சூ. 99 :பெருமையும் உரனும் ஆடூஉ மேன.
(7)
 

க - து :

‘ஒத்த      கிழவனும்     கிழத்தியும்  காண்ப’ என மேற்கூறிய
அன்பொடு    புணர்ந்த      ஐந்திணைக்குரிய    தலைமக்கள்
சுட்டிக்     கூறப்பெறாமல்     நாடக    வழக்கும்   உலகியல்
வழக்கும்    பொருந்தச்     செய்யப்      பெறும்   புலனெறி
வழக்கிற்குரியவராகலின்        அவர்தம்         இயல்புகளை
இலக்கண    வகையான்       வரையறை    செய்து    கூறத்
தொடங்கி      இச்சூத்திரத்தான்       அகனைந்திணைக்குரிய
தலைமகனது பொதுவிலக்கணம் ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :பெருமையும்     உரனுமாகிய     இயல்புகள்  தலைமகன்
கண்ணவாம் எனக் கூறுவர் புலவர்.
 

பெருமை - உரன்,      என்பவை     அவற்றிற்குரிய  பண்புகளையும்
ஆற்றல்களையும் குறித்து நின்றன. பெருமைக்குரியவாவன : கல்வி, தறுகண்,
இசைமை, கொடை, ஆராய்ச்சி, ஒப்புரவு,   நடுவுநிலை,    கண்ணோட்டம்
முதலியவாம். உரனுக்குரியவாவன : அஞ்சாமை, அறிவு,   திண்மை,  நிறை,
கடைப்பிடி, துணிவு, ஊராண்மை முதலியவாம்.