சூ. 152 :

பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த

தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும்

அற்றமழி வுரைப்பினும் அற்றம் இல்லாக்

கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும்

சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்

அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை

அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்

பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி

இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்

வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும்

புறம்படு விளையாட்டுப் புல்லிய நுகர்ச்சியும்

சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்

மாணலம் தாவென வகுத்தற் கண்ணும்

பேணா ஒழுக்கம் நாணிய பொழுதினும்

சூள்வயின் திறத்தால் சோர்வுகண் டழியினும்

பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து

பெறுதகை யில்லாப் பிழைப்பினும், அவ்வழி

உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய

      

கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும்

உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின்

உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று

தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்

அருமைக் காலத்துப் பெருமை காட்டிய

எளிமைக் காலத்து இரக்கத் தானும்

பாணர் கூத்தர் விறலியர் என்றிவர்

பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்

காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்

பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய

மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்

வகைபட வந்த கிளவி யெல்லாம்

தோழிக் குரிய என்மனார் புலவர்

(9)
 

க - து :
 

கற்பின்கண் தோழிகூற்று வருமாறு கூறுகின்றது.
 

பொருள் : 1) பெறற்கரும் பெரும்பொருள் முடிந்த பின்வந்த தெறற்கரு
மரபின் சிறப்பின் கண்ணும் என்பது = பெறுதற்கரிய  திருமணக்கரணமாகிய
பெரும் பொருள் நிகழ்ந்து முற்றியபின்   தலைவனாற்றன்னிடத்தே போந்த
தெறுதற்கரிய வழக்கினையுடைய சிறப்பின்கண்ணும் என்றவாறு.
 

என்றது:    களவுக்காலத்துப்   பல்லாற்றானும்   தனக்கு   உதவியும்
தலைவியை ஆற்றுவித்தும்  செவிலிக்கு   அறத்தொடு   நின்றும்   தோழி
ஆற்றிய செயல்களைப் பாராட்டித் தலைவன் அவளைச் சிறப்பிக்குமிடத்துத்
தோழி கூற்று நிகழ்த்தும் என்றவாறு.
 

மணம்முடிந்த   நிலைமைக்கண்   அதற்குப்   பெரிதும்   துணைநின்ற
தோழியைத் தன் நன்றியுணர்வு தோன்றத்   தலைவன  பாராட்டுதல் முதல்
நிகழ்ச்சியாதலின் இது முதற்கண்  வைக்கப்பட்டது.   அவ்வழித்தோழி தன்
குற்றேவல் முறைமைக்கு இழுக்கின்றித்தன் செயல்களைச்   சிறிதாகக் கூறித்
தலைவனையும் தலைவியையும் சிறப்பித்துக்   கூறும்   என்க.  கரணத்தின்
சிறப்புத் தோன்றப் "பெறற்கரும்   பெரும்பொருள்"   என்றார்.   தெறுதல்
கனன்று நோக்குதலும் உரைத்தலுமாம்.  களவுக்   காலத்துச்    செவிலியும்
நற்றாயும் தெறுதற்குக்   காரணமாக   இருந்த   செயல்களே   கற்பின்கண்
மகிழ்தற்குரியவாக அமைதலின் "தெறற்கரு மரபின் சிறப்பு" என்றார்.
 

எ - டு :

அயிரை பரந்த அந்தண் பழனத்து

ஏந்தெழில் மலரத் தூம்புடைத் திரள்கால்

ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்

இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையிற் றோன்றியாம் நுமக்கு

அரியம் ஆகிய காலை

பெரிய நோன்றனிர் நோகோ யானே

(குறு-178)
 

எனவரும்.
 

2. அற்றம் அழிவுரைப்பினும் என்பது =  களவுக்   காலத்தைப் போலத்
தணந்துறையும் வருத்தம் நீங்கினமை கருதிக் கூறுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை

வீஇனிது கமழும் துறைவனை

நீஇனிது முயங்குமதி காத லோயே (ஐங்-148) எனவும்.

எரிமருள் வேங்கை இருந்த தோகை

இழையணி மடந்தையிற் றோ ன்றும் நாட

இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்

நல்மனை வதுவை அயரஇவள்

பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே

(ஐங்-294)
 
எனவும் வரும்.
 

3) அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக்  கடத்தினும் என்பது =
வரைந்து கொண்டமையான் தலைவியைப் பிரிதல் இல்லாத  கிழவோனாதல்
வேண்டுமென எண்ணி, வழிபட்டாள். அஃது  இனிது  முடிந்தமையின் அத்
தெய்வத்திற்கு இயற்றும் கடப்பாட்டின் கண்ணும் என்றவாறு.
 

