்றொருவர் நோக்கிற்கு உள்ளாதலை விரும்புதல்.
 

நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்

(கள-5)
 

என்றாராகலின்,    ஈண்டு    முகமென்றது   அந்நாட்டத்தினை   என்பது
தெளியப்படும். புரிதல் - விரும்புதல்.
 

எ - டு :

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில

(குறள்-1100)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக வரும்.
 

இது தலைவிக்கே  உரிய  பொருளெனக்  கூறுவர்  பேராசிரியர்.  அது
பொருந்துமாறில்லை.
 

கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்

திருநுதற் கில்லை யிடம்

(குறள்-1123)
 

என்பது தலைவன் நோக்கிற் றலைவி புகுந்தது.
 

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து

(குறள்-1127)
 

என்பது தலைவி நோக்கிற் றலைவன் புகுந்தது. பிறவும் சான்றோர் செய்யுள்
நோக்கி அறிந்து கொள்க.
 

2. பொறிநுதல் வியர்த்தலாவது :தலைவன் தன்னை  நோக்கிய வழி
அக்காதல்   வெம்மையான்   உட்கும்   நாணும்   ஓங்குதலின்   தலைவி
வியர்பொறித்த  நுதலினளாதல்.  தலைவற்கு   உட்குத்  தோன்றாதாதலின்
இஃது தலைவிக்கே உரிய பொருள் என  அறிக.  எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. இஃது மருட்கைக்கும் அச்சத்திற்கும் பொருளாக அமையும்.
 

"பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்

உறுவளி யாற்றச் சிறுவரை திறவென"

(அக-136)
 

என்பது கற்பிற்குறித்தாகலின் ஈண்டைக்கு ஏலாதென்க.
 

3. நகுநய மறைத்தலாவது :தலைவி தன்  காதலை  வெளிப்படுத்தும்
உள்ளுணர்வாற்றோன்றும்  முறுவலை   மறைத்தல்.   நயம்  -  விருப்பம்.
நயநகை  என்பது  முன்பின்னாக  மாறி  ஒருசொல்நீர்மைத்தாய்   நின்றது.
இதுவும் தலைமகட்கே உரியதாகும்.
 

எ - டு :

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

(குறள்-1274)
 

இது பெருமிதத்திற்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.
 

4. சிதைவு பிறர்க்கின்மையாவது :நகுநயம்    மறைத்த     வழியும்
தலைவனது   குறிப்பானும்  செயலானும்  கிளர்ந்தெழும்   காதலுணர்வான்
எய்தும்   உள்ளச்   சிதைவினைப்  புறத்தார்க்குப்   புலப்படா  வண்ணம்
தலைவி தன் நெஞ்சினை நிறுத்துதல். பிறர் என்றது  ஈண்டுத்  தலைவனும்
ஆயமுமாம்.
 

எ - டு :

கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்க லுறுவதொன் றுண்டு

(குறள்-1271)
 

எனத் தலைவன் கூறுதலான் தலைவி உளஞ்சிதைந்தவாறும்  அவளதை
மறைக்கலுற்றவாறும்  கண்டு  கொள்க. இஃது  இளிவரலுக்குப்  பொருளாக
அமையும்.
 

இவை   நான்கும்  முறையாக   அமைந்த  செய்யுளாகப்  பேராசிரியர்
காட்டும் மேற்கோள்.
 

யான்றற் காண்டொறும் தான்பெரிது மகிழாள்

வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி

மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த

நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை

நீயறிந் திலையால் நெஞ்சே

யானறிந்தேனது வாயாகுதலே என்பதாகும்.
 

இஃது உரைக்கேற்ப யாத்த பாடலாகும்.