சூ. 215 :

பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே

காப்புக் கைம்மிகுதல் உண்மை யான

(19)
 

க - து :

‘அறத்தொடு  நிற்குங்  காலத்   தன்றி  அறத்தியல்   மரபிலள்
தோழி’  (பொரு-11)  என்றதனான்   தோழியை  வினவாவழியும்
தலைவி   அறத்தொடு   நிற்றற்குரிய   ஏதுவும்  இடமும்பற்றிக்
கூறுகின்றது.
 

பொருள் :  புறத்தே  சொல்லற்கியலாவாறு   இற்செறிக்கப்   பெற்றுச்
செவிலி    முதலானோராற்   காவல்   செய்யப்படும்  நிலை   ஒரோவழி
மிகுதலும் உளவாதலின் அவ்வழித்  தோழி வினவா வழியும் தலைவி தனது
களவொழுக்கத்தைத்   தாயர்க்குப்  புலப்படுத்துமாறு  கூறுதலும்  புலனெறி
வழக்கின் கண் நீக்கும் நிலைமைத்தன்று.
 

இங்ஙனம் நாணுக்  கருதாது கூறற்கு அமைதியும்,  இது  தலைவிக்குரிய
மரபு  என்பதும்  மேல்வரும்  சூத்திரத்தான்  புலனாம். பொருள்  என்றது
களவினைப்   புலப்படுத்தி   நிற்றலையாம்.   இதனை  "உற்றுழி  யல்லது
சொல்லல்   இன்மையின்  அப்பொருள்  வேட்கைக்  கிழவியின்  உணர்ப"
எனவும்  "அறக்கழி  வுடையன  பொருட்பயம்  படவரின்"  எனவும் "மிக்க
பொருளினுட்  பொருள்வகை  புணர்க்க"  எனவும்  கூறிய  நூற்பாக்களான்
தெளிக.
 

‘பொருள்  என  மொழிதலும்’  என்பதற்குத்  தலைவன்  பொருள்வயிற்
பிரிதல்  வேண்டுமெனக்  கூறலும்  என   இளம்பூரணரும், எமர்  வரைவு
நேராமைக்குக் காரணம். பரிசுப்பொருள் வேண்டி’ என நச்சினார்க்கினியரும்
பொருள் கூறுவர். "காப்புக்  கைம்மிகுதல்" என்னும்  ஏது அவர்கருத்துக்குப்
பொருந்தாமையறிக. தலைவி  அறத்தொடு நிற்றற்குரிய விதிகூறும் சூத்திரம்
வேறின்மையானும் இதற்குப்பொருள் இதுவே என்பது தெளியப்படும்.
 

‘’மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்’’

(கள-21)

என்றது  தோழியிடத்து  அருமறை  உயிர்த்தலாகத்  தலைவிக்குரிய கிளவி
கூற்று. இஃது தாயர்க்கு அறத்தொடு நிற்குமாறு கூறிற்றென அறிக.
 

எ - டு :

விழுந்தண் மாரிப் பெருந்தண் சாரல்

கூதிர்க் கூதளத்து அலரி நாறும்

மாதர் வண்டின் நயவரு தீங்குரல்

மணநாறு சிலம்பில் அசுணம் ஓர்க்கும்

உயர்வரை நாடற் குரைத்தல் ஒன்றோ

துயர்மருங் கறிய அன்னைக் கிந்நோய்

தணியுமாறு இதுவென உரைத்தல் ஒன்றோ

செய்யா யாகலின் கொடியை தோழி

மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த

செயலை யந்தளிர் என்னஎன்

மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே

(நற்-244)
 

இதன்கண்  அன்னைக்கு  அறத்தொடு நிற்றல்  வேண்டுமெனத் தலைவி
தன் கருத்தினைப் புலப்படுத்தியவாறு காண்க.