அஃதாவது தலைவியும்    தலைவனும்   வரைந்து கொண்டு பிரிவின்றி
ஒருங்குறைதல் வேண்டிக் களவுக் காலத்துப் பரவி நின்ற தெய்வம் அதனை
முடித்தருளியமையின் அத்தெய்வத்திற்குப் புரியும் கடப்பாட்டின்கண் தோழி
கூற்று நிகழ்த்தும் என்றவாறு.
 

எ - டு :

நெஞ்சொடு மொழிகருத்து அஞ்சுவர நோக்கும்

தாயவள் தெறுவது தீர்க எமக்கெனச்

சிறந்த தெய்வத்து மறையுறை குன்றம்

மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே

பெற்றனம் யாமே மற்றதன் பயனே (நச்-மேற்)

எனவரும்.
 

நச்சினார்க்கினியர் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக்
கூறும் என்பார். அங்ஙனம் தோழி தலைமை செய்தொழுகுதல்  கற்பின்கண்
மரபன்மையின் ஒவ்வுமாறில்லை.  அதனான்   கிழவோட்சுட்டிய   என்னும்
பாடம் சிறவாதென்க.
 

4) சீருடைப் பெரும்பொருள்   வைத்தவழி   மறப்பினும்   என்பது =
கரணத்தின் அமைந்த சீர்த்தியினையுடைய இல்லறக் கிழமையைத் தலைவன்
தலைவியிடத்தே கொடுத்தவழித் தானும் அவளொடு உடன்   நிகழ்த்தாமல்
தலைவன் தன் கடமையை மறந்தொழுகுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற

மையல் நெஞ்சிற்கு எவ்வந் தீர

நினக்கு மருந்தாகிய யான்இனி

இவட்கு மருந்தன்மை நோமென் நெஞ்சே

(ஐங்-59)
 

இது மனைக்கண் வரவு      சுருங்கிய   தலைமகற்குப்   புறத்தொழுக்கம்
உளதாயவழித் தோழி கூறியது.
 

5) அடங்கா ஒழுக்கத்து   அவன்வயின்   அழிந்தோளை    அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் என்பது = அறநெறிக்கண் அடங்காததாகிய
புறத்தொழுக்கத்தை மேற்கொண்ட தலைவனிடத்து   உள்ளம்   வேறுபட்டு
வருந்திய    தலைவியைப்   பல்வேறு  கடமைகளையுடைய   ஆடவர்க்கு
அவ்வொழுக்கமும்       தவிர்த்தற்கியலாத    தொன்றாம்.   அது   குல மரபாகியடங்கும் என எடுத்துக்கூறித் தலைவியது  மனனழிவை   மாற்றுதற்
கண்ணும் என்றவாறு.
 

அடங்கக் காட்டுதல்  என்பதற்குத் தலைவனது   குறையைக்   காணாது
பொறுத்தாற்றி ஒழுகுதல் கற்புடை மகளிர் கடனாம்   என  எடுத்துக்காட்டி
எனினும் அமையும்.
 

எ - டு :

இதுமற் றெவனோ தோழி துணியிடை

இன்னர் என்னும் இன்னாக் கிளவி

இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்

உழவன் யாத்த குழவியின் அகலாது

பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்.

திருமனைப் பலகடம் பூண்ட

பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே

(குறு-181)
 

எனவரும்.
 

6) பிழைத்து வந்திருந்த  கிழவனை  நெருங்கி   இழைத்தாங்  காக்கிக்
கொடுத்தற் கண்ணும் என்பது =   புறத்தொழுக்கமாகிய  பிழையைப் புரிந்து
வந்து  மனைப்புறத்திருந்த தலைவனை மிகவும் இடித்துரைத்துப்  பின்னர்த
தலைவியை   இன்னுரை   கூறி   அவனை   அன்பிற்குரியனாக  ஆக்கிக்
கொடுத்தற் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு

அதுவே ஐயநின் மார்பே

அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே

(ஐங்-44)
 

இது தோழி தலைவனை இடித்துரைத்தது
 

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்

புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்

தண்டுறை யூரன் தெளிப்பவும்

உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்

(ஐங்-21)
 

இது தலைவிக்கு இன்னுரை கூறியது. பிறவும் வந்துழிக் கண்டு கொள்க.
 

7) வணங்கிய      மொழியான்   வணங்கற்    கண்ணும்   என்பது :
பணிந்தொழுகுதலைக்     காட்டும்   இலக்கணத்தையுடைய   சொற்களான்
வழிமொழிந்து வணங்குதலைச் செய்யுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

உண்டுறைப் பொய்கை வராஅல் இனமிரியும்

தண்டுறை யூர தகுவகொல் - ஒண்டொடியைப்

பாராய் மனைத்துறந் தச்சேரிச் செல்வதனை

ஊராண்மை யாக்கிக் கொளல்.

