சூ. 286 : | பெருமையும் சிறுமையும் சிறப்பிற் றீராக் |
| குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய |
(10) |
க - து : | உவம நிலைக்களங்களுக் காவதொரு முறைமை கூறுகின்றது. |
பொருள் :சிறப்பும், நலனும், காதலும், வலியும், கிழக்கிடு பொருளும் காரணமாக ஒரு பொருளை உவமிக்குங்கால் கூறப்பெறும் பெருமையும் சிறுமையும் உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை என்றதற்கேற்ப அவை சிறப்பிற்றீராத குறிப்பினவாய் வரும் முறைமையை உடையனவாகும். |
"சிறப்பிற் றீரா நெறிப்பா டுடைய" எனக் கூட்டுக. ஐவகைப் பண்பும் நிலைக்களமாக ஒருவன் உவமங் கூறுங்கால் சாலப் பெருமைப்படுத்தியும் சிறுமைப்படுத்தியும் கூறுதற்கு ஏது தன் உள்ளத்தின்கண் எழுங் குறிப்பேயாகலின் "குறிப்பின் வரூஉம்" என்றும் அங்ஙனம் வருவன சான்றோர் உளங்கொளத் தக்கவாறு அமைதல் வேண்டுதலின் "சிறப்பிற் றீரா நெறிப்பா டுடைய" என்றும் கூறினார். பெருமை, சிறுமை என்பன வடிவு குறித்தும் பண்பு குறித்தும் நின்றன. |
எ - டு : | நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் |
| ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை |
(பதிற்-14) |
என்புழி அவ் ஐந்தும் ஒருங்குபுணர்ந்த விடத்து அவ்விளக்கம் எல்லையற்ற பெருமைத்தாயினும் அவ்வுவமம் பொருளின் வண்மையும் வன்மையும் பற்றிய புகழொளியைக் குறித்து வந்தமைபின் சிறப்பிற்றீரா நெறிப்பாடுடைய தாயினமை அறியலாம். |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |
நிலையின் இழிந்தக் கடை |
(குறள்-964) |
என்புழி உவமம் மிக இழிந்த சிறுமைத்தாயினும் தலையின் நீங்கிய வழித் தீண்டற்கும் அருவருப்பைச் செய்யும் மயிர் தலையின் நீங்காதவிடத்து மிக்க மதிப்பொடு பேணப்படுவதைக் குறித்து நிற்றலின் சிறப்பிற்றீரா நெறிப்பாடுடையதாயிற்று. இவை பண்பு பற்றியன. |
அவாப்போ லகன்றதன் அல்குல் மேல் சான்றோர் |
உசாரப்போல உண்டே நுசுப்பு |
(பேரா-மேற்) |
இவற்றுள் உவமங்கள் கழியப் பெரிதும் சிறிதுமாகக் கூறியிருப்பினும் அவர் ஒரு பொருளைப்பற்றி நிகழுமிடத்து அஃது அதன் அளவிற்றாக நிற்கும். உசா மிகநுணுகிச் சென்று இறுதியாக ஒன்றைத் தேர்ந்து நிற்கும். ஆதலின் அக்குறிப்புக்களான் பொருள்களின் அளவைகள் புலப்படுதலின் அவை சிறப்புற்றீரா நெறிப்பாடுடையவாய்க் கொள்ளப்படும். இவ்வாறன்றி |
இந்திரனே போலும் இளஞ்சாத்தான் சாத்தற்கு |
மந்தரமே போன்றிலங்கும் மல்லாகம்-மந்தரத்துத் |
தாழருவி போன்றுளது தார்மாலை அம்மாலை |
ஏழுலகும் நாறு மிணர் |
[இளம்-மேற்] |
என்றாற் போல்வன ஓரேதுவுமின்றிப் பெருமைகள் இறப்பக் கூறப்பட்டமையான் நெறிப்பாடின்றி வழுப்பட வந்தனவாம். |
வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் |
எள்ளி இரிவதுபோ லெம்மருங்கும்-வள்ளற்கு |
மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை |
மேலாரும் ஏலார் விரைந்து |
[இளம்-மேற்] |
என்பது நெறிப்பாடின்றி இறப்ப இழிந்து வந்துவழுவினவாம். |