சூ. 267 : | புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் |
| கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு |
| புலம்பிய நான்கே ஆறென மொழிப |
(18) |
க - து : | புறஞ்செயச் சிதைதல் முதலியவை ஆறாங்கூறு என்கின்றது. |
பொருள் :புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவு உரைத்தல் எனப் புலப்படுத்தப்பட்ட நான்கு பொருளும் ஆறாங் கூறென விளம்புவர் ஆசிரியர். |
இவை களவியலுட் கூறிய நோக்குவவெல்லாம் அவையே போறல் மறத்தல், மயக்கம் (கள-9) காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையில் மயங்கிக் கையறு பொழுதினும், (கள-17) நொந்து தெளிவொழிப்பினும், தமர்தற்காத்த காரண மருங்கினும், பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும், (கள-21) எனவரும் கிளவி முதலாயவற்றிற்குரியவாக நிகழும் மெய்பாட்டுப் பொருள்கள் என்பது விளங்கப் புலம்பிய நான்கே என்றார். புலம்பிய என்றது புலஞ்செய்த என்றவாறாம். சொல்லிய எனினும் ஒக்கும். புலம்பல் - சொல்லுதல், அறிவித்தல். |
1. புறஞ்செயச் சிதைதலாவது: செவிலியும் ஆயத்தாரும் செய்யும் ஒப்பனைகள் தலைவன் கண்டு பயனுறாது கழிதலைக் கருதி அவர்தாம் ஒப்பனை செய்யும்வழி உள்ளம் சிதைந்து வருந்துதல். இஃது அழுகைக்குப் பொருளாக வரும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |
2. புலம்பித் தோன்றலாவது: தலைவியின் நெஞ்சம் தலைவன் வழிச்சென்று இணைந்து நிற்றலான் பண்டுபோலக் கலந்து விளையாடாமல் ஆயத்தாரிடையே இருந்தும் தான்தனியள் போலக் காணப்படுதல். |
எ - டு : | இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும் |
| ஆர்கலி யாணர்த் தாயினும், தேர்கெழு |
| மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப் |
| புலம்பாகின்றே தோழி |
(நற்-38) |
எனவரும். |
இதுவும் அழுகைக்குப் பொருளாக அமையும். இளிவரல் என்பதற்கும் ஏற்கும். |
3. கலங்கி மொழிதலாவது : தலைவன் வரைபொருள் முதலியவை பற்றிப் பிரிந்தமையான் உற்ற நிறையழிதுயரம் காரணமாக மறை புலப்படாமாறு உளங்கலங்கிப் பேசுதல். |
எ - டு : | நக்கு நலனும் இழந்தாள் இவளென்னும் |
| தக்கவிர் போலும், இழந்திலேன் மன்னோ |
| மிக்கவென் நாணும் நலனுமென் உள்ளமும் |
| அக்கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன்று |
| உக்காண், இஃதோர் உம்புயிர்க் கூற்றாகச் |
| செக்கரம் புள்ளித் திகிரி அலவனொடியான் |
| தக்கது பன்மாண் நினைந்து |
(கலி-146) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கையறவுரைத்தலாவது : தனிமையுறுத்தும் தாங்காத் துயரான் தடுமாறும் நெஞ்சினளாய தலைவி தனது அச்சமும் நாணும் மடனும் இகந்து தானுற்ற அவலத்தைச் சுற்றமறியப் பேசுதல். |
எ - டு : | நினையுமென் உள்ளம்போல் நெடுங்கழி மலர்கூம்ப |
| இனையுமென் நெஞ்சம்போல் இனங்காப்பார் குழல்தோன்ற |
| சாயஎன் கிளவிபோல் செவ்வழியாழ் இசைநிற்பப் |
| போயவென் ஒளியேபோல் ஒருநிலையே பகல்மாயக் |
| காலன் போல்வந்த கலக்கத் தோடென்றலை |
| மாலையும் வந்தின்றினி |
(கலி-143) |
என வரும். |
இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். கலங்கி மொழிதலும் கையறவுரைத்தலும் அகனைந்திணைக்கண் விரவும் பெருந்திணைப் பகுதிகளாகும். |