(ஐந்திணை-எழு-54)
 

8) புறம்படு     விளையாட்டுப்    புல்லிய    புகர்ச்சியும்   என்பது =
பரத்தையரொடு புறத்தே சென்று விளையாடும் விளையாட்டினைத் தலைவன்
பொருந்திய பிழையொழுக்கத்தின் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

காலை யெழுந்து கடுந்தேர்ப் பண்ணி

வாலிழை மகளிர் தழீஇய சென்ற

மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென

மறுவரும் சிறுவன் தாயே

தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே

(குறு-45)
 

இது  தலைவியின்  நிலை  கூறுவாளாய்க்  குறிப்பாற்றலைவன்   குறையை
உணர்த்தியது. பிறவும் சான்றோர் இலக்கியங்களுள்     கண்டு    கொள்க.
புகற்சி எனப்பாடங்கொண்டு அதற்கு  மகிழ்ந்தெனப்   பொருள்  கூறுவார்
நச்சினார்க்கினியர்.   தலைவனது  புறத்தொழுக்கினைத்  தோழி  மகிழ்ந்து
கூறுதல் புலனெறி வழக்காகாமையறிக.
 

9) சிறந்த புதல்வனைத் தேராது  புலம்பினும்   என்பது = இருவர்க்கும்
சிறந்தோனாகிய       புதல்வனைக்     கருதாமல்    (தலைவி   புலந்த
காரணத்தான்தலைவன்     தனிமையுறுதற்கண்ணும்   என்றவாறு.   எ-டு :
வந்துழிக்கண்டுகொள்க.
 

10) மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் என்பது =   தலைவியின்பால்
நீ கொண்ட மாட்சிமையுடைய நலத்தினை அவட்கு மீளத்தந்து செல்வாயாக
எனத் தலைவனை வேறுபடுத்துறைத்தற்கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

யாரை எலுவ? யாரே நீயெமக்கு

யாரையு மல்லை நொதும லாளனை

அனைத்தாற் கொண்கநம் மிடையே நினைப்பின்

கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்

வேந்தடு மயக்கத்து முரசதிர்ந் தன்ன

ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர்

அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்த்த

ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக்

கடல்கெழு மாந்தை யன்னஎம்

வேட்டனை யல்லையால் நலந்தந்து சென்மே

(நற்-395)
 

எனவரும்.
 

11) பேணா ஒழுக்கம் நாணிய   பொருளினும்   என்பது  =  தலைவன்
தலைவியைப் பேணாது ஒழுகும் ஒழுக்கத்தைத்   தலைவன் மாட்டு நாணிக்
கூறும் பொருண்மையிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

யாயா கியளே மாஅ யோளே

மடைமாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய்சா யினளே

பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்

கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும்

தண்ணந் துறைவன் கொடுமை

நம்முன் நாணிக் கரப்பா டும்மே

(குறு-9)
 

இது தலைமகள் நிலை கூறுவாளாய்த் தன்கருத்தைப் புலப்படுத்தியது.
 

12) சூள்வயின் திறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது =   தலைவன்
கூறும் சூளுரையின் திறத்தான் அதனைப் பேணாது ஒழுகும்   மறவி கண்டு
என்படுமோ எனத் தலைவி வருந்துமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

பகல்கொள் விளக்கொடு இராநா ளறியா

வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்னஇவள்

நலம்பெறு சுடர்நுதல் தேம்ப

எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே

(ஐங்-56)
 

13) பெரியோர் ஒழுக்கம்   பெரிதெனக்   கிளந்து  பெறுதகை யில்லாப்
பிழைப்பினும் என்பது   =   சால்புடையோரது   ஒழுக்கம்   பெருமைக்கு
உரியதாகும் என மரபுகூறி   அத்தகு சால்பானே   தலைவியைப்   பெறும்
தகவின்றித் தலைவன் பிழைத்தொழுகுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை

வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க

மீன்சினை யன்ன வெண்மணல் குவைஇ

காஞ்சி நிழல் தமர்வளம் பாடி

ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த

வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின்

தாழ்சினை யுறங்கும் தண்டுறை யூர!

