சூ. 295 :

பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன்

வழிமருங் கறியத் தோன்று மென்ப

(19)
 

க - து:

மேல் "பெருமையும்  சிறுமையும்  சிறப்பிற்  றீராக்  குறிப்பின்
வரூஉம் நெறிப்பா  டுடைய" என்றார். அங்ஙனம் பெருமையும்
சிறுமையும்   பற்றிக்     கூறிய   வழி    எய்தும்    பயன்
இதுவெனக் கூறுகின்றது.
 

பொருள் :தன்மையானும்   அளவானும்   பெருமையும்   சிறுமையும்
பற்றிவரும்  உவமத்தின்பால் எண்வகை   மெய்ப்பாடுகளின்   வழிமருங்கு
புலப்பாடாகத் தோன்றும் என்று கூறுவர் புலவர்.
 

என்றது   பெருமையும்  சிறுமையும்  பற்றி  வரும்  உவமம் பொருளை
விளக்குதலோடு   எண்வகை   மெய்ப்பாடுகளையும்   புலப்படச்  செய்யும்
என்றவாறு.
 

"நாலிரண் டாகும் பாலுமா  ருண்டே" என்னும்  சூத்திரம்   எண்வகைச்
சுவைகளும் உவமந்தோன்றுதற்கு நிலைக்களமாம் எனக்கூறிற்று. இச்சூத்திரம்
பெருமையும்   சிறுமையும்   பற்றிவரும்     உவமங்களான்    எண்வகை
மெய்ப்பாடுகள் புலனாகும் என்று   கூறுகின்றது. பெருமையும்   சிறுமையும்
பற்றி   உவமந்தோன்றுதற்கு    நிலைக்களம்    சிறப்பு,   நலன் முதலிய
ஐந்துமேயாகும்.
 

எ -டு:

ஞாயிறு திங்கள் நாள்கோள் கனையழல்

ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
 

எனச்   ‘சிறப்பு’    என்பதனை     நிலைக்களமாகக்   கொண்டு  பிறந்த
இவ்வுவமத்தான் இசையும்  கொடையும்   காரணமாக   வந்த  ‘பெருமிதம்’
என்னும் மெய்ப்பாடு புலப்படாதலைக் காண்க.
 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 

நிலையின் இழிந்தக் கடை 

(குறள்-964)
 

எனக்    கிழக்கிடுபொருள்   நிலைக்களனாகப்   பிறந்த  இவ்வுவமத்தான்
பிணிபற்றிய  இளிவரல் என்னும்  மெய்ப்பாடு   புலப்பாடாதலைக்   கண்டு
கொள்க.
 

அவாப்போ லகன்றத னல்குல்மேற் சான்றோர் 

உசாப்போல வுண்டே நுசுப்பு
  

எனக் காதல் நிலைக்களமாக வந்த இவ்வுவமங்களான் பெருமை பற்றி வந்த
மருட்கை   என்னும்   மெய்ப்பாடும், காமம்பற்றி  வந்த  உவகை என்னும்
மெய்ப்பாடும் புலப்படாதலைக் காணலாம்.
 

"செருப்பிடைச் சிறுபரல் அன்னன்"
 

எனக் கிழக்கிடுபொருள் நிலைக்களமாக  வந்த இவ்வுவமத்தான் தறுகண்மை
பற்றி வந்த பெருமிதம் என்னும் மெய்ப்பாடு புலனாவதைக் காண்க.
 

கடவு ளஞ்சி வானத் திழைத்த 

தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட 

எழூஉ நிவந்தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் 

(பதிற்-31)
 

நலனும்  வலியும்  நிலைக்களமாக  வந்த இவ்வுவமத்தான் பெருமை பற்றிய
மருட்கை என்னும் மெய்ப்பாடு புலனாதலையறியலாம்.
 

இங்ஙனம்  ஏனை  மெய்ப்பாடுகள்  எல்லாம்  புலப்பாடாக  வருதலைச்
சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க.