விழையா உள்ளம் விழையு மாயினும்

என்றும், கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு

அறனும் பொருளும் வழாமை நாடி

தற்றக வுடைமை நோக்கி மற்றதன்

பின்னா கும்மே முன்னியது முடித்தல்

அனைய பெரியோர் ஒழுக்கம், அதனால்

அரிய பெரியோர்த் தெரியுங் காலை

நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன

பொய்யோடு மிடைந்தவை தோன்றின்

மெய்யாண் டுளதோஇவ் வுலகத் தானே.

(அக-286)
 

14) அவ்வழி உறுதகை யில்லாப் புலவியின்  மூழ்கிய   கிழவோள் பால்
நின்று கெடுத்தற்  கண்ணும்  என்பது  =   மேற்சொல்லியவாறு  தலைவன்
பிழைத்தொழுகியவழி அவனை அடையும்  தகைமையில்லாத புலவியின்கண்
மூழ்கி வருந்திய   தலைவியின்பால்   அணுகி   நின்று   அவள் ஊடலை
நீக்குமிடத்தும் என்றவாறு.
 

எ-டு :

‘ஒரூஉநீஎங்கூந்தல்’ என்னும் மருதக்கலியுள்
(87)
 
புலவியால் தலைவனை வெகுண்டுரைத்த தலைவியை நோக்கி
 
    

மான்நோக்கி! நீஅழ நீத்தவன் ஆனாது

நாணிலன் ஆயின் நலிதந்து அவன்வயின்

ஊடுதல் என்னோ வினி"
 

என உணர்த்தியவாறு காண்க.
 

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றான் நீள விடல்

(குறள்-1302)
 
என அறிவுறுத்து ஊடல் நீக்கியவாறு கண்டுகொள்க.
 

15) உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய
கிழவோன் பால்நின்று தான்வெகுண்டாக்கிய தகுதிக் கண்ணும்   என்பது =
தலைவியுற்ற ஊடல் தீரும் வகையான் உணர்த்தவும்  அதற்கு   உடன்பட்டு
வாராத ஊடலைத் தலைவி கொண்டுள்ள  விடத்து  உணர்த்தலை வேண்டி
நின்ற தலைவன் சார்பாகத் தோழி தலைவியை  வெகுண்டுரைத்து   அவன்
ஊடலைத் தணிவித்துத் தலைவன்   விரும்பியாங்கு   ஆக்கமுறச்   செய்த
தகவின்கண்ணும் என்றவாறு.
 

உள்ளம் வேறுபட்டார் இருவரை  அவர்கொண்ட மாறுபாட்டினை நீக்கி
ஒன்றுபடுத்தல் நடுவு நிற்பார் செயலாகலின்  அதனைத்  தகுதி   என்றார்.
தகுதி = நடுவுநிலைமை.
 

எ - டு :

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை

அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு

ஈர்ந்தண் எருமைச் சுவல்படுமுது போத்துத்

தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்

பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து

பரூஉக் கொடிப்பகன்றை சூடி மூதூர்ப்

போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்

தேர்தரவந்த தெரியிழை ஞெகிழ்தோள்

ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்

பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ

புலத்தல் ஓம்புமதி மனைகெழு மடந்தை

அதுபுலந் துறைதலை வல்லி யோரே

செய்யோள் நீங்கச் சிலபதம் கொழித்துத்

தாம்அட் டுண்டு தமிய ராகித்

தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப

     

வைகுநர் ஆகுதல் அறிந்தும்

அறியா ரம்ம அஃதுடலு மோரே

(அக-316)
 

எனவரும்.
 

16) அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்
தானும் என்பது = தலைவன் அடைதற்கு அருமையாகிய   களவுக்காலத்துத்
தம்மாட்டமைந்திருந்த பெருமையை உணர்த்திய தோழி அவன் அடைதற்கு
எண்மைத்தாகிய  கற்புக்காலத்து   நிலைமைக்கு    இரங்கிய    விடத்தும்
என்றவாறு.
 

எ - டு :

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றெனிர், இனியே

பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணி யதரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்.

ஐய அற்றால் அன்பின் பாலே

(குறு-196)
 

எனவரும்.
 

17) பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை
எதிரும் என்பதும் = பாணர் கூத்தர்    விறலியர்  என்னும்   இம்மூவரும்
தலைவன் பொருட்டுக்   குறையுறும்   வினையை   எதிர்   உறுமிடத்தும்
என்றவாறு.
 

எதிர்தல் = மாறுபடுதல் - ஏற்றுக்கோடல்  என்னும்   இரு  பொருளும்
இடத்திற்கேற்ப வருமாதலின் அவர்தாம் வாயில்   வேண்டி   வந்த   வழி
மறுத்தலும், நேர்தலுமாகத் தோழி கூற்று நிகழுமெனக் கொள்க.
 

எ - டு :

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை

களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க

உண்டுறை மகளிர் இரியக் குண்டுநீர்

வாளை பிறழும் ஊரற்கு நாளை

மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே

தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி

உடன்பட் டோராத் தாயரொடு ஒழிபுடன்

சொல்லலை கொல்லோ நீயே வல்லை

களிறுபெறு வல்சிப் பாணன் கையதை

வள்ளுயிர்த் தண்ணுமை போல

உள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே

(நற்-310)
 

எனவரும். இது விறலியிடம் கூறியது. ஏனையோர் மாட்டுக் கூறியது.
வந்துழிக் கண்டுகொள்க.
 

18) நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த  தன்மையிற் கண்ணின்று
பெயர்ப்பினும் என்பது = புறத்தொழுக்கங் காரணமாகத் தலைவியை நீங்கிய
தலைவனை நிகழாநின்ற மனையறத்தே ஊன்று  தலைச்செய்ய   வேண்டித்
தலைவியைக்  களவுக்கால  முதலாகப்  பாதுகாத்து  வந்த   தன்மையானே
கண்ணோடுதலின்றித்  தலைவனை   இடித்துரைத்துப்  பரத்தைமையினின்று
மீட்குமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை

வேலி வெருகினம் மாலை யுற்றென

புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு

இன்னாது இசைக்கும் அம்பலொடு

வாரல் வாழியர் ஐயஎம் தெருவே

(குறு-169)
 

என்றாங்கு வரும். பைதற் பிள்ளைக்  கிளையினைப்   பேடை   காத்தமை
போலத் தான்  தலைவியைக் காத்து   நிற்கின்றமையும்   வாரல்   வாழிய
என்றதனான்   கண்ணோட்டமின்றி   இடித்துரைத்தமையும்  வாழிய   ஐய
என்றமையான் மீட்கும் குறிப்புள்ளமையும் கண்டு கொள்க.
 

19) பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் என்பது =
ஓதல் முதலாய பொருள்பற்றித் தலைவன் பிரிந்து செல்லுங்கால் அவன்
முன்னர் நின்று கூறிய மரபொடு கூடிய மறுத்தலின்கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

"உண்கடன் வழிமொழிந்து"

என்னும் பாலைக் கலியுள்

(22)
 

‘அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச்

சுடர்காய் சுரம்போகும் நும்மையாம் எங்கண்

படர்கூ றநின்றதும் உண்டோ தொடர்கூரத்

துவ்வாமை வந்தக் கடை"
 

எனத் தன் குற்றேவல் முறைமை தப்பாது மறுத்தமை கண்டு கொள்க.
 

உளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி  யெல்லாம்   தோழிக் குரிய
என்மனார்    புலவர்   என்பது  =  மேற்கூறப்பட்ட  கிளவிகள்  உட்பட
அத்தகையனவாயும்    பிறவுமாக  வகைபட   வந்த   கிளவிகள்   யாவும்
கற்பின்கண் தோழி கூறுதற்குரியவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

கூறப்பெற்ற    கூற்றுக்கள்    ஒவ்வொன்றும்    சிலவாகப்    பிரிந்து
வரற்குரியவை  என்பது விளங்க  வகைபட வந்த  என்றார். அவற்றுள் சில
வருமாறு :
 

வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து

செலவயர்ந் தனையால் நீயே நன்றும்

நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்

முறுவல் காண்டலின் இனிதோ

இறுவரை நாடநீ இறந்து செய்பொருளே

(ஐங்-309)
 

இது பொருள்வயிற் பிரிவல் என்ற தலைவனை நோக்கிக் கூறியது.
 

மாமழை இடியூஉத் தளிசொரிந் தன்றே

வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே

யாமே நிற்றுறந் தமையலம்

ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே

(ஐங்-423)
 

இது தலைமகளாற்றாமையுறுமெனச் செலவழங்குவித்தது.
 

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

கல்பிறங் கத்தம் சென்றோர் கூறிய

பருவம் வாரா அளவை நெரிதரக்

கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த

வம்ப மாரியைக் கார்என மதித்தே

(குறு-66)
 

இது ஆற்றாத தலைமகளைப் பருவம் அன்று என வற்புறுத்தியது.
 

ஆமா சிலைக்கும் மணிவரை யாரிடை

ஏமாண் சிலையார்க் கினமா னிரிந்தோடும்

தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு

வாய்மாண்ட பல்லி படும்

(கைந்நிலை-18)
 

இது நிமித்தங்காட்டித் தலைவியிடத்துக் கூறியது.
 

இங்ஙனம்  பிறவாறு  வருவனவற்றை  எல்லாம்  இதன்கண்  அடக்கிக்
கொள